பழமொழிகள் – புதிய புரிதல்!

வாழ்வியல்
பழமொழிகள் – புதிய புரிதல்!

பழமொழிகள் சிலவற்றை இந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி அர்த்தம் புரிந்துகொள்ள நினைத்ததன் விளைவு:

 கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை

கூழை நல்லா ஏந்தி குடிக்கணும். ஆனால், அது மீசைல படக்கூடாது…. நடக்குமா?

வீட்டுல அம்மா அப்பா நாம கேட்டதை எல்லாம் செய்து குடுக்கணும். ஆனா, நம்மள எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது.

மனைவி வேணும். ஆனா, அவ நான் கேட்டாலொழிய எதுவும் பேசவே கூடாது.

கணவன் இருக்கணும். அவர் நான் பேசணும்னு ஆசைப்படும்போதெல்லாம் எங்கூட பேசிக்கிட்டே இருக்கணும்… இதெல்லாம் நடக்கிற விஷயமா? எப்படி எல்லாமே கிடைக்கும்?

 அப்ப என்ன செய்யலாம்?

கூழு சாப்பிடும்போது, ஒண்ணு மீசைல பட்டா பரவாயில்லைன்னு நெனைச்சு  சாப்பிட்டுட்டு தொடைச்சுக்கணும். இல்ல, மீசையை எடுத்துடணும். அதுவும் முடியாதுன்னா கூழுக்கு பதிலா புட்டு சாப்பிடணும்.

ஒண்ணை விட்டுக்குடுத்தாதான் இன்னொண்ணு கிடைக்கும். நாம நினைச்சது எல்லாம் நடக்காது. ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’.

காவடி பாரம் சுமக்கறவனுக்குத் தெரியும்

காவடியின் பளு அதைத் தூக்கி சுமக்கும்போதுதான் புரியும். பாக்கிறவங்களுக்கு இதெல்லாம் ஒரு மேட்டரா என்பது போல் இருக்கும்.

 பசங்க படிக்கும்போது அங்க இங்க வேடிக்கை பார்த்தா, ‘படிக்கும்போது அதுல கவனம் செலுத்த கத்துக்கோ’னு அம்மா, அப்பா திட்டுவாங்க – பசங்க என்ன செய்வாங்க? அதுல மனசு போகலையே! பாடம் படிக்கிற வங்களுக்குத்தானே அந்த வலி தெரியும்.

‘வர்க் ஃப்ரம் ஹோம்’ என்ற பெயரில் ரெண்டு பக்கமும் சில பேருக்கு இடி. அலுவலக அதிகாரி, “வீட்டுலே இருந்துதானே வேலை செய்யற, உனக்கு என்ன பிரச்னை. ஏன் அதிகமா வேலை குடுத்தா அழற?” என்பார். அவருக்குத் தெரியுமா எத்தனை வீட்டுப் பொறுப்புகளும் தலை மேல வந்திருக்குன்னு.

அம்மா எல்லாருக்கும் மாங்கு-மாங்குனு விருந்து சாப்பாடு செஞ்சு எல்லாரும் சாப்பிட்டதும், ‘அப்பா’னு அசந்து உக்காரும்போது “அம்மா உங்க கையால எல்லாருக்கும் ஃபில்டர் காஃபி”னு கேக்கும்போது தொண்டை வரைக்கும் வரும் துக்கத்தை அடக்கிட்டு, “ஓ… நிச்சயம்” அப்படின்னு சொல்லும்போது அவங்க சோர்வு மற்ற யாருக்கும் புரியாது.

 ஒரு இக்கட்டை அனுபவிக்கிறவங்களுக்குத்தான் அதோட வலியும் வேதனையும் புரியும். நாம அவங்க கோணத்துலேயிருந்து அதைப் பார்க்கப் பழகினோம்னா, நம்மால அவங்களுக்கு உதவ முடியும். அதனால் உறவுகள் பலப்படும்.

நுணலும் தன் வாயால் கெடும்

பையன் பத்தாவது வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த உடனே, அப்பா சந்தோஷத்தில் உணர்ச்சி வசப்பட்டு, “டேய் கலக்கிட்ட. என்ன வேணும் உனக்கு? ஒரு ஸ்மார்ட் ஃபோன் வாங்கித் தரட்டுமா” என்று சட்டுனு சொல்லிட்டு ‘ஆஹா… அவசரப்பட்டுட்டோமோ” என்று யோசிப்பார்.

அலுவலகத்துக்கு SICK லீவ் எடுத்துட்டு மறுநாள் அலுவலகம் போய் நட்பு வட்டத்தோட சாப்பாட்டு நேரத்தில அரட்டை அடிக்கும்போது, “நேத்து மதியம் OTTல சூர்யா படம் பார்த்தேன். செம்மை படம்” என்று சொல்லும்போதே “அடடா உளறிட்டேனே” அப்படின்னு உணர்ந்து வழிந்து சமாளிப்போம்.

நம்ம வார்த்தையால நாமே சிக்கிக்கறது பல நேரம் நடக்கும். கொஞ்சம் நிதானிச்சு, இருக்குற இடத்தையும் நிலைமையையும் மனசுல வாங்கிக்கிட்டு பேசினோம்னா தப்பிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com