கவலையின்மையே பலத்தைத் தரும்!

கவலையின்மையே பலத்தைத் தரும்!

ந்த உலகத்தில் பலவற்றில் தோற்றுப் போவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் பெரும்பாலான தோல்விக்கு காரணங்கள், மனக்கவலை, மனவிரக்தி, மனச்சோர்வு போன்றவைதான்.

அவசரப்பட்டு மனக் கவலையில் செய்யும் செயலில் இருந்து விலகி வெற்றி வாய்ப்பை இழப்பவர்கள் நிறைய பேர்.

வாழ்க்கையில் எப்போதும் கவலை முகத்துடன் இருப்பவர்கள், பொறுமை இழந்தவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. 

அவர்களுடைய மனக்கவலையும் பொறுமை இன்மையும் அவர்களை படு குழியில் தள்ளிவிடும்.

கிருஷ்ணதேவராயர் சில யானைகள் முன்னால் வர, பின்னால் ஒரு யானையின் மீது அமர்ந்து வீதி உலாச் சென்றார். 

ஒரு வீதியில் செல்லும்போது, எதிரில் வந்த இளைஞன் ஒருவன், முதலில் சென்ற யானையின் தந்தத்தைப் பிடித்துத் தள்ளினான். யானை சிறிது தூரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

அரசர் தம் மந்திரியான அப்பாஜியிடம் “இந்த இளைஞன் எவ்வளவு பலசாலியாக இருக்கிறான்?” என்றார்.

“அரசே! கவலையில்லாமல் வளர்ந்த பிள்ளை போலும்” என்று அப்பாஜிக்கு பதில் அளித்தான். 

மறுநாளே அந்த இளைஞனைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தான். பின்பு அவனுடைய வீட்டைத் தேடிச் சென்றான்.

இளைஞனின் அம்மாவிடம்,

“அம்மா! ஒரே பிள்ளை என்று மிகுந்த செல்லம் கொடுக்கிறீர்கள். இப்படியே போனால் வளர்ந்த பிறகு பொறுப்பே இல்லாமல் இருப்பான். இனிமேல் அவனுக்கு அளிக்கும் உணவில் உப்பே போடாதீர்கள். 

‘சம்பாதித்து வந்தால்தான் உப்பு போடுவேன்’ என்று சொன்னால், உங்கள் பிள்ளை பொறுப்பானவன் ஆகிவிடுவான்.” என்று அப்பாஜி கூறியதும் அவ்வாறே செய்யலானாள்.

இதையும் படியுங்கள்:
20களின் தொடக்கத்தில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்! 
கவலையின்மையே பலத்தைத் தரும்!

சில நாள்கள் சென்ற பின்பு, இராயர் முன்பு போலவே யானைப் படையுடன் நகர்வலம் சென்றார். 

யானையைக் கண்டதும் அந்த இளைஞன் தந்தத்தைப் பிடித்துத் தள்ள முயன்றான். அவனால் முடியவில்லை. அதற்குள் யானை அவனைக் கீழே தள்ளிவிட்டது.

“அரசே! பார்த்தீர்களா? சம்பாதிப்பது எப்படி என்று எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தான் இளைஞன் அதனால் பலமிழந்தான். 

கவலையின்மையே பலத்தைத் தரும் என்பது புரிகிறதா?” என்றார் அப்பாஜி. அரசரும் ‘நன்றாகப் புரிந்தது’ என்றார்.

மனது சரியாக சிந்திக்க தொடங்கினால் மனக் கவலை, சோர்வு' பொறுமையின்மை ஏற்பட வாய்ப்பு இல்லை.

கவலையால் உடல், உங்கள் நலன்கள் கெடுகின்றன. ஏன்? வாழ்வே துன்பமாகவும் தோல்வியாகவும் அமைந்து விடுகிறது. வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டுமானால் மனிதன் கவலையை ஒழித்தேயாக வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com