இன்றைய நாளின் துரிதகதியில் நாம் அளவுக்கதிகமாக யோசிக்கிறோம், நிறையத் தேடுகிறோம், நிறைய வேண்டுகிறோம், ஆனால் இருப்பின் மகிழ்வை மறந்து விடுகிறோம். –Buddha
புத்தர் அன்று சொன்ன வார்த்தைகள் இப்போதும் நமக்கு தேவையான கருத்தாக உள்ளது. ஆம் ஒவ்வொருவரும் நம் இருப்பை நிரூபித்துக்கொள்ள துரிதமாக ஓடுகிறோம் அல்லது பணி செய்கிறோம். வெற்றி என்றும் மூன்றெழுத்தும் மந்திரத்தை தினம் சொல்லிக்கொண்டே நமது வீட்டை மறந்து, உறவுகளை மறந்து, நமக்கான கடமைகளை மறந்து ஓடிக் கொண்டிருக்கிறோம்.
நாம் வெற்றி பெற்று விட்டதாக நினைக்கும் அந்த தருணத்தில் திரும்பிப் பார்க்கும்போது நாம் இழந்துவிட்ட மகிழ்வான தருணங்கள் நம்மை பார்த்து நகைக்கும். இப்போது பெற்ற வெற்றி நினைத்து மகிழ்வதா அல்லது இழந்துவிட்ட அந்த தருணங்களை எண்ணி வேதனைப்படுவதா?
ஒருவருக்கு வெற்றி என்பது எவ்வளவு அவசியமோ அதேபோல் வாழ்வில் வரும் சிறுசிறு மகிழ்ச்சிகளும் அவசியம்தானே?
அந்தத் தொழிலதிபர் சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருப்பவர் அவருடைய பண்பும் அன்பும் பார்த்து வியக்காதவர்களே இல்லை. அவர் ஈடுபட்டிருந்த தொழிலில் அவர்தான் முன்னணியில் இருந்தார். காலம் சென்றது. அவருக்கு வயது மூப்பு ஆனதால் தொழிலை தனது மகனிடம் விட்டுவிட்டு அழைக்கும் கூட்டங்களுக்கு செல்வது அங்கு தனது அனுபவங்களை பகிர்வது என்று நேரத்தை வீணடிக்காமல் தனது பொழுதுகளை மதிப்பு மிக்கதாக ஆக்கிக் கொண்டிருந்தார்.
இவர் ஒவ்வொரு மேடையிலும் தவறாமல் ஒரு விஷயத்தை பதிவிட்டது அனைவரின் கவனத்திலும் வந்தது. அந்த விஷயம் எது தெரியுமா? அவர் பேசிய சாரத்தின் தொகுப்பு இதுதான்.
"நான் இப்போது வேண்டுமானால் மிகப்பெரிய வெற்றி பெற்ற மனிதராக உங்கள் கண்களுக்கு தெரியலாம். ஆனால் உண்மையில் நான் ஒரு விஷயத்தில் தோற்றுவிட்ட மனிதனாகவே இங்கு குற்ற உணர்வுடன் இருக்கிறேன் என்பது நான் மட்டுமே உணர்ந்த ஒன்று. எனது வெற்றிகளை நான் ருசிக்க முடியாமல் இந்த குற்ற உணர்வு என்னை இப்போது தடுக்கிறது. காரணம் வயது இருக்கும்போது நான் எனது மனைவியுடன் அதிக நேரம் செலவழிக்கவில்லை. அத்தனை பொறுப்புகளையும் அவரிடமே தந்து விட்டு நான் எனது தொழிலில் மட்டுமே மூழ்கி இருந்தேன். ஆனால் வெற்றிக்களிப்பில் திரும்பிப் பார்க்கும்போது, அவரிடம் அன்பு செலுத்த நேரம் இருக்கும்போது அவர் எங்களுடன் இல்லை.
எத்தனையோ குடும்ப நிகழ்வுகளை, உறவினர் வருகைகளை, குழந்தைகளின் குறும்புத்தனங்களை அவர் நானில்லாமல் தனியாகவே அனுபவித்திருப்பார் என்று நினைக்கும்போது ஏதோ ஒன்றை நான் இழந்து விட்டதாகவே உணர்கிறேன். ஆகவே, வெற்றி பெறுவது மட்டுமே நோக்கமாக இருந்து விடாதீர்கள். வாழ்வில் வரும் சின்ன சின்ன சந்தோஷங்களையும் அனுபவிக்க பழகுங்கள் அதுவே உங்களை வெற்றியை நோக்கி செலுத்த துவங்கிவிடும் இது என் அனுபவம்."
இவர் கூறியது போல வாழ்க்கையின் சின்ன சின்ன சந்தோஷங்களை எதிர்பாராமல் வரும் நிகழ்வுகளை அனுபவிக்கவும் நேரம் இருக்க வேண்டும். பின் நாட்களில் நீங்கள் நினைத்துப் பார்க்க வெற்றியின் ஊடாக இந்த சம்பவங்களும் மனதில் மகிழ்ச்சியை வர வைக்கும் என்பதுதான் உண்மை. குறிப்பாக இந்த சின்ன சின்ன சந்தோஷங்களே வெற்றி நோக்கி செலுத்தும் ஊக்கம் ஆகிறது.