பொதுவாக நாம் எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு யோசித்து அதன் நாலாவழிகளையும் அலசி ஆராய்ந்து அந்த செயலை தொடங்குவது பல்வேறு இக்கட்டான சூழல்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள உதவும். நாம் தொடங்கும் ஒரு செயல் நமக்கு நன்கு பழக்கமானதாக இருந்தாலுமே கூட, திட்டமிடல் மிகவும் அவசியம். ஒரு செயலின் வெற்றியில் பாதி பலம் அதற்காக நாம் தயார் செய்யும் திட்டமிடலிலே அடங்கி இருக்கிறது. ஒருவேளை மிகச் சரியான திட்டமிடல் இல்லை எனில் இதோ இந்த மன்னருக்கு நேர்ந்ததைப் போல நமக்கும் நேரிடலாம்!
கௌதம நாட்டை மகாதேவன் என்ற அரசர் மிகச் சரியான முறையில் ஆட்சி செய்து வந்தார். நாட்டின் பொருளாதாரத்திலும், மக்களின் வளர்ச்சியிலும் அவர் காட்டிய ஈடுபாட்டால் நாடு செல்வ செழிப்பாக இருந்து வந்தது. அவரின் வளர்ச்சியை கண்டு அக்கம் பக்கத்து நாட்டில் உள்ள மன்னர்கள் எல்லாம் அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்த வேளையில், சிலருக்கு பொறாமையும் இருந்தது. எந்த சமயம் பார்த்து மன்னனை வீழ்த்தலாம் என்று பலர் கண்காணித்துக் கொண்டிருந்தனர். இப்படியே சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் எதிரி நாட்டு மன்னர் கௌதம நாட்டின் மீது படையெடுக்க திட்டமிட்டார்.
இந்தச் செய்தி அரசர் மகாதேவன் காதுகளுக்கும் எட்டியது. அரசர், 'வெற்றி என்பது கௌதம நாட்டுக்கு புதிது அல்ல. ஏற்கனவே நம்முடைய வீரர்கள் நன்கு படைபலம் வாய்ந்தவர்கள் தான். அதுமட்டுமன்றி எதிரி நாட்டுக்கு நம்மிடம் இருக்கும் அளவுக்கு படை பலமும் இல்லை. ஆதலால் அவர்களால் நம்மை அவ்வளவு எளிதில் தோற்கடிக்க முடியாது' என்று எண்ணி அந்த செய்தியை அவ்வளவாக கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டார்.
ஒரு நாள் மன்னன் எதிர்பார்க்காத வேளையில் எதிரி நாட்டு மன்னன் திடீரென படையெடுத்து கௌதம நாட்டுக்குள் நுழைந்து விட்டான். வீரர்கள் யாரும் தயார் நிலையில் இல்லை. ஒருவாறாக சுதாரித்துக் கொண்ட கௌதம நாட்டு மன்னன், தன் வீரர்களை வெகு சீக்கிரமாக ஆயத்தப்படுத்த எண்ணினார். ஆனால் அதற்குள் எதிரி நாட்டுப்படை முன்னேறி கௌதம நாட்டின் ஒரு பகுதி எல்லைக்குள் வந்து விட்டது. கௌதம நாட்டு வீரர்களும் எதிரி நாட்டுப் படை வீரர்களோடு போரிட்டனர். ஆனால் எதிரி நாட்டின் படை வீரர்களின் எண்ணமோ கௌதம நாட்டின் அரண்மனையை கைப்பற்றுவதிலே குறியாக இருந்தது. அரண்மனையின் அனைத்து கட்டமைப்புகளையும் மிக துல்லியமாக அறிந்திருந்த எதிரி நாட்டுப் படையினர் மளமளவென முன்னேறி அரண்மனையை கைப்பற்றி தங்கள் வெற்றி கொடியை நாட்டி விட்டனர்.
மிகுந்த படை பலமும் ஆயுத பலமும் கொண்டிருந்த கௌதம் நாட்டு மன்னன் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டான். அவ்வாறு நாடு கடத்தப்பட்டு செல்லும் நிலையில் தான் எங்கே தவறு செய்தோம் என்பதை யோசித்துப் பார்த்தபோது, சரியான திட்டமிடல் இல்லாமையே கண்ணுக்கு முன் வந்து நின்றது.
நாமும் நம் வாழ்க்கையில் பல நேரங்களில், 'இதெல்லாம் நமக்கு நன்கு தெரிந்த வேலைகள் தானே' என்று எளிதாக எடுத்து கொண்டு விடுகிறோம். ஆனால் எடுத்துக் கொண்ட அந்த வேலையின் பாதி செயல்பாடுகளை கடக்கும் போது தான் நமக்குள் தடுமாற்றமே ஏற்பட தொடங்குகிறது. எனவே எந்த ஒரு செயலையும் நன்கு பழக்கப்பட்டது என்று எண்ணாமல் முறையான திட்டமிடலோடு தொடங்கினால் வாழ்வின் மிகப்பெரிய வெற்றிகளை மிக எளிதில் அடைய முடியும்!