

சிவபெருமான் சுயம்புவாகத் தோன்றிய திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஓரிடத்தில் சிறப்புப் பெற்றால் அந்த ஆலயம் எல்லா பெருமைகளும் பெற்று சிறந்து விளங்கும். அந்த வகையில், கங்கைக்கரையில் உள்ள காசியை விட சிறந்தது ஸ்ரீவாஞ்சியம். இந்தத் தலம் உலகில் தோன்றிய சுயம்பு லிங்கங்கள் அறுபத்தி நான்கில் முதன்மையானது. உலகில் உள்ள அனைத்து சிவலிங்கங்களும் இங்கு வந்து வழிபடும் பேறு பெற்ற சிவத்தலம். சிவனாலேயே, ‘எனக்கு மிகவும் பிரியமான இடம்’ என்று பார்வதி தேவியிடம் கூறப்பட்ட தலம்.
காசிக்கு சமமான ஐந்து சிவத்தலங்களில் திருவிடைமருதூர், திருவெண்காடு, மயிலாடுதுறை, சாயாவனம், ஸ்ரீவாஞ்சியம் ஆகியவற்றில் இத்தலம் முதலிடம் பெற்று காசியை விட ஆயிரம் மடங்கு உயர்வு பெற்றது.
ஸ்ரீவாஞ்சிய லிங்கம் மிகவும் பழைமையானது. யாகங்களில் அசுவமேத யாகமும், மலைகளில் இமயமும், விரதத்தில் சோமவாரமும், மந்திரங்களில் ஆறெழுத்தும், தானங்களில் அன்னதானமும், தர்மங்களில் சிவதர்மமும், தேவருக்குள் மகாதேவரும், மரங்களில் கற்பகமும், ஆவிற்குள் காமதேனுவும், தீர்த்தங்களில் குப்த கங்கையும், ரத்தினங்களில் இந்திரமணியும் எவ்வளவு உயர்ந்த சிறப்பானதோ, அதுபோல லிங்கங்களில் ஸ்ரீ வாஞ்சிய லிங்கமும் சிறப்பெனக் கருதப்படுகிறது.
இத்தல விருட்சமாக சந்தன மரம் விளங்குவதால் ‘கந்தாரண்யம்’ என்ற பெயரைக் கொண்டுள்ளது. ஸ்ரீ கந்தாரண்யத்துக்கு ஈடாக தபோவனமும் குப்த கங்கை போன்ற தீர்த்தமும் ஸ்ரீவாஞ்சிய லிங்கத்திற்கு ஈடான லிங்கமும் இவ்வுலகில் இல்லை என புராணம் சொல்கிறது. இந்த சுயம்பு லிங்கத்தை எவர் ஒருவர் பக்தியுடன் தரிசிக்கிறாரோ அவர் கைலாயநாதரை நேரில் தரிசித்த சிறப்புப் பெறுவர்.
மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்கள் பாவங்களைத் தீர்ப்பதால் தன்னிடம் சேரும் பாவங்களைப் போக்கிக்கொள்ள கங்கை இறைவனை வேண்டினாள். இறைவனும், ‘இந்த ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் வழிபட்டு பிரார்த்தனை செய்யும்படி கூறினார். கங்கையும் தனது கலைகளில் ஒன்றைத் தவிர மற்ற தொள்ளாயிரத்து தொண்ணூற்றி ஒன்பது கலைகளுடன் ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள தீர்த்தத்தில் ஐக்கியமாகி தனது பாவங்களைப் போக்கிக் கொண்டாள். இத்தலத்து தீர்த்தமும் இதனால், ‘குப்த கங்கை’ எனப் பெயர் பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை நேரத்தில் ஈசனும் பார்வதி தேவியும் பிராகார வலம் வந்து குப்த கங்கை தீர்த்த கிழக்குக் கரையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கி அருள்புரிகின்றனர். குப்த கங்கையில் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயத்தில் எவர் நீராடுகிறார்களோ அவர்கள் உயர்ந்த கதி அடைகின்றனர். விசேஷமாக, கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் முனி தீர்த்தத்தில் நீராடுபவர் எவ்வித பாதகங்கள் செய்திருந்தாலும் பரிசுத்தமாகிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடுவாரயின், ஒரு நொடி நேரத்திற்குள் தூய்மை அடைவர் என்பது புராண வரலாறு.
ஸ்ரீவாஞ்சியம் திருத்தலத்தில் எமதர்மனுக்கு தனிச் சன்னிதி இருப்பது சிறப்பு அம்சம். அக்னி மூலையில் எமனுக்கும் சித்திரகுப்தனுக்கும் தெற்கு நோக்கி தனிச் சன்னிதி உள்ளது. மூலவர் வாஞ்சிநாதர் என்னும் திருநாமத்துடன் சற்று உயர்ந்த பாணத்துடன் பெரிய அளவிலான லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் மங்களநாயகி என்னும் திருநாமத்தோடு தரிசனம் தருகிறாள்.
ஸ்ரீவாஞ்சியம் திருத்தலம் சுமார் ஐந்நூற்று எட்டு அடி நீளமும் முன்னூற்று இருபதுஅடி அகலமும் உடையது மூன்று கோபுரங்களுடன் மூன்று பிராகாரங்கள் உள்ளன. ஸ்ரீவாஞ்சியம் திருத்தலத்தில் சிவபெருமான் எமனுக்கு வரம் அளித்ததால் இங்கு எமதர்மராஜனுக்கு முதல் வழிபாடு நடைபெறுகிறது. குப்த கங்கை தீர்த்தத்தில் நீராடி முதலில் எமனை வழிபட்ட பிறகு கோயிலில் மற்ற வழிபாடுகளை செய்ய வேண்டும் என்பது மரபாகும்.
ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் எவர் ஒருவர் ஒரு நிமிடமாவது அமர்கிறாரோ அல்லது ஸ்ரீவாஞ்சியம் செல்ல வேண்டும் என மனதார நினைத்தால் கூட போதும், அவரது ஊழ்வினை நீங்கி நற்கதி பெறுவர் என்பது முனிவர்களின் வாக்கு. கும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழித்தடத்தில் அச்சுதல மங்கலத்தில் இருந்து தெற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஸ்ரீவாஞ்சியம்.