வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
இப்பழமொழியை அனைவருமே கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அதெப்படி வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா?. இதோ அறிந்து கொள்ளுங்கள்.
எனக்கு பொதுவாகவே வெற்றியாளர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கும். அவர்கள் என்னென்ன பேசுகிறார்கள் என்னென்ன விதிகளைக் கடைபிடித்தார்கள் என்று அறிந்துகொண்டு அதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பேன். அவ்வாறாக உலகையே ஆட்டிப்படைக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் கொள்கைகள் என்னை வெகுவாகக் கவர்ந்தது.
அதில் முக்கியமான ஒன்றாக எனக்குத் தென்பட்டது, "எவனொருவன் தனக்கு வேண்டியதை தைரியமாக எந்த கூச்சமும் இன்றி கேட்கிறானோ அவனுக்கே வெற்றி வசமாகும்" என்னும் வரிகள்.
அவர் சொல்வது சரிதானே. நாம் பல தருணங்களில் ஒரு சில விஷயங்களை பிறரிடம் கேட்கத் தயங்குகிறோம். கேட்க பயந்துகொண்டு வேறொரு நபரிடம் சொல்லி அந்த உதவியை நமக்காக கேட்க சொல்கிறோம். இதை கூச்சம், பயம் என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் நம்மை ஒரு செயலை செய்ய விடாமல் தடுப்பது, எதுவாக இருந்தாலும் அது நம் வளர்ச்சியின் எதிரிதான்.
நமக்கு ஒன்று வேண்டும் என்றால் நாம் தான் கேட்க வேண்டும்.
இங்கே யாரும் நமக்கு ஏதேனும் தேவையா என்று கேட்டு உதவி செய்ய மாட்டார்கள்.
நாம் தைரியமாக கேட்டால் மட்டுமே நமக்கான கதவுகள் திறக்கப்படும்.
நீங்கள் கேட்கக்கொஞ்சம் தான் உங்களுக்கான விஷயங்கள் பரிசீலிக்கப்படும்.
எனவே எதுவாக இருந்தாலும் தைரியமாக வெளிப்படுத்தும் மனநிலையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கேட்பதிலும் இடம், பொருள், ஏவல் அறிந்து கேட்கப் பழகுங்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒருவரிடம் ஏதாவது கேட்கும்போது சங்கோஜமாக உணர்ந்தால், ஸ்டீவ் ஜாப்ஸின் வரிகளை நினைத்துப் பாருங்கள்.
எப்பொழுதும் இதை மறக்க வேண்டாம், நமக்கானதை நாம் தான் கேட்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பிறரிடம் எப்படி பேச வேண்டும் என்ற ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளுங்கள். அது பல இடங்களில் உங்களுக்கு உறுதுணையாய் இருக்கும்.
எந்த அளவுக்கு நீங்கள் பிறரிடம் சிறப்பாக பேசும் திறனைக் கொண்டுள்ளீர்களோ, அந்த அளவுக்கு உங்களுடைய எண்ணங்களை ஒன்றிணைக்கும் திறன் மேம்படும். எனவே பேசுதலின் ஆற்றலை அறிந்து, அதைப் பற்றிய நுணுக்கங்களை இன்றே கற்கத் தொடங்குங்கள்.