ஓர‘கத்தி’களிடையே ஒற்றுமை!

ஓர‘கத்தி’களிடையே ஒற்றுமை!
Published on

ல குடும்பங்களில் திருமணம் ஆகும் சகோதரர்கள் இராம லட்சுமணர்கள் போல இருப்பார்கள். ஆனால், வருகின்ற மனைவிகள் சீதா, ஊர்மிளா போல இருப்பதில்லை. அது சீதைகளின் மீது தப்பா, ராமர்களின் தப்பா என்பதைவிட திருமணம் அண்ணன், தம்பி உறவுகளைப் பிரித்து விடுகிறது என்பதுதான் உண்மை.

அவரவர்களுக்குக் குடும்பம். குழந்தை என்றான பிறகு ஏராளமான பிரச்னைகள் ‘என் புருஷன் பெரிய ஆபீசர்!' 'என் வீட்டுக்காரர்தான் உங்களுக்கெல்லாம் சம்பாரிச்சுக் கொட்டணுமா!' இப்படிப் பேச்சுக்கள். கிராமங்களில் சகோதரச் சண்டை, பாகப் பிரிவினை என ஏக தடபுடல்தான்.

மேலைநாடுகளில் ஒவ்வொருவருக்கும் திருமணம் ஆனவுடனேயே தனியாகக் குடும்பம் அமைத்துக் கொடுத்து விடுகிறார்கள். ஆனால், நம்முடைய நாடு தாயின் அன்பின் அடிப்படையில் கட்டப்படும் இல்லறங்களைக் கொண்ட நாடு. அவ்வளவு எளிதாக உறவுகளைப் பிரிய முடிவதில்லை. மிகுந்த மனக் கசப்புக்கள் ஏற்பட்ட பிறகே குடும்பங்கள் பிரிகின்றன.

சகோதரர்களின் மனைவிமார்களிடம் பிரச்னைகள் முதலில் சமையல் கட்டில்தான் எழும்பும். ஒருவரே அதிகம் வேலை செய்வதும், மற்றவர் கண்டும் காணாமலும் இருப்பதும் பிரச்னைகளை விசிறும். அதிலும் படித்த மருமகள் வேலைக்குப் போனால் முழுமையாக அவளால் வீட்டுப் பணிகளில் ஈடுபட முடியாது.

காலமெல்லாம் அடுப்படியில் முதல் மருமகள் உழைத்து, மைத்துனரின் குழந்தைகளை. வளர்த்து, கஷ்டப்பட்டு. கடைசியில் அலட்சியப்படுத்தப்படும்போது அவள் விழித்துக் கொள்கிறாள். பிறகு பிரச்னைகள்தான்.

ஓரக்கத்திகளின் பிரச்னைகளுக்கு பெரும்பாலும் மாமியார் காரணமாவதுண்டு. சீர் வரிசைகளோ, படிப்போ, சம்பாதிப்பதோ ஒருவருக்கொருவர் மாறும்போது அதைப் பிடித்துக்கொள்கிறார் மாமியார். ஒருவரின் முன்பே இன்னொருவரை குறைவாக விமர்சிப்பார்.  இதனால் கடைசியில் தனக்குத்தான் கஷ்டம் என்பதை அவர் உணருவதில்லை. சின்னச் சின்ன இந்த விஷயங்களே நாளை பெரிதாகப் போய் தான் பெற்ற பிள்ளைகளே பிரிந்து போவார்கள் என்பதை அவர் உணருவதில்லை.

நான்கைந்து திருமணமான சகோதரர்கள் வாழும் இல்லத்தில் சில அடிப்படை விஷயங்களை கொள்கையாகவே கொள்ளலாம்.

1. ஒவ்வொருவர் ஒவ்வொரு படிப்பு, உத்தியோகம் என இருக்கலாம். அதனால், உசத்தி, தாழ்த்தி என்பது கிடையாது எனத் தெரிந்து கொள்ள வேண்டும்.

2. ஓரகத்தியின் குழந்தை முதலில் கவனித்தால் தன்னுடைய குழந்தையை முதலில் அவள் கவனிப்பாள் எனக் கொள்ளலாம்.

3. கணவன் மனைவி வெளியில் சென்று எது வாங்கி வந்தாலும் மற்றவர்களுக்கும் சொல்லலாம். குடும்பத்தில் மற்றவர்கள் அதை மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டும். ‘இவளுக்கு என்ன இப்ப பட்டுப் புடைவை!- என முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டால் அடுத்த முறை ஏதேனும் வாங்கும்போது, மறைக்கத் தோன்றும், இங்கிருந்து ஆரம்பித்து நாளடைவில் விரிசல் பெரிசாகும்.

4. சமையலறையில் இந்த இந்த வேலை இவர்களுடையது என பகிர்ந்து கொள்ளலாம். உடல் நலம் சரியில்லை என்னும்போது, 'வேணுமின்னே வேஷம் போட்ரு' என மறைமுகமாகப் பேசுவதைத் தவிருங்கள். அவள் வேஷமே போட்டாலும், உங்களுடைய அன்பான உபசரிப்பால் அவள் அடுத்த முறை அந்த மாதிரி செய்ய மாட்டாள்.

5. குழந்தைகளின் சண்டைகளை கண்டு கொள்ளாமல் இருந்துவிட வேண்டும். குழந்தைகள் நாளை சேர்ந்துவிடுவார்கள். ஆனால், உங்களுக்குள் ஏற்படும் கசப்பை மாற்றவே முடியாது.

6. சின்னச்சின்ன பரிசுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளலாம். ஓரகத்தியின் திருமண நாளில் நீங்கள் தரும் சிறிய சென்ட் பாட்டிலால் உங்களுக்குள் உறவு எப்படி மணக்கிறது என்று பாருங்கள்!

7. ஓரகத்தியின் பிறந்த வீட்டினர் வரும்போது. அவளை அவர்களுடன் பேசவிட்டு, நீங்கள் வேலைகளைப் பாருங்கள்.

8. இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களில் ஒருவருக் கொருவர் பகிர்ந்து கொள்வதால் வாழ்க்கையே எப்படி சந்தோஷமாக மாறுகிறது என்று பாருங்கள்.

9. கூடியவரை பண விஷயத்தை சகோதரர்களிடமே விட்டுவிட்டு நீங்கள் ஒதுங்கி விடுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com