

மனநிறைவான வாழ்க்கை என்பது என்ன? பிடித்தமான வேலை செய்வது, மனிதகுலத்திற்கு சேவை செய்வது போன்றவை. இவற்றைத் தாண்டி யார் ஒருவர் ஒழுக்கத்தை வாழ்வில் முதன்மையான விஷயமாக கருதி வாழ்கிறாரோ அவர் சுயக்கட்டுப்பாட்டுடன் தன் இலக்கை நோக்கி வாழ்க்கையை செலுத்துகிறார்.
தனி மனித ஒழுக்கம், ஒருவருக்கு மிகுந்த ஆற்றலை தந்து தம் வாழ்வை மட்டுமல்ல சுற்றியுள்ளோரின் வாழ்வையும் உயர்த்தும். இந்த கட்டுரையில் ஒழுக்கம் எப்படி ஒருவருடைய மகிழ்ச்சிக்கு வித்திடும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
ஒழுக்கத்தின் பின் உள்ள உளவியல்;
ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு மனிதனை சுய கட்டுப்பாட்டிடனும் வைக்கிறது மூளை. மூளையில் டோபமைன் என்கிற ஒரு வேதிப்பொருள் இருக்கிறது . ஒரு மனிதன் தன்னுடைய லட்சியத்தை அல்லது சவால்களை எதிர்கொண்டு முடிக்கும் போது டோபமைனின் அளவு கூடுகிறது.
அது மனதிற்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது. இதனால் மூளை மிக சிறப்பாக செயல்படுகிறது. தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்கிற தன்னம்பிக்கையும் தருகிறது. அளவற்ற மகிழ்ச்சியும் அளிக்கிறது.
ஒழுக்கமும் லட்சியத்தை அடைதலும்;
ஒருவர் தன்னுடைய லட்சியத்தை அடைவதற்கு ஒழுக்கம் மிகவும் அடிப்படையான விஷயமாக இருக்கிறது. லட்சியத்தை அடைய மன உறுதி தேவைப்படுகிறது. ஒரு கட்டுக்கோப்பான மனதுடன் தன் கொள்கைகளை நோக்கிய பயணத்தில் அவருடைய செயல்பாடுகள் அமையும்.
தினசரி வாழ்வில் ஒழுக்கத்தின் பங்கு
தினசரி சரியாக செய்யும் வேலைகள் ஒருவரின் ஒழுக்கத்திற்கு சான்று. தினமும் அவசியமாக செய்யும் உடற்பயிற்சி, தியானம், வேலை செய்வதற்கு முன்பு திட்டமிடுதல், குறித்த நேரத்தில் எழுதல், குளித்தல், எந்த ஒரு வேலையும் சரியாக செய்வதற்கான நேர நிர்வாகம் குறித்த விழிப்புணர்வு போன்றவை ஒரு மனிதனின் தினசரி வாழ்க்கைக்கு உதவுகிறது.
ஒரு மனிதன் குறித்த நேரத்தில் தூங்க செல்வது, குறித்த நேரத்தில் படுக்கையை விட்டு எழுவது, எழுந்தவுடன் படுக்கை, போர்வை மடித்து வைப்பது என அதிலிருந்து ஆரம்பிக்கிறது ஒருவரின் செயல்பாடுகள்.
ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் மனிதர் எழுந்தவுடன் தேவையில்லாமல் ஃபோனை கையில் வைத்துக்கொண்டு நேரத்தை வீணடிக்க மாட்டார். அதற்கு பதிலாக, உடற்பயிற்சி செய்தல் நடைப்பயிற்சி செய்தல் போன்ற விஷயங்களில் ஈடுபடுவார். இதனால் தன் பொன்னான நேரத்தை அவர் தேவையில்லாத விஷயங்களில் செலுத்துவது இல்லை. தான் திட்டப்படி வேலைகளை செய்து முடிப்பார். அதேபோல தேவையில்லாத குப்பை உணவுகளை விட்டு விட்டு, மிகவும் சரியான, சரிவிகித உணவு வகைகள் எடுத்துக்கொள்வார். ஆரோக்கியமாக தன் உடலை பேணும் ஒருவர், மனதையும் நலமுடன் வைத்திருப்பார்.
ஒழுக்கமும் மன நலனும்;
ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் ஒருவருக்கு கவலைகளோ தேவையில்லாத சிந்தனைகளை தோன்றுவதில்லை. அவர் எதைக் கண்டும் பயப்படுவதும் இல்லை. தன்னுடைய திட்டங்களை மிக சரியாக செயல்படுத்துவார். தன் மேல் நம்பிக்கையும் தன்னைத்தானே ஊக்கமும் ஊட் டிக் கொண்டு செயலில் இறங்குவார்.
ஒழுக்க குணம் ஒருவருடைய மனநிலையை சரியான நிலையில் வைக்கிறது டோகோமின் அளவை உயர்த்துகிறது வாழ்வில் எத்தனை தடை வந்தாலும் அவற்றை எதிர்த்துப் போராடும் ஆற்றலை ஒருவருக்கு அளிக்கிறது உடல் பலத்தையும் மன பலத்தையும் அளிக்கிறது.
-எஸ். விஜயலட்சுமி