"Matrix": நம்‌ வாழ்க்கை ஒரு பொய் வலையா? கல்வியின் உண்மையான மதிப்பு என்ன?

Matrix
Matrix
Published on

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் உண்மையில்லை; இது ஒரு நாடக மேடை. நாம் அனைவரும் ஒரு பெரிய வீடியோ கேமிற்குள், யாரோ ஒருவரால் இயக்கப்படும் பொம்மைகளாக (Simulation) இருக்கிறோம் என்ற ஒரு கோட்பாட்டை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். எலான் மஸ்க் போன்ற பெரிய தொழில்நுட்ப வல்லுநர்கள் கூட, நாம் ஒரு சிமுலேஷனில் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளில் நமது தொழில்நுட்ப வளர்ச்சி அபாரமானது. இல்லாத ஒரு விஷயத்தை இருப்பது போலவும், இருப்பதை இல்லாதது போலவும் நம்மால் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்க முடிகிறது. ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) கண்ணாடியை மாட்டிக்கொண்டு, நம்மால் ஒரு கற்பனை உலகிற்குள் வாழ முடிகிறது.

Simulation Theory: இன்றே இப்படி என்றால், இன்னும் 3000 அல்லது 30,000 ஆண்டுகள் கழித்துத் தொழில்நுட்பம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஒருவேளை, எதிர்கால மனிதர்களோ அல்லது ஏலியன்களோ மிக சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, "கடந்த காலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? பேரழிவுகளை எப்படிச் சந்தித்தார்கள்?" என்பதைப் படித்துத் தெரிந்துகொள்வதற்காக, ஒரு வீடியோ கேம் போல இந்த உலகத்தை உருவாக்கி, நம்மை அதில் வாழ வைத்திருக்கலாம். இதுதான் 'சிமுலேஷன் கோட்பாடு'.

Matrix: இந்த சிமுலேஷன் உலகம் 'கோடிங்' (Coding) எனப்படும் கணினி விதிகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள்தான் 'மேட்ரிக்ஸ்' (Matrix) என்று அழைக்கப்படுகிறது. ஆனால், நம்மில் சிலர் இந்தக் கோட்பாட்டைத் தவறாகப் புரிந்துகொண்டு, நம் சமூகத்தில் உள்ள விதிகளையும், அமைப்புகளையும் இந்த மேட்ரிக்ஸ் உடன் ஒப்பிடுகிறார்கள்.

அவர்கள், "எல்லோரும் ஏன் பள்ளிக்குச் செல்ல வேண்டும்? ஏன் கல்லூரிக்குப் போக வேண்டும்? ஏன் வேலை செய்ய வேண்டும்? ஆட்டு மந்தைகளைப் போல ஏன் எல்லோரும் ஒரே பாதையைப் பின்பற்ற வேண்டும்?" என்று கேட்கிறார்கள். அவர்கள் கல்வியை ஒரு தேவையற்ற கட்டுப்பாடு என்றும், உடைக்கப்பட வேண்டிய 'மேட்ரிக்ஸ்' என்றும் தவறாகச் சித்திரிக்கிறார்கள். இதனால் குழப்பமடையும் பலர், படிப்பதே வீண் என்று நினைக்கத் தொடங்குகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பாசரா சரஸ்வதி கோயில்: கல்வி, கலையில் உச்சம் தொட வைக்கும் மஞ்சள் பிரசாதம்!
Matrix

படிப்புதான் முக்கியத்துவம்: உண்மையில், 'சிமுலேஷன்' என்ற ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்க வைப்பதே கல்விதான். கல்வியறிவு இல்லாத ஒருவரிடம் இதைப் பற்றிப் பேசினால், அது அவருக்குப் புரியாது. ஒரு விஷயத்தை ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்கும் விமர்சன ரீதியான சிந்தனையை நமக்குக் கொடுப்பதே படிப்புதான்.

நாம் படிக்கும் முறை, அதாவது நமது 'கல்வி அமைப்பு' வேண்டுமானால் சில குறைகளுடன், பழையதாக இருக்கலாம்; அதை நாம் காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும். ஆனால், 'கல்வி' என்பது வேறு, அது ஒருபோதும் பயனற்றது ஆகாது. கல்வி என்பது நமது மூளைக்கு நாம் கொடுக்கும் ஒரு உடற்பயிற்சி போன்றது; அது நமது சிந்தனைத் திறனைப் பல மடங்கு பலப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
சித்தர்களின் ஜீவ சமாதிகள் (5) : சாகாக் கல்வி!
Matrix

ஒருவேளை, நாம் உண்மையிலேயே ஒரு 'மேட்ரிக்ஸ்' சிமுலேஷனில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று வைத்துக்கொண்டாலும், அந்தக் கட்டுப்பாடுகளை உணர்ந்து, அதிலிருந்து வெளியேற அல்லது அதை உடைக்க நமக்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது கல்வி மட்டுமே. 

அறிவும், தொழில்நுட்பமும் தான் நம்மைக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கும். எனவே, கல்வி என்பது நம்மைக் கட்டிப்போடும் சங்கிலி அல்ல; அது நம்மை விடுவிக்கும் உண்மையான திறவுகோல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com