எப்போதும் நம்மிடம் இல்லாதவற்றை எண்ணியே சோர்வடைந்து உட்கார்ந்துவிடுகிறோம். ஆனால், ஏன் இருப்பவற்றை எண்ணி நன்றி செலுத்துவது இல்லை?
சிலர் எப்போதும் கவலையிலேயே இருப்பார்கள். அதற்கான காரணம் என்னவென்று கேட்டால், என்னிடம் அது இல்லை இது இல்லை என்று குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஒருவேளை அவர்களுக்கு அது கிடைத்தாலும், மீண்டும் அவர்களிடம் இல்லாத வேறொன்றைப் பற்றி கவலை அடைவார்கள். ஆகமொத்தம், எவ்வளவுதான் கிடைத்தாலும் என்னத்தான் கிடைத்தாலும், எதோ ஒன்று இல்லை என்று எப்போதும் கவலையிலேயேதான் இருப்பார்கள்.
'நன்றியுணர்வுடன் இருங்கள்' என்பது ஒரு சிறிய விஷயம்தானே என்று கேட்கலாம். கேட்டாலும், இதனை நல்முறையுல் கடைபிடித்தால், உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கை மற்றும் மன ஆரோக்கியத்தில் மிகப்பெரிய நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதே உண்மை. நம்மிடம் இல்லாதவற்றைப் பற்றிய குறைகளையும் கவலைகளையும் தவிர்த்து, நம்மிடம் இருப்பவற்றின் மதிப்பை உணர்ந்து போற்றுவதே நன்றியுணர்வு ஆகும்.
நன்றியுணர்வைப் பயிற்சி செய்வது மனதளவில் மட்டுமல்லாமல், உடலளவிலும் அறிவியல் பூர்வமான நன்மைகளைக் கொண்டுள்ளது.
மன அழுத்தக் குறைவு: நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கும்போது, நம் மூளை நேர்மறை உணர்ச்சிகளைத் தூண்டும் டோபமைன் (Dopamine) போன்ற வேதிப்பொருட்களை வெளியிடுகிறது. இது மனச்சோர்வு (Depression) மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை அமைதியாக வைத்திருக்க உதவுகிறது.
நம் வாழ்வில் உள்ள மற்றவர்களுக்காக நாம் நன்றி தெரிவிக்கும்போது, அது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதுடன், உங்களுக்கும் அவர்களுக்குமான உறவையும் நம்பிக்கையையும் பலப்படுத்துகிறது.
நன்றியுணர்வுடன் இருப்பது கவலைகளை நீக்குவதால், பல ஆய்வுகளின்படி, நன்றியுணர்வுடன் இருப்பவர்கள் ஆழமான, தரமான உறக்கத்தைப் பெறுவது கண்டறியப்பட்டுள்ளது.
உங்களின் சிறிய வெற்றிகள் மற்றும் நீங்கள் பெற்ற ஆதரவுகளுக்காக நன்றி செலுத்தும்போது, உங்களை நீங்கள் நேர்மறையாகப் பார்க்கிறீர்கள். இது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.
நன்றியுணர்வைப் பயிற்சி செய்யும் எளிய வழிகள்:
நன்றியுணர்வு என்பது ஒரு திடீர் உணர்ச்சி அல்ல, அது ஒரு பயிற்சி ஆகும். இதை உங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க சில எளிய வழிகள்:
தினமும் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன், இன்று உங்களுக்கு மகிழ்ச்சி அளித்த அல்லது நீங்கள் நன்றியுள்ளவராக இருக்கும் குறைந்தது மூன்று விஷயங்களை எழுதுங்கள். அவை பெரிய வெற்றியாக இருக்க வேண்டியதில்லை; ஒரு சூடான தேநீர், ஒரு நல்ல நட்பு, அல்லது ஆரோக்கியமான உடல்நிலை போன்றவை போதுமானது.
நன்றி சொல்லும் பழக்கம்:
உங்களுக்கு உதவியவர்களுக்கோ அல்லது உங்கள் மீது அக்கறை காட்டுபவர்களுக்கோ உண்மையாகவும் மனப்பூர்வமாகவும் நன்றி சொல்லப் பழகுங்கள். ஒரு மெசேஜ் மூலமாகவோ அல்லது நேரில் சொல்லுவதன் மூலமாகவோ உங்கள் நன்றியை வெளிப்படுத்துங்கள்.
எதிர்மறை எண்ணங்களை நேர்மறையாக மாற்றுதல்:
ஏதேனும் ஒரு சவால் வரும்போது, 'நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி, இந்தக் கஷ்டத்தை என்னால் சமாளிக்கக் கூடிய ஆற்றல் என்னிடம் இருக்கிறது' என்று நினைத்து, எதிர்மறையான சிந்தனையை நன்றியுள்ள சிந்தனையாக மாற்றுங்கள்.
காலையில் எழுந்தவுடன் அல்லது உணவு உண்ணும் முன் ஒரு கணம் நிறுத்தி, உங்களுடைய உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகச் சில விநாடிகள் நன்றி செலுத்துங்கள்.
நன்றியுணர்வுடன் இருப்பது என்பது எல்லாமே சரியாக இருக்கிறது என்று அர்த்தமல்ல; மாறாக, சரியாக இல்லாத விஷயங்களுக்கு மத்தியிலும் நல்லவற்றைக் காணும் மனப் பக்குவத்தை அளிக்கிறது. இது உங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் லென்ஸை மாற்றி, உங்களுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் நிரந்தரமாக அளிக்கும்.