வீடு சிறக்க வேண்டும் என கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது, உணர்வுகளைப் புரிந்துகொள்வது, தக்க சமயத்தில் குறிப்பறிந்து ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வது போன்றவை முக்கியமான குணங்களாகும். அதுபோல் இருந்தால் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி கிடைக்கும். குழந்தைகளும் அதனைப் பார்த்து வளருவார்கள். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இப்பதிவில் காண்போம்!
பிடித்ததை செய்யுங்கள்: அவரவர் துணைக்கு என்ன பிடிக்கும் என்பதை குறிப்பறிந்து செய்வது நல்லது. அப்படிச் செய்யும்பொழுது ஒருவருக்கு ஒருவர் மரியாதை ஏற்படும். அந்த மரியாதையே அன்பை ஏற்படுத்தும். அந்த அன்புதான் எல்லாவிதமான முன்னேற்றத்துக்கும் உரைகல்லாக விளங்கும். இல்லறம் நல்லறமாக இவை போதாதா என்ன? இதனைப் பார்த்து வளரும் குழந்தைகள் தாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பக்குவமாகப் புரிந்து கொள்வார்கள்தானே! ஆதலால் துணைக்குப் பிடிக்காததை செய்யாமல் இருப்பது சிறந்த அறம்.
பொறுமை: ஒருவர் கோபமாக இருந்தால், இன்னொருவர் தணிந்துப் போக வேண்டியது மிக மிக அவசியம். பதிலுக்கு பதில் பேசினால் சண்டைதான் வளரும். குடும்ப வாழ்வில் நிம்மதி இருக்காது. விட்டுக்கொடுத்துப் பாருங்கள். பேசிய வார்த்தைகளை காதில் கேட்டு நிதானமாக இருக்கும்போது குற்றம், குறைகளை பொறுமையாக சொல்லிப் பாருங்கள். உங்கள் மேல் மரியாதை ஏற்படும். அதை விடுத்து அப்போதைக்கு அப்பொழுது பதில் அளித்தால் எந்த செயலிலும் நிறைவு வளராது. அதற்கு பதிலாக தர்க்கம்தான் வளரும்.
வேலையில் உதவி: வீட்டு வேலைகளில் ஆண்களும் பங்கு எடுத்துக் கொள்ளலாம். கணவரின் பிசினஸ், அலுவலக வேலைகளில் முடிந்த அளவு எப்படி எல்லாம் உதவ முடியுமோ அப்படி எல்லாம் உதவி புரியலாம். இதனால் இருவருக்கும் மனநிலையில் ஒரு சந்தோஷம் நிலவும். மேலும், வேலைகளை பங்கிட்டுப் பகிர்ந்து இருவரும் சேர்ந்து செய்வதால் எந்த வேலையையும் சீக்கிரமாக, சுலபமாக முடிக்க முடியும். அதனால் இருவருக்கும் நிறைய நேரம் கிடைக்கும். அப்பொழுது வெளியில் செல்லலாம். சிறிது நேரம் அமர்ந்து பேசலாம். குழந்தைகளோடு நேரத்தை செலவிடலாம். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களுடன் நேரத்தை செலவிடலாம். அவர்களும் மன நிம்மதி அடைவார்கள். தோட்டப் பணிகள் செய்யலாம். இப்படி ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். இதனால் இல்லறம் நல்லறமாகும்.
பேச்சைக் கேட்பது: ஒருவர் பேசிக்கொண்டே இருப்பதை மற்றொருவர் எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணாமல் இருவர் பேசுவதையும் இருவரும் கேட்க வேண்டும். மேலும், டிவி பார்ப்பதில் ஒருவர் பார்ப்பதை மற்றொருவர் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று நிர்பந்திக்காமல் அவரவருக்குப் பிடித்ததைப் பார்ப்பதற்கு உரிமை கொடுக்க வேண்டும். அதைப்போல் ஆண்கள் எப்பொழுதும் அரசியல், விவாத மேடை, ஷேர் மார்க்கெட் என்று அதை மட்டும் பார்க்காமல் பெண்மணிகளுக்கும் சிறிது சுதந்திரம் கொடுத்து அவர்கள் விரும்புவதையும் பார்க்கச் செய்ய வேண்டும். இதனால் இல்லறம் சிறக்கும். பெண்மணிகளும் சீரியலில் மட்டும் மூழ்கி விடாமல் மற்ற விஷயங்களையும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்ட வேண்டும்.
பரிசு: மேலும், பிறந்த நாள், கல்யாண நாள், பண்டிகை தினங்கள் போன்றவற்றிற்கு பரிசுகளைக் கொடுத்து வாழ்த்திக் கொள்ளலாம். ஒருவரை ஒருவர் மனம் திறந்து அவரவர் செய்யும் செயல்களைப் பாராட்டி மகிழலாம். கடிதத்தில் எழுதிக் கொடுத்து படிக்கச் சொல்லலாம். இதனால் மனது லேசாகும், பாரம் குறையும். மன அழுத்தம் ஏற்படாது. பிரஷர் ஏறாது. அப்பொழுது இல்லறம் நல்லறம் ஆகும்.
மன்னியுங்கள்; மன்னிக்கப்படுவீர்கள்!
யார் தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்கத் தயங்காமல் இருக்க வேண்டும். அதேபோல், குற்றம் குறைகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். எவ்வளவு பிரச்னை இருந்தாலும் காலையில் எழுந்ததும் புன்முறுவலுடன் குட் மார்னிங் சொல்லி விடுங்கள். அப்புறம் பாருங்களேன் இல்லறம் நல்லறம்தான்.
இந்த ஆறு விஷயங்களை கையாண்டால் எப்பொழுதுமே இல்லறம் நல்லறம் ஆகும். செய்வோம்; சிறப்படைவோம்!