அது என்ன சட் கிளினிக்?

அது என்ன சட் கிளினிக்?

மு.வீராசாமி

கண்மருத்துவ உதவியாளர் (ஓய்வு)

குழந்தைகள் கிளினிக், பல் கிளினிக், கண் கிளினிக் எல்லாம் நமக்குத் தெரியும். ஆனால் அது என்ன சட் கிளினிக்?  குடிபோதையில் மூழ்கி இருப்பவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அதுபோல் உங்கள் குழந்தைகள் எந்நேரமும் திறன்பேசியில் மூழ்கி இருக்கிறார்களா? படிப்பு கடுமையாக பாதிக்கிறதா? கூப்பிட்டால் காதில் விழவில்லையா? கவனம் முழுவதும் திறன்பேசியிலேயே இருக்கிறதா? அப்படி என்றால் இந்தக் கட்டுரை உங்களுக்கானதுதான். வாருங்கள் தொடர்ந்து.

சில ஆண்டுகளுக்கு முன் வார இதழ் ஒன்று டிஜிட்டல் கருவி பயன்பாட்டு பிரச்னை குறித்து கள ஆய்வு நடத்தியது. பலரும் டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாக இருப்பதை அந்த ஆய்வு உறுதிப்படுத்தியது. டிஜிட்டல் பயன்பாட்டு பிரச்னை ( Digital Disorder)  என்பது தற்போது புதிதாக ஏற்பட்டுள்ள பிரச்னை. இது குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.

ஏற்கனவே சீனா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் இணைய அடிமை என்பதை தீவிர பிரச்னையாக உணர்ந்துள்ளன. குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என்று பலரும் இன்று இணைய விளையாட்டில் ஈடுபட்டு நேரத்தையும் வாழ்க்கையையும் இழந்து வருகிறார்கள். இணைய விளையாட்டுக்கு அடிமையாவது உடல்நலத்திற்கு தீங்கானது என்று 2019-லேயே உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேலும் இது சூதாட்ட அடிமைக்கு இணையானது என்றும் எச்சரித்திருக்கிறது.

இணைய சூதாட்டங்களினாலும், வீடியோ விளையாட்டினாலும், செல்பி படம் எடுக்கும்போதும், டிக்டாக் போன்றவைகளினாலும் ஏற்படும் மரணங்கள் குறித்த செய்திகளை அவ்வப்போது கேள்விப்படுகிறோம். பலரும் ஒருவித மாய இணைய வாழ்க்கையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். தொடர்ச்சியாக சமூகவலைதளங்களைப் பார்த்துப் பார்த்து பலரும் தம் சாதனைகளை பிறரது சாதனைகளுடன் ஒப்பிட்டு விரக்தியும், ஏமாற்றமும் அடைந்து அதிருப்தியால் சோர்வடைகிறார்கள். தொடர்ச்சியான எதிர்மறை எண்ணம் அவர்களுடைய சிந்தனையாற்றலை பாதித்து மூளையின் செயல்திறனை சிதைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

டிஜிட்டல் பிரச்னை ஒரு தீவிர பிரச்னையாக இன்னும் இந்தியாவில் உணரப்படாதது கவலை அளிப்பதாகவும் புதிய வாழ்க்கைமுறை மாற்ற நோயாக வேகமாக அதிகரித்து வருவதாகவும் உளவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

டிஜிட்டல் கருவிகளுக்கு அடிமையாகும் குழந்தைகளுக்கு மூர்க்கத்தனமும், பிடிவாதமும் அதிகமாகி தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படலாம். சிறு சிறு ஏமாற்றங்களைக்கூடத் தாங்க முடியாமல் பின்னாளில் வக்கிரபுத்திக்குக் கூட வழிவகுத்து அவர்களின் வாழ்க்கைத்தரம் வெகுவாக பாதிக்கப்படலாம். இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளதுதான் முதாலாவது ‘சட் கிளினிக்’ ( Service for Healthy use of Technology ). எப்படி மதுவின் போதைப் பழக்கத்தில் இருந்து தீர்வு காண்பதற்காக “போதை மறுவாழ்வு மையங்கள்” இருக்கின்றனவோ, அதுபோன்றதுதான் டிஜிட்டல் பயன்பாட்டு போதை நீக்க நிலையமான இந்த ‘சட் கிளினிக்’. 

டிஜிட்டல் பிரச்னையை எப்படி கண்டுபிடிப்பது? 

இந்த பிரச்னை ஏற்படுவதற்கு முக்கியக் காரணமே வேகமான அகன்ற அலைவரிசை இணைய சேவைகளும், மலிவான இணைய கட்டணங்களும்தான். பலரும் காலையில் விழிப்பதே செல்போனில்தான். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு இந்தியாவில்தான் காலையில் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு காலை வணக்கம் சொல்லி இணையத் தொடர்பு போக்குவரத்தை நெரிசலாக்குவதாக சொல்கிறார்கள்.

