ஆளிவிதைகள் - பக்கவாதம், மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது

ஆளி விதையில் அதிக நன்மைகள் இருக்கின்றன. தினமும் ஒரு ஸ்பூன் ஆளி விதைகள் அல்லது 5 கிராம் ஆளி விதைகள் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் குறைய வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது.
ஆளி விதைகள் நம்முடைய உடலுக்குத் தேவையான பல சத்துகளை உள்ளடக்கிய பெரும் மருந்தாகவும், உடல் எடை குறைப்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவக்கூடிய அருமருந்தாகவும் பலராலும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பல உணவு நிபுணர்களும் உடலின் பல பிரச்னைகளுக்கும், தேவையான ஊட்டச்சத்திற்கும் பரிந்துரைக்கக்கூடிய உணவுப் பொருளில் ஆளி விதைகளுக்கும் நிச்சயம் இடம் உண்டு. இப்படி பல பயன்களை உடலுக்குக் கொடுக்கக்கூடிய ஆளி விதைகள் பற்றி அறிந்தவர்கள், தங்கள் உணவில் அதையும் தவறாது சேர்த்துக் கொள்கின்றனர்.
நன்மைகள்
* ஆளி விதைகள் கரையக்கூடிய நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும். இதனால் ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ரால் (எல்.டி.எல்) குறையும். மேலும் இதில் உள்ள உயர் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ரத்தத்தில் உள்ள விரும்பத்தகாத கொழுப்புகளை (ட்ரைகிளிசரைடுகள்) குறைக்க உதவுகின்றன.
* உடலில் ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துகிறது. கூடவே உயர் ரத்தக் கொதிப்பையும் கட்டுப்படுத்துகிறது என்று கூறப்படுகிறது.
* ஆளி விதையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் பசியை அடக்கி, நீண்ட நேரம் நிறைவாக உணர உதவுகிறது. இதன்மூலம் நேரடியாக உடல் எடை குறையாது என்றாலும், மறைமுகமாக உடல் எடையைக் குறைப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
* பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது. ஆளிவிதைகள் கண் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
* ஆளி விதைகள் பெண்களின் ஆரோக்கியத்திற்குச் சிறந்தவை. மாதவிடாய் பிரச்னைகளை சரி செய்கிறது. ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் மாதவிடாய் தொடர்பான அசௌகரியத்தை சமாளிக்கவும் பெண்களுக்குக் கைக்கொடுக்கிறது. கேசப் பிரச்னை உள்ளவர்களுக்கு, தினமும் இந்த ஆளி விதையைப் பயன்படுத்தும் போது முடி கொட்டுதல் பிரச்னை சரிசெய்யப்படுகிறது.
எப்படி பயன்படுத்துவது?
ஆளி விதைகளை பொடிக்காமல், அரைக்காமல் முழுதாக அப்படியே சாப்பிடும் பட்சத்தில் அவற்றை முழுமையாக மென்று சாப்பிட முடியாது. அப்படி முழுமையாக அரைத்து சாப்பிடவில்லை என்றால் ஆளி விதையின் பலன்கள் கிடைக்காது என்பதால் பெரும்பாலும், அரைத்தோ, ஊறவைத்தோதான் உண்ண வேண்டும்.
பொடியாக அரைத்து எடுத்து வைத்துக்கொண்ட ஆளிவிதை பொடியை பூரி, சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
இந்தப் பொடியை தயிர், சாலட், ஓட்ஸ் கஞ்சி, மில்க் ஷேக்கிலும் ஒரு ஸ்பூன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
வறுத்து பொடி செய்த ஆளி விதை பொடியை 2 டீஸ்பூன் அளவு எடுத்து அதை 100 கிராம் வெறும் சோற்றில் பிசைந்து சாப்பிட்டுவர கொலஸ்ரால் கட்டுப்படும்.
ஆளி விதைகளை தனியாக சாப்பிட்டால் அதில் இருக்கும் நார்சத்து உடலில் சேராது. ஆளிவிதைகளை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, நீங்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
சூடான நீரில் ஆளிவிதைகள் சேர்த்து, அத்துடன் எலுமிச்சை சாறு பிழிந்து, குடிக்கலாம்.
உடல் எடை குறைக்கும் பயணத்தில், ஆளி விதைகள் அதிக பங்கு வகிக்கிறது. மேலும் இதில் இருக்கும் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 பேட்டி ஆசிட், கரையும் நார்சத்து, லிக்ணம், புரோட்டீன் ஆகியவை கொலஸ்ட்ராலை கட்டுபடுத்தும். மேலும் இதில் இருக்கும் புரத சத்து மற்றும் அமினோ ஆசிட் ரத்த் அணுக்களை சீரமைக்க உதவுகிறது மேலும் சதைகள் வளர உதவுகிறது.
பயன்படுத்துவதற்கு ரொம்பவே எளிதான, அதே நேரம் உடலுக்குத் தேவையான நார்சத்துகளுடன், பல சத்துகளும் ஆளி விதையில் நிறைந்திருக்கிறது. ஆனாலும் மருத்துவரின் ஆலோசனையின் பெயரில், மிகச் சிறிய அளவே தின உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் மனதில் வைக்க வேண்டும்.