
சமூகத்தில் ஒரு பெண் மதிக்கப்படுவது முதலில் அவளின் அழகாலா அல்லது திறமையினாலா என்பது குறித்த விவாதங்கள் பெருமளவில் இன்றுவரை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
திருமணங்கள் முதல் பொதுமேடைகள் வரை பெண்ணின் அழகுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது என்பது பலரின் கருத்தாக உள்ளது. ஆனால், தோற்றம், நிறம், உயரம் என்பதெல்லாம் நமது முன்னோர்களின் மரபணுக்கள் வழியாக நமக்கு கிடைப்பது. இவற்றை மாற்றும் உரிமை நமக்கு கிடையாது. மாற்றவும் முடியாது என்பதுதான் உண்மை.
ஆறு வாரங்களில் சிவப்பாக மாறலாம் என்று சொல்லும் அழகு சாதனங்கள் நிச்சயம் உண்மை அல்ல. எண்ணங்களும், செயல்களும், தனித்துவம் கொண்ட திறமைகளும் மட்டுமே பெண்களின் அழகான அடையாளமாக உள்ளது. இவை மட்டுமே வெற்றியின் பாதைக்கு கூட்டி செல்லும் என்பதுதான் நிஜம்.
நன்றாக கவனித்துப் பார்த்தால் தெரியும். சமூகத்தின் அத்தனை உயரிய பதவிகளையும் அலங்கரிக்கும் பெரும்பாலான பெண் ஆளுமைகள் எந்த அழகு சாதனத்தையும் உபயோகிப்பதில்லை என்பது. அவர்களின் திறமைதான் மக்களிடையே பேசப்படுகிறதே தவிர அவர்களின் அழகு அல்ல.
அழகு முக்கியத்துவம் வாய்ந்தது. அழகு மிக அவசியமானது என்பது சில துறைகளுக்கு பொருந்தும். திரைத்துறையில் ஒரு பெண் அழகாக இருந்தால் மட்டுமே அவளுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் வெறும் அழகை வைத்துக்கொண்டு வாய்ப்புகளை தேடினால் நிச்சயம் அவரால் ஜெயிக்க முடியாது என்பதையும் குறிப்பிட வேண்டும். அழகுடன் திறமையும் உள்ள பெண்களுக்குத்தான் நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் வரும்.
சிவந்த நிறம், பருக்களற்ற முகம், ஒல்லியான உடல், முடிகளற்ற வழவழப்பான கைகால்கள் ஆகியவையே அழகின் சான்றாக இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது சரியா? தற்போது பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான அழகு சாதனங்களில் உள்ள விஷத்தன்மை அதை உபயோகிக்கும் பெண்களுக்கு பின் விளைவுகளைத் தருகின்றன என்பது உண்மைதானே!
ஆனால், எவ்வித பாதிப்பும் தராத ஒரு அழகு சாதனம் நம் கையில் உள்ளது. அதுதான் நமது தன்னம்பிக்கை. இந்த அழகு சாதனத்தை தினம் நாம் கடைப்பிடிக்கும்போது அல்லது பயன்படுத்தும்போது நமக்குள் இருக்கும் திறமைகள் மேம்பட்டு அதன்மூலம் நமது மனமும் முகமும் பொலிவை அடைகிறது.
உண்மையாகவே பெண்கள் அணியக்கூடிய அல்லது பெண்கள் தொடர்ந்து உபயோகிக்க கூடிய ஒரு அழகு சாதனம் தன்னம்பிக்கை மட்டும்தான். இதற்கு அதிக செலவில்லை. அழகு நிலையங்களை நாட வேண்டியதில்லை.
இந்த அழகு சாதனத்துக்கு அச்சம் தரும் பின்விளைவுகள் இல்லை. ஆச்சரியமூட்டும் பின் விளைவுகள் நிச்சயம் உண்டு. அவை என்ன என்றால் நம் பின்னே வரும் வெற்றியின் விளைவுதான். தொடர்ந்து தன்னம்பிக்கை எனும் அழகு சாதனத்தை பயன்படுத்தி வெற்றி எனும் அழகைப் பெற்று மகிழ்வோம்.