படபடப்பு, தூக்கமின்மை, முக்கிய வேலைகளை புறக்கணித்தல், குடும்பத்திலும் நண்பர்களிடத்திலும் நேருக்கு நேர் முகம் கொடுத்து பேசுவதை தவிர்ப்பது போன்ற பிரச்னை ஒருவருக்கு இருந்தால் அவர் டிஜிட்டல் பயன்பாட்டு பிரச்னையால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்துகொண்டு கவனமாக இருக்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் நம்மைச் சுற்றி நடக்கும் பலநிகழ்வுகளைப் பார்த்து நாம் இவற்றை எல்லாம் தவற விடுகிறோமோ என்று பயத்தினால் சோர்வடைவது ‘போமோவாம்’ ( fear of missing out- fomo). செல்போன் மணி அடிக்காதபோதும் அழைப்பதுபோன்ற உணர்வு இருந்தால் அது ‘மறைமுக அழைப்பு மணி’ குறைபாடாம். கோயிலுக்கு வெளியே செருப்பினை கழற்றிவிட்டு உள்ளே போய் சாமி கும்பிடும்போது, கழற்றிப்போட்ட இடத்திலே செருப்பு பத்திரமாக இருக்குமா என்ற நினைப்புதான் பலருக்கும் இருக்கும். அதனைப் போன்று எந்த வேலை பார்த்துக் கொண்டு இருந்தாலும் சிலர் போனையே நினைத்துக்கொண்டு யாரும் அழைத்திருக்கிறார்களா என்று அடிக்கடி எடுத்து எடுத்துப் பார்ப்பதுண்டு. “இதனைப் படிக்கும் ஒவ்வொருவரும் இந்த சிக்கல் நமக்கு இருக்கிறதா” என்று பார்த்துக்கொள்வது நலம்.

திடீரென உங்களுடைய செல்போன் ஒருநாள் வேலை செய்யாமல் போகலாம் அல்லது நெட்வொர்க் இல்லாமல் போயிருந்திருக்கலாம். அப்போது ஏற்பட்டு இருக்குமே – யாரும் இல்லாத நடுக்காட்டில் தத்தளிப்பது போன்ற ஒருவித பதட்டமும் சோர்வும்- அதுதான் ‘நோமோபோபியா’. இளைஞர்கள் என்றில்லாமல் பலரும் தம் பயண அனுபவங்களையும் கொண்டாட்டங்களையும் முகநூலில் பதிவேற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இதைப்பார்த்து நாமும் இதுபோன்று மகிழ்ச்சியாக இல்லையே என்று வருந்தி சோர்வடைவது ‘முகநூல் சோர்வு’.

முன்பெல்லாம் நாம் நிறைய செய்திகளை நினைவில் வைத்திருப்போம். எந்த செய்தியையும் நம்மால் நினைவு கூறவும் முடியும். ஆனால் தற்போது “கூகுளில் ஒரு சொடுக்கில் எதை வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம்” என்ற மனப்போக்குக்கு நாம் பழக்கப்பட்டுவிட்டதால்  சாதாரண செய்திகளைகூட நினைவில் வைத்துக் கொள்ளாதது ‘கூகுள்விளைவாம்’. எதற்கெடுத்தாலும் உடனே ‘கூகுள்’ பண்ணிப்பாரு என்பது வழக்கமாயிற்று.

உடல்நலக்குறைவின்போது மருத்துவரிடம் செல்லாமல் அது குறித்த செய்திகளை இணையத்தில் தேடித் தேடிப் படித்து அதில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து பிரச்னைகளும் தமக்கும் இருப்பதாக நினைந்து வருந்தி சோர்வடைவது ‘சைபர்காண்ட்ரியா’ .

உறவுகளோடு கைகோர்ப்போம்

 வானொலியில் ஒருமுறை கேட்ட செய்தி சிந்திப்பதாக இருந்தது. தொழிற்நுட்பம் நம்மை இணைக்கவேண்டும். செல்போனின் நோக்கமும் அதுதான். ஆனால் இன்று அது நம்மை பிரித்துவிட்டது. பெற்றோர்களை பிள்ளைகளிடமிருந்து பிரித்துவிட்டது. ஒரு வீட்டுக்குள்ளேயே ஆளுக்கொரு போனுடன் தனித்தனியாகத்தான் இருக்கும் சூழல் நிலவுகிறது.

ஒருமுறை பள்ளிமாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இன்றைய பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு என்ன காரணம் என்று கேட்டபோது, பலரும் ‘செல்போன்’ என்று பதிலளித்தார்கள். அப்படியானால் அவர்களுக்குத் தெரிகிறது. இப்போதைய தேவையெல்லாம் அவர்களிடையே முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்தான் இருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் நலமாக இருக்க வேண்டும் என்றால் சின்ன சின்ன அணுகுமுறைகளை மேற்கொள்வது பயனளிக்கும். நம்மால் செல்போனை இனி பயன்படுத்தாமலோ, அணைத்து வைக்கவோ அல்லது இணையத் தொடர்பில்லாமலோ இருக்க முடியும் என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் அதே சமயம் குறைந்தது படுக்கை அறைக்குள் எடுத்துச் செல்லாமல் இருக்கலாம். வண்டி ஓட்டும்போதோ சாப்பிடும்போதோ பயன்படுத்தாமல் இருக்க முடியும். கூட்ட அரங்கினுள் கொண்டு செல்லாமல் இருக்கலாம்.

செல்போன் ஒரு தகவல் தொடர்பு சாதனம் என்பதை முதலில் உணர்ந்தாலே போதும். உடற்பயிற்சி செய்வதன் மூலமும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதன் மூலமும், பிறருடன் முகம் கொடுத்து பேசுவதன் மூலமும், உறவுகளோடு கைகோர்ப்பதன் மூலமும் மின்னணு பிரச்னையில் இருந்து விடுபடமுடியும். சட்  கிளினிக்குகளின் தேவை இல்லாமலும் போகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com