குழந்தைகளுக்கு நாம் அவசியம் தர வேண்டியது இதுதான்!

Motivation article
Motivation articleImage credit - pixabay
Published on

"இறுதியில், உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதல்ல, தாமாகவே செய்ய அவர்களுக்கு என்ன கற்றுக் கொடுத்தீர்கள் என்பதுதான் முக்கியம்." - Ann Landers.

உளவியல் மருத்துவரிடம் பத்தாவது படிக்கும்  மகனை அழைத்துக்கொண்டு ஒரு பணக்கார பெண்மணி வந்தார். காரணம் அவனின் அலட்சியப்போக்கு.

மருத்துவர் "சிறுவன் வேண்டாம் நீங்கள் மட்டும் வாருங்கள்" எனக் கூற அந்தப் பெண் திகைத்தார். "என்ன இவர் பையனுக்கு புத்திமதி சொல்ல சொன்னா என்னை மட்டும் வரசொல்றாரு".

மருத்துவர் கேள்விகளைக் கேட்கத் துவங்கினார். அந்தப் பெண் அவரைப் பேச விடாமல் மளமளவென கொட்டத் துவங்கினார்.

காலை முதல் இரவு வரை அந்த சிறுவனுக்கு வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்வதற்கு என்றே தனியாக பணியாளரை நியமித்துள்ளார். காலை எழுந்ததும் பல் துலக்க பிரஷ் எடுத்து தருவதில் ஆரம்பித்து இரவு உறங்கும் வரை இரவு உறங்கும்போது படுக்கை விரிப்புகளை விரித்து தருவது வரை அவனுக்கு அனைத்துமாக இருந்துள்ளார் அந்த பணியாளர்.

இந்த சொகுசான வாழ்வு அந்த சிறுவனுக்கு பழகிப்போக வயது ஆக ஆக தன்னுடைய கடமைகள் எது என்று அவனுக்கு தெரியாமல் வளர்ந்துள்ளான். பணியாளரையும் அதிகப்படியான வேலைகளை வாங்கி வேதனைப் படுத்தியுள்ளான். அது மட்டுமின்றி படிப்பில் சரியான கவனம் இன்றி ஆசிரியர்களிடமும் முரண்டு பிடித்துள்ளான்.  இப்போது இந்த செயல்கள் அந்தப் பெண்மணியின் கவனத்திற்கு வர அவள் பதறி அடித்து மருத்துவ கவுன்சிலிங் பெற தேடி ஓடி வந்துள்ளார்.

மருத்துவர் அமைதியாக அவள் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்தார். பின் ஒரே வார்த்தையில் சொன்னார். "தவறு முழுவதும் உங்கள் மகன் மீது அல்ல, உங்கள் மீதுதான். சுயமாக சிந்திக்காமல் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளப் பழகாமல் மற்றவரை சார்ந்து இருப்பதை பழக்கப்படுத்தி விட்டவர்கள் நீங்கள்தான். இதிலிருந்து அவன் வெளிவருவதற்கு சற்று நாட்கள் ஆகும். ஏனெனில் உங்கள் மகன் தற்போது ஒரு குழந்தை போலத்தான். இந்த குழந்தையை முதலில் இருந்து பழக்குவது என்பது முயற்சி எடுத்தால் மட்டுமே முடியும். கவலை வேண்டாம் அவனை மாற்றி விடலாம்" என்று சொல்லி மேலும் சொன்னார்.

இதையும் படியுங்கள்:
மைசூர் சில்க்கும் மோட்டிவேஷனும்..!
Motivation article

"பெற்றோராகிய நீங்கள் இறுதியில் என்ன சேர்த்துவிட்டு போனீர்கள் என்பது முக்கியமல்ல அவனுக்கு என்ன கற்றுக் கொடுத்துவிட்டு சென்றீர்கள் என்பதே அவனின் வெற்றிக்கு காரணமாக இருக்கும். பணத்துக்கு முதல் மரியாதை தருவதை விடுத்து மனதுக்கு தன்னம்பிக்கை என்னும் பயிற்சியை அளியுங்கள். உங்கள் மகன் சிறந்தவராக வருவார்"அந்தப் பெண் தனது தவறை தெரிந்து புரிந்து சென்றார்.

இப்படித்தான் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எந்த சிரமமும் இன்றி வாழவேண்டும் என்று அவர்களின் குழந்தை பருவத்தில் செய்யும் தவறுகள் அவர்கள் வளரும்போது பிரச்னையாக மாறி வருந்த வைக்கிறது ஒவ்வொரு குழந்தைக்கும் அன்பு மட்டும் அல்ல கண்டிப்பும் தேவை அதே சமயம் இந்த சமூகத்தை எதிர்கொள்ள தனது தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்ளும் தன்னம்பிக்கையும் இருந்தால் மட்டுமே அவர்களின் எதிர்காலம் சிறக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com