
சுயமதிப்பீடு ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. தன்னை சரியாக மதிப்பிடுவதன் மூலம் மகிழ்ச்சியான, வெற்றிகரமான வாழ்வுக்குத் தன்னை தயார்படுத்திக் கொள்ள முடியும். சுயமதிப்பீட்டின் நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
சுயமதிப்பீட்டின் முக்கியத்துவம்;
ஒரு மனிதன் வாழ்நாள் முழுக்க தன்னை இந்த பூமியில் நிலை நிறுத்திக்கொள்ள சுய மதிப்பீடு மிக அவசியம். அவரைப் பற்றிய பிறரின் மதிப்பீட்டை விட முக்கியமானது தன் மதிப்பீடு. சுய மதிப்பீடு என்பது ஒருவருடைய தனிப்பட்ட திறமை குணாதிசயம் போன்றவற்றை மதிப்பிடும் செயல்.
சிறு வயதில் ஒரு குழந்தை பள்ளியில் சேர்ந்ததிலிருந்து கல்வி கற்றல் முறையை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கப்படுகிறது. வளரும்போது அதன் நடவடிக்கைகள், செயல்களை வைத்து பிறர் அந்தக் குழந்தையின் குணத்தை மதிப்பீடு செய்கிறார்கள். ஒரு மனிதன் படித்து முடித்து வேலைக்குச் செல்லும்போது அவருடைய தகுதி, திறமை, கல்வி அடி்பபடையில் மதிப்பீடு செய்துதான் அந்த வேலை வழங்கப்படுகிறது.
அலுவலக, மற்றும் தொழில்முறை வெற்றி
ஒருவர் தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு செய்யும் போது மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும். தன்னுடைய திறமைகளை, பலம் மற்றும் பலவீனங்களை சரியாக இனம் காண வேண்டும். திறமைகளை அடையாளம் கண்டு கொண்டு அவற்றை மெருகேற்றிக் கொள்ளலாம். தனக்கு எதில் குறைபாடு இருக்கிறது என்று தெரிந்து கொண்டு அவற்றை நிவர்த்தி செய்து அந்த திறமைகளை மேம்படுத்திக் கொள்ளலாம். இது அவர்களுக்கு அலுவலக மற்றும் தொழில் ரீதியாக வெற்றியைத் தேடித் தரும்.
மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு;
தன் குணத்தில் உள்ள நிறைகுறைகளையும் ஒரு மனிதனால் சரியாக அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும். தன் நிறைவான குணங்களை பாராட்டிக் கொள்ளலாம். குறைகள் இருப்பின் நிவர்த்தி செய்து கொள்ளலாம். உதாரணமாக எதற்கெடுத்தாலும் அவசரப்படுவது, கோபப்படுவது, சிந்திக்காமல் செயல்படுவது போன்ற குறைகளை அடையாளம் கண்டு கொண்டு அவற்றை சரி செய்தால் அவரால் மகிழ்ச்சியாக வாழ முடியும். உறவு, நட்பு, அலுவல் ரீதியான மனிதர்களையும் சரியாக கையாள முடியும்.