

சாதனையாளர்கள் கூட வாழ்க்கையை ரசிக்காமல் சாதனையை நிகழ்த்தியதில்லை. அதிலும் அவர்கள் வாழ்க்கையை எப்படி பார்த்தார்கள் என்பதுதான் முக்கியம்.
நாட்டு விடுதலையை லட்சியமாகக் கொண்ட சுபாஷ் சந்திரபோஸ் அதற்காக பட்ட துயரங்களை எப்படி பார்த்தார் என்பதுதான் இதில் முக்கியம்.
'மாண்ட்லே' சிறையில் அடைக்கப்பட்டிருந்த போஸ் க்ஷயரோக நோயினாலும் அவதிப்பட்டு கொண்டிருந்தார். சிறை வாழ்க்கை துன்பமானது என்றாலும் இதில் நோய் வேறு. அத்தகைய நிலையிலும் தன்னுடைய நண்பர் ஒருவருக்கு போஸ் எழுதிய கடிதத்தில் இந்த சிறை வாழ்க்கை எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது. தேசத்துக்காக அதை அனுபவிக்கிறேன் என்கிறபோது அந்த மகிழ்ச்சி மேலும் அதிகரிக்கிறது என்று எழுதியிருந்தார்.
அவர் அனுபவித்த துன்பம் அவருக்கு பெரிதாக தெரியவில்லை. தன்னுடைய வாழ்க்கையில் ஏற்றுக்கொண்ட லட்சியத்திற்காக அதை அனுபவிக்கிறோம் என்ற உணர்ச்சி அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.
சிறை வாழ்வை கூட தன்னுடைய வாழ்க்கை ரசனையின் மூலமாக உயர்ந்த நிலைக்கு அவரால் கொண்டு செல்ல முடிந்திருக்கிறது.
சாக்ரடீஸ் ஒருநாள் தன் நண்பரோடு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்ததை விரும்பாத அவருடைய மனைவி கடுமையாக அவரை திட்டினார். நண்பரோடு பேசிக்கொண்டிருப்பதை அப்போதும் சாக்ரடீஸ் நிறுத்தவில்லை. ஆத்திரமடைந்த அவரது மனைவி ஒரு வாளி தண்ணீரைக் கொண்டு வந்து அவர் தலையில் ஊற்றினார்.
சாக்ரடீஸோ கோபத்துக்குள்ளாகாமல் நண்பரின் முன்னிலையில் மனைவி தனக்கு ஏற்படுத்திய அவமானத்தையும் ரசித்தார். முன்பு இடி இடித்தது இப்போது மழை பெய்கிறது என்று நண்பருக்கு நகைச்சுவையாகச் சொன்னார்.
சாக்ரடீஸ் தன்னுடைய நகைச்சுவை உணர்ச்சியினால் இந்த விமர்சனத்தை செய்திருக்க வேண்டும்.
உலக வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரிய பொருளாதார தத்துவத்தை கூறிய காரல் மார்க்ஸ் வாழ்க்கை முழுவதும் கடுமையான வறுமையோடு போராடினார். வறுமையையும் ரசிக்கின்ற மனோபாவம் காரல் மார்க்சுக்கு இருந்ததால்தான் வாழ்க்கை முழுவதும் வறுமையோடு போராடி ஆராய்ச்சி பூர்வமான பொருளாதார தத்துவத்தை பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகமாக எழுத முடிந்தது.
பெரும் எழுத்தாளரான டால்ஸ்டாயின் மனைவி கொடுமையானவளாக இருந்தாலும் சாகா இலக்கியங்கள் படைப்பதற்கு அது தடையாக இருக்க அவர் அனுமதிக்கவில்லை ஏனெனில் வாழ்க்கையையும் மானிட ஜாதியையும் நேசித்தவர் டால்ஸ்டாய்.
உலகத்தில் வாழ்ந்த மகா புருஷர்களின் வாழ்க்கையை ஊடுருவி பார்த்தால் அவர்கள் துன்பங்களும் துயரங்களுக்கும் மத்தியில்தான் அறிய சாதனை புரிந்ததற்கு காரணம் அவர்கள் வாழ்க்கையை நேசித்தது என்கிற உண்மை தெளிவாகும்.
ஆகவே நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையை இன்னும் யோசித்துக் கொண்டிருக்காமல் நேசிக்க கற்றுக்கொள்வோம்.