

சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வாடகைக்கு வீடு தேடுவது என்பது இமயமலையில் ஏறுவதை விடக் கடினமான காரியம். "வீடு நல்லா இருந்தா வாடகை அதிகம், வாடகை கம்மியா இருந்தா அட்வான்ஸ் பத்து மாசம் கேட்குறாங்க" என்று புலம்பாத ஆட்களே இல்லை. அதேசமயம், வீட்டு உரிமையாளர்களுக்கும் சரியான வாடகைதாரர் கிடைப்பார்களா, வீட்டைப் பாழாக்காமல் இருப்பார்களா என்ற பயம் இருந்துகொண்டே இருக்கும்.
இந்த இரண்டு தரப்புக்குமே ஒரு நற்செய்தியாகவும், அதே சமயம் ஒரு எச்சரிக்கையாகவும் வந்திருக்கிறது இந்தியாவின் புதிய வாடகை ஒப்பந்தச் சட்டம் 2025. பொருளாதார நிபுணர்கள் அலசி ஆராய்ந்து சொல்லும் இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்களை நாம் பார்ப்போம்.
இனி 10 மாச அட்வான்ஸ் எல்லாம் செல்லாது!
வாடகைதாரர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய நிம்மதி இதுதான். இதுவரை சென்னை போன்ற நகரங்களில் 10 மாத வாடகையை முன்பணமாக (Advance) கேட்பது எழுதப்படாத விதியாக இருந்தது. ஆனால், புதிய சட்டப்படி, குடியிருப்பு வீடுகளுக்கு அதிகபட்சம் 2 மாத வாடகை மட்டுமே முன்பணமாகப் பெற முடியும். இதுவே கடை அல்லது வணிகக் கட்டிடமாக இருந்தால் 6 மாத வாடகை வாங்கலாம். மீறினால் அது சட்டவிரோதம்.
வெறும் பத்திரம் போதாது, டிஜிட்டல் பதிவு மஸ்ட்!
முன்பெல்லாம் ஒரு 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து போட்டால் வேலை முடிந்தது. ஆனால் இனிமேல் அப்படி இல்லை. ஒப்பந்தம் போட்ட இரண்டு மாதங்களுக்குள் அதை அரசாங்கப் பதிவுத்றையில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஆதார் கார்டு வைத்து ஆன்லைனிலேயே 'டிஜிட்டல் ஸ்டாம்பிங்' செய்ய வேண்டும். இதனால் போலி ஆவணங்கள், கையெழுத்து மோசடிகள் முற்றிலும் தடுக்கப்படும். பதிவு செய்யத் தவறினால் 5000 ரூபாய் வரை அபராதம் கட்ட வேண்டியிருக்கும்.
வாடகை உயர்வு மற்றும் ரிப்பேர் செலவுகள்!
"திடீர்னு அடுத்த மாசம் வாடகையை ஏத்துறேன்" என்று இனி ஓனர்கள் சொல்ல முடியாது. ஒப்பந்தம் போட்டு 12 மாசம் முடிந்த பிறகுதான் வாடகையை உயர்த்த முடியும். அதற்கும் 90 நாட்களுக்கு முன்பே எழுத்துபூர்வமாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.
அதேபோல, வீட்டில் பைப் ஒழுகினாலோ, எலக்ட்ரிக் வேலை இருந்தாலோ, ஓனரிடம் சொல்லி 30 நாட்களுக்குள் அவர் சரிசெய்யவில்லை என்றால், நீங்களே சரிசெய்துவிட்டு, அந்தச் செலவை அடுத்த மாத வாடகையில் கழித்துக்கொள்ளலாம். இது வாடகைதாரர்களுக்குக் கிடைத்த பெரிய உரிமை.
திடீர் வெளியேற்றம் கிடையாது!
ஓனருக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்பதற்காகவோ, அல்லது வேறு ஒருவருக்குக் கூடுதல் வாடகைக்கு விட நினைத்தோ உங்களைத் திடீரென காலி செய்யச் சொல்ல முடியாது. வாடகை செலுத்தாதது, வீட்டைச் சேதப்படுத்தியது போன்ற வலுவான காரணங்கள் இருந்தால் மட்டுமே, தீர்ப்பாயத்தின் அனுமதியோடு வெளியேற்ற முடியும். அப்படியே பிரச்சனை வந்தாலும், கோர்ட் படியேறி வருடக் கணக்கில் அலையத் தேவையில்லை; சிறப்புத் தீர்ப்பாயம் 60 நாட்களுக்குள் வழக்கை முடித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும்.
இந்த 2025 சட்டம் வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் என இருவருக்கும் ஒரு தெளிவான பாதையை வகுத்துக் கொடுத்திருக்கிறது. இது வாடகை முறையை நவீனமாக்குவது மட்டுமல்லாமல், தேவையற்ற சண்டைகளையும், நீதிமன்ற அலைச்சலையும் குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை. வீடு வாடகைக்கு விடுவதற்கு முன்போ அல்லது எடுப்பதற்கு முன்போ இந்த விதிமுறைகளைத் தெரிந்துகொள்வது புத்திசாலித்தனம்.