வெயிலுக்கேற்ற பழங்களின் மருத்துவ குணங்கள்!

வெயில் காலத்தில் பழங்களை சாறு எடுத்துப் பருகி தாகம் தீர்த்துக் கொள்கிறோம். அப்படிச் சாப்பிடும் பழங்களுக்கு மேலும் பல மருத்துவ குணங்களும் உண்டு. அவை பற்றி தெரிந்து கொள்வோமா?
விளாம்பழத்தின் சதைப்பற்றை மசித்து, தேவைக்கேற்ப வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் நா வறட்சி தீரும். பித்தம் குறையும்.
உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்)யை இரண்டு மூன்று ஸ்பூன் எடுத்து, நீரில் போட்டு ஒரு கொதி விட்டு, நன்கு அரைத்து சாறாகக் குடித்தால் தாகம் தணியும், உடல் சூடு குறையும், மலச்சிக்கலும் தீரும்.
தக்காளிப் பழத்துடன் 'பூரா' சர்க்கரை கலந்து ஜூஸ் செய்து குடித்தால் கோடையில் உண்டாகும் தாகம் தீரும். ரத்தம் விருத்தியாகும்.
மதிய நேரத்தில் எலுமிச்சம்பழ சாற்றினை குடித்து வந்தால், வெயிலால் ஏற்படும் சோர்வு நீங்கும். பித்தம் தீரும். களைப்பு நீங்கி, உடனடி தெம்பு கிடைக்கும்.

தர்பூசணி பழத்தை தோல் நீக்கி பனைவெல்லம் சேர்த்து ஜூஸ் செய்து குடித்தால் தாகம் தீரும். பிரிட்ஜில் வைக்காமல் அவ்வப்போது தயாரித்து குடிப்பது சிறந்தது. வெயில் காலத்தில் கிடைக்கும் தர்பூசணி பழத்தின் சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வர அதிலுள்ள வைட்டமின் சி, தாது உப்புக்களும், நார்ச்சத்தும் கிடைக்கும்.
தினமும் இரவில் பப்பாளி பழ துண்டுகள் சாப்பிட்டு வந்தால், வெயிலால் ஏற்படும் சூடு குறைந்து, மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
நாவல் பழத்தை தினமும் 10 12 சாப்பிட்டு வர, வெயிலால் ஏற்படும் அஜீரணம் வராது. எளிதில் உணவும் ஜீரணமாகும்.
கோடை காலத்தில் ஆப்பிள் சாப்பிடுவதால் இரைப்பை முதல் மலக்குடல் வரையுள்ள பிரச்சனைகள் தீர்ந்து விடும்.
தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் வெயிலால் ஏற்படும் தொற்று நோய்கள் நெருங்காது. ரத்தம் சுத்தமாகும்.
கிர்ணி பழத்தை சுத்தம் செய்து பால், கருப்பட்டி சேர்த்து ஜூஸ் செய்து சாப்பிட்டால், வெயிலால் ஏற்படும் சோர்வு நீங்கி, உடல் குளிர்ச்சியாகும்.
பழங்களின் அரசனான மாம்பழம் சாப்பிட்டு, பசும்பால் குடித்தால், நரம்பு தளர்ச்சி நீங்கும். மேனி அழகு கூடும். ரத்த ஓட்டம் சீராகும்.