
மனிதனாகப் பிறந்தாலே கடைக்கோடியில் உள்ளவன் முதல் நம் மனதைக் கொள்ளைக்கொண்ட காதலி வரை எல்லோரும் நம்மை விரும்பவேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. ஆனால், அதை எப்படி அடைவது? என்று நம்மில் பலருக்கும் தெரியாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் இந்தப் பதிவு! அனைவரையும் கவரக்கூடியவர்களாக மாறும் 6 விதிகளைப் பற்றி இதில் பார்ப்போம்.
1. மற்றவர்களிடம் பழகும்பொழுதும், பேசும்பொழுதும் உங்களைப் பற்றி மட்டும் பெருமையாகப் பேசிக்கொள்ளாமல், மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்றார் போல் பேசினால் அவர்களை எளிதில் கவர்ந்துவிடலாம்.
2. நீங்கள் ஏதாவது தவறு செய்திருந்து அதனை மற்றவர்கள் விமர்சனம் செய்தால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள். அதற்காக மற்றவர்களைப் பழி சொல்லாதீர்கள். இன்றைய சூழலில் தவறுகள் செய்வதைக் காட்டிலும், அத்தவற்றை ஒற்றுக்கொள்வதற்கே தைரியம் அதிகம் வேண்டும்.
3. ஒருவர் உங்களிடம் ஏதாவது முக்கியமான விஷயங்களைக் கூறினால் அல்லது ஏதேனும் பிரச்னைகளைப் பகிர்ந்துகொண்டால், அதனை என்னவென்றுகூட கேட்காமல் அதற்கான தீர்வு இதுதான் என்று நீங்களாகச் சொல்லக்கூடாது. அவர்கள் சொல்ல வந்த செய்தியை முழுமையாகக் கூறி முடிக்கும்வரை காத்திருந்து அதன்பின் உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும். ஒருவர் நாம் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்கிறார் என்றாலே அவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பானது அதிகமாகும்.
4. நான்தான் எல்லாவற்றிலும் சிறந்தவன்; எனக்கு எல்லாம் தெரியுமென்றும், அதனால் நான் சொன்னால் எதுவாக இருந்தாலும் அது சரியாகத்தான் இருக்கும்; மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்றும் எண்ணங்கள் உங்களுக்கு இருந்தால் அதை இப்பொழுதே விட்டு விடுங்கள். சுயமாக முடிவெடுப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு மற்றவர்கள் முடிவையும் ஏற்றுக்கொள்வது.
5. நீங்கள் ஏதாவது ஒன்றை ஆரம்பிக்கும்பொழுது உங்களுக்கு எல்லாருடைய உதவியும் கேட்காமலே தேடி வந்து கிடைக்க வேண்டும்; ஆனால், நீங்கள் ஒருபோதும் யாருக்கும் உதவ முன்வர மாட்டீர்கள் என்ற பண்பு உள்ளவர்களை ஒரு காலமும் யாரும் விரும்பமாட்டார்கள். உங்களுக்கு உதவியவர்கள் அவர்களுக்கான எந்த சூழ்நிலையில் உங்களுக்கு உதவி இருப்பார்கள் என்பது தெரியாது. அதனால், செய்நன்றி மறக்காமல் அவர்கள் உதவி என்று கேட்கும்பொழுது தயங்காமல் இறங்கிச் செய்யுங்கள்.
6. உங்களுக்குத் தேவை என்று வரும்பொழுது ஒருவர் முக்கியமானவராகவும். உங்களின் தேவை முடிந்த பிறகு அவர் இருந்த இடம் தெரியாமல் மறந்துவிடுவது போன்ற பண்புகள் உங்களிடம் இருந்தால், அதனை மாற்றிக் கொள்ளுங்கள். ஒருவருக்கோ அல்லது ஒரு செயலுக்கோ ஆரம்பத்தில் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்தீர்களோ அதே போன்று முக்கியத்துவம் இறுதிவரையிலும் அளியுங்கள். எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியான முக்கியத்துவத்தைக் கொடுங்கள்.
இந்த ஆறு விஷயங்களை மட்டும் பின்தொடர்ந்து பாருங்கள். அனைவரும் உங்களை விரும்ப ஆரம்பிப்பார்கள்.