நம்மை சுறுசுறுப்பாக்குவது பிரச்னைகள்தான்!

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

பிரச்னைகள் இல்லாத மனிதர்களே இல்லை. பிரச்னை இல்லாத வாழ்க்கையும் இல்லை. அதே போலத் தீர்வுகள் இல்லாத பிரச்னைகளும் இல்லை. ஆனால் நாம்தான் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. சில வேளைகளில் நாம் ஒன்றும் இல்லாத சிறுசெயல்கள் கூட பெரிய பிரச்னையாகக் கருதுவதுண்டு. 

அதைப் பற்றியே சிந்தித்து, சிந்தித்து கலங்குவதுண்டு. ஆனால், அவை மிகச்சிறிய செயலாக இருக்கும். முதலில் நாம் பிரச்னைக்கு உள்ளேயே இல்லாமல், அதைவிட்டு வெளிவர வேண்டும். 

அதைத் தீர்க்கும் வழி பற்றி சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். அதேபோல் உரிய பிரச்னைக்கு, உரிய காலத்தில் முடிவெடுப்பது முக்கியமானதாகும். காலம் தாழ்த்தி எடுக்கும் முடிவுகள் பயனளிப்பது இல்லை. 

அது ஜப்பான் நாட்டின் ஒரு தீவு. அந்தத் தீவு மக்கள்  மீன் உணவை விரும்பிச் சாப்பிடுவார்கள். மீனவர்கள் படகை எடுத்துக் கொண்டு சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடற்பகுதிக்குச் செல்வார்கள். 

அங்கிருந்து திரும்பி வர இரண்டு நாட்களாகி விடும். அக்குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் மீன்கள்தான் மிக ருசியானதாக இருக்கும்.

ஆனால், மீன் பிடித்ததும் கொண்டு வர இரண்டு நாட்களாகி விடுவதால் அந்த மீனின் சுவை குறைந்துவிடும்.

மீனவர்கள் கையோடு, ஐஸ் கட்டிகளைக் கொண்டு சென்று அதில் பதப்படுத்திக் கொண்டு வந்தார்கள்.  ஆனாலும், மக்களுக்கு திருப்தி இல்லை. ஃப்ரெஷ் மீனுக்கும் ஐஸ் கட்டிகளில் வைக்கப்பட்ட மீனுக்கும் சுவை வேறுபடுவதை உணர்ந்தனர்.

இப்பொழுது மீனவர்கள், ஒரு சிறு தண்ணீர்த் தொட்டி ஒன்றைச் செய்து, அதில் மீன்களைப் பிடித்துப் போட்டு கொண்டு வந்தனர். ஆயினும், அத்தனைப் பெரிய கடற்பரப்பில் நீந்திக் கொண்டிருந்த மீன்கள், சிறிய தண்ணீர்த் தொட்டியில் இரண்டு நாட்களாக சோம்பிக் கிடப்பதினால் மீனின் சுவை குன்றிப் போவதாக மீண்டும் குறை.

இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு என்று யோசித்தார்கள் மீனவர்கள்.. புதிதாக ஒரு வழி கண்டு பிடித்தார்கள். குட்டிச் சுறா மீன் ஒன்றைப் பிடித்து அந்தத் தொட்டிக்குள் விட்டார்கள். இந்தச் சுறாவிடம் இருந்து தப்பிப்பதற்காக அந்த மீன்கள் எல்லாம் அந்தத் தொட்டிக்குள் வேக வேகமாக நீந்திக் கொண்டே இருந்தன ஓய்வின்றி.

இதையும் படியுங்கள்:
நீரிழிவு நோயை அதிகரிக்கும் 5 உலர் பழங்கள்!
motivation article

இப்பொழுது இரண்டு நாட்கள் கழித்து வந்த அந்த மீன்கள் முன்பு இருப்பதையும் விட மிகச் சுவையானதாக இருந்தது.

நாம் வாழ்கின்ற வாழ்க்கையும் அப்படித்தான். வாழ்க்கையை சுவைக்க கவலைகளோடே இருக்கக் கூடாது. சுறுசுறுப்பாக ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். பிரச்னைகள் என்கிற சுறா இருந்தால் மட்டும்தான் வாழ்க்கை என்ற மீன்கள் சுவையானதாக இருக்கும்.

பிரச்னைகள் இல்லாவிட்டால் நாம் ஓட மாட்டோம். சோம்பியேதான் கிடப்போம். சுறுசுறுப்பாக ஓடி வாழ்க்கையை சுவையானதாக மாற்றுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com