கனவுகளுக்கும், சாதனைகளுக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம் கடின உழைப்பு மட்டுமே. ஒரு விதை முட்டி மோதி முளைத்து செடி, மரமாகி, பூத்துக் காய்த்து, கனி தருவது என்பது ஒரே நாளில் நடந்து விடுவதில்லை.
ஒரு முயற்சியும், அதற்காக செலுத்தும் உழைப்பும் நல்ல பலனைத் திரும்ப கிடைக்க காத்திருக்க வேண்டும்.
சரி எத்தனை நாட்களில் வெற்றி கிடைக்கும்?
உங்கள் இலக்கு என்பதைப் பொறுத்தது அது. தர்பூசணி சில வாரங்களில் பழுத்து பலன் தரும்.
புளிய மரம் இதைச் செய்ய ஆண்டுகள் பல ஆடும்
இப்படி ஒவ்வொரு வெற்றியும் வித்தியாசமானவை.
வெற்றியின் தன்மைக்கு ஏற்ப அந்த வெற்றியை அடையும் காலமும் மாறுபடுகிறது. உடனே வெற்றியைப் பெற சிலர் முயற்சி செய்வதுண்டு.
புகழ் பெற்ற ஜென் கதையே உதாரணம்.
ஒரு மன்னனுக்கு திடீரென 'ஞானியாக வேண்டும்' என ஆசை வந்தது.
'உலகத்தின் வரலாறு முழுவதையும் தெரிந்து கொண்டால் ஞானியாகி விடலாம்' என அவனுக்கு யாரோ ஆலோசனை சொன்னார்கள்.
தனது அமைச்சரவையில் இருக்கும் அறிஞர்கள், புலவர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்களை அழைத்து உலக வரலாற்றை எழுதி தரும்படி கட்டளை இட்டான். மாதங்கள் கடந்தன. ஆயிரக்கணக்கான சுவடிகளில் உலக வரலாற்றை எழுதி எடுத்து வந்தார்கள். பல குதிரை வண்டிகளில் அவற்றைக் கொண்டு வந்து அரண்மனையில் குவித்தார்கள். அரண்மனை மண்டபம் முழுவதும் நிரம்பும் அளவுக்கு வரலாற்றுச் சுவடிகள் குவிந்தன.
மன்னன் அதிர்ச்சடைந்தான்.
"உலக வரலாறு இவ்வளவு பெரியதா? இத்தனை சுவடிகளையும் படித்து முடிக்க என் ஆயுளே போதாது. மிகவும் சுருக்கமாக எழுதித்தாருங்கள்" என்றான் மன்னன்.
"உண்மையான வரலாற்று நிகழ்வுகளை சுருக்க முடியாது. அதிகமாக சுருக்கினால் உண்மைகளை தெரிந்து கொள்ள முடியாது" என அறிஞர்கள் சொன்னார்கள்.
ஆனால் மன்னன் தன் பிடிவாதத்தை கை விடவில்லை.
நொந்து போன அறிஞர்கள், புலவர்களும் ஒரு ஜென் குருவை சந்தித்து ஆலோசனை கேட்டனர்.
"உலக வரலாறை மிகச் சுருக்கமாக நான் எழுதித் தருகிறேன்" என்று சிரித்தபடி சொன்னார் ஜென் குரு.
ஒரு சுவடியில் சில வார்த்தைகள் எழுதி பாதுகாப்பாக மடித்து கொடுத்தார்.
அவர்கள் அதை எடுத்துச் சென்று மன்னரிடம் கொடுத்தார்கள்.
மன்னன் பிரித்து பார்த்து படித்தான். அந்த சுவடியில்,
"உலகில் மனிதர்கள் பிறந்தார்கள், வாழ்ந்தார்கள், இறந்தார்கள்" என எழுதப்பட்டிருந்தது.
நடந்ததை விளக்கிய அறிஞர்கள் "உலக வரலாற்றை மிகவும் சுருக்கமாக இப்படித்தான் எழுத முடியும் என்று ஜென் குரு சொன்னார்" என்றனர்.
எந்த வெற்றியையும் பெறுவதற்கு முறையான வழி முறைகளும், உரிய கால அவகாசமும் தேவை என்பதை மன்னன் புரிந்து கொண்டான்.
வெற்றி என்பது வெளியில் இருந்து பிறர் தரும் ஆதரவினாலும், சாதகமான சூழ்நிலையாலும் நிகழ்வதில்லை. உங்கள் மனம்தான் உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.
வெற்றி என்பது ஒரே நாளில் கட்டி முடிக்கப்படும் கட்டிடம் அல்ல. அது நாள் தோறும் செய்யும் சிறு முயற்சிகளால் உருவாக்கப்படும் மாளிகை ஆகும். வெற்றி உங்கள் கையில்தான் உள்ளது. அது வாசலிலேயே சில சமயம் காத்திருக்கும்.