சின்னச் சின்ன விஷயங்களில் இருக்கு சூட்சுமம்!

puppies were playing hugging
puppies were playing hugging

ந்த அழகான நாய்க்குட்டிகள் ஒன்றுக்கொன்று கட்டிப்பிடித்தும், கடித்துக்கொண்டும் விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றை பெரிதாக யாரும் கண்டு கொள்ளாத நிலையில், அப்போது ஸ்டிக்குடன் வாக்கிங் சென்ற எனக்குத் தெரிந்த நண்பர் அங்கேயே நின்று அவைகளின் விளையாட்டை ரசித்தார். அத்துடன் அவர் கையிலிருந்த செல்போனில் அவைகளின் விளையாட்டைப் படமாகவும் பதிவு செய்தார்.


 எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் இப்போதுதான் லேசான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு குணமாகி வருகிறார். துவளாமல் நாய்க்குட்டிகளை ரசிக்கும் மனது எப்படி வருகிறது? அவரிடம் பேசினேன்.


"வயதானால் உடல் நலம் பாதிப்பது இயற்கை. உடலுக்கு வயதாகிறதே தவிர மனதுக்கு இல்லையே. இது போன்ற சின்னச் சின்ன விஷயங்களை ரசிக்க நேரம் ஒதுக்கினாலே மனசு லேசாகும். மனசு லேசானல் உடல் நலம் நல்லா இருக்கும். இந்த நாய்க்குட்டிகளை படம் எடுத்தது என் பேரனுக்கு காண்பிப்பதற்காக. இது போன்ற காட்சிகள் அவனுக்கு மிகுந்த உற்சாகத்தை தரும். அவன் கைகொட்டிச் சிரிப்பதைப் பார்க்கும் போது என் மனம் இன்னும் லேசாகும். சின்னச் சின்ன விஷயங்களில்தான் இருக்கு வாழ்க்கையோட சூட்சுமம். இது புரியாமல் நிறைய பேர் இயந்திரங்கள் போல வாழ்கிறார்கள். வாழ்க்கை ரசிப்பதற்கே" என்று சொல்லிவிட்டு சென்றார்.


ஆம் அவர் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது. அன்றாடம் நமக்கு எத்தனையோ கவலைகள். ஆனால் அதையே நினைத்துக் கொண்டிருந்தால் வாழ்க்கை ருசிக்குமா. காலை எழுந்தது முதல் இரவு வரை பல பிரச்சனைகளில் உழலும் மனம் நம்மை சுற்றி இருக்கும் சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்த மறக்கிறது.

இதையும் படியுங்கள்:
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் முள்ளங்கி சூப்!
puppies were playing hugging

செக்கச் சிவந்த காலை சூரியன், உணவுக்காக தலை சாய்த்து அழைக்கும் காகங்கள், மலர்ந்து மணக்கும் மலர்கள், அழகுப் புன்னகை புரியும் பக்கத்து வீட்டு மழலை, காற்றில் கலந்து நாசி தொடும் சாம்பார் மணம், தேங்கிய நீரில் முகம் நனைக்கும் சிட்டுக்குருவிகள் .. இப்படி நாம் கண்டுகொள்ளாத  சின்னச் சின்ன விஷயங்கள் ஏராளம். இவற்றை சற்றே ரசித்து மகிழ்ந்தாலே மனம் புத்துணர்வு பெற்று கவலைகள் மறைவதுடன் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும். அந்த நாய்க்குட்டிகளை ரசித்த நண்பரை போல் நாமும் இனி நம்மைச் சுற்றி நிகழும் சின்னச் சின்ன விஷயங்களை நிதானமாக ரசிக்கப் பழகுவோம். வாழ்வின் சூட்சுமம் அறிவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com