

நம்மைச் சுற்றி ஏராளமான இன்பங்கள் இருந்தாலும், நாம் அவற்றை அனுபவிக்க தவறிவிடுகிறோம். நாம் இனிமை, இன்பம் என்ற இரண்டு விஷயங்களை கவனத்தில் கொண்டு அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
உங்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒருவர் உங்களிடம் வருகிறார். உங்கள் மனதை எந்த வார்த்தைகள் காயப்படுத்துமோ, அதைத் தேர்ந்தெடுத்து அந்த சொற்களை உங்கள் மீது பிரயோகிக்கிறார்.
உங்களை காயப்படுத்த அந்த சொற்களை நீங்கள் அனுமதிக்கின்ற போது, உங்கள் மனம் புண்படுகிறது. என்னை இப்படி அவமானப்படுத்திவிட்டாரே! என வேதனையால் உங்கள் மனம் அவதிப்பட்டு ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்கிறீர்கள்.
உங்களை புண்படுத்தி வேதனைப்படுத்துவதுதான் வந்தவரின் நோக்கம். நீங்களும் வந்தவரின் நோக்கம் நிறைவேறும் விதமாக புண்பட்டு வேதனைப் படுகின்றபோது, உங்களுடைய ஆரோக்கியமும் கெட்டுவிடுகிறது .
உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளை நிராகரிப்பதுபோல, உங்கள் மனதிற்கு பிடிக்காத அவர் பேசிய சொற்களை நீங்கள் நிராகரித்து இருந்தால் உங்கள் மனம் வேதனையும் அடைந்திருக்காது; ஆரோக்கியமும் கெட்டு இருக்காது.
எந்த ஒரு சொல்லாக இருந்தாலும் அல்லது சம்பவமாக இருந்தாலும் நாம் அனுமதித்தால்தான் அது நம்மை பாதிக்க முடியும் நாம் அனுமதிக்க வில்லை என்றால் அது நம்மை பாதிக்காது.
உலகப்புகழ்பெற்ற விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். ஆராய்ச்சிக் கூடத்திற்கென பல லட்சம் டாலர் மதிப்புள்ள ஒரு கட்டடத்தை, சொந்தமா அவர் கட்டியிருந்தார். ஒரு நாள் திடீரென்று அந்தக் கட்டடம் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிவிட்டது. அந்தச் செய்தி அவரிடம் தெரிவிக்கப்பட்டது. 'கட்டிடம் முழுவதும் எரிந்து சாம்பல் ஆகிவிட்டதா? என்று மட்டும்தான் அவர் கேட்டார். எந்தவிதமான அதிர்ச்சியும் அவர் அடையவில்லை.
மனைவியை அழைத்தார். நடந்ததைச் சொன்னார், "அழிந்துபோன கட்டிடத்தின் பெரிய சாம்பல்மேட்டை நீ பார்த்தது இல்லை அல்லவா? வா, பார்க்கலாம்" என்று மனைவியையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டார்.
எவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அதற்காகக் கவலைப்பட்டுப் பயனில்லை என்கிற முடிவுக்கு வந்தார். தீயினால் நாசமாகிவிட்ட கட்டிடத்தின் அருகே அவருடைய மகன் கவலையுடன் நின்று கொண்டிருந்தான். அவனிடம் அவர் சொன்னார்.
"இதைப்பற்றிக் கவலைப்பட்டு நேரத்தை வீணாக்காதே. இதே இடத்தில் மீண்டும் கட்டிடத்தைக் கட்டி, நின்றுபோன வேலைகளை எப்படித் தொடர்வது என்று யோசி" என்றார்.
ஆகவே, நீங்கள் நிகழ்ச்சிகளை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்களுடைய மனம் அமைதி பெறுகிறது. மன அமைதியே உங்களுடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. அதை உங்களால் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.