

காஞ்சிபுரம் என்றாலே கோவில்களின் நகரம் என்பதுதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். இங்கு சைவ சமயத்தின் 5 முக்கிய தலங்களான பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது உலக புகழ்பெற்ற ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவில் ஆகும். திருக்கச்சியேகம்பம் என்று புராணங்களால் போற்றப்படும் இந்த கோவில் தனது தொன்மையும், வரலாற்று சிறப்பையும் ஆன்மிக அற்புதங்களையும் கொண்டு பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுயம்பு மூர்த்தியாக மணல் லிங்கமாகவே (பிருத்வி லிங்கம்) காட்சியளிக்கிறார். இவருக்கு பொதுவாக அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
காரணம் மணலால் ஆன லிங்கம் என்பதால் கரைந்து விடக்கூடாது என்பதற்காகவே அபிஷேகங்கள் லிங்கத்தின் ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன. புனுகு மற்றும் வாசனைப் பொருட்கள் பூசப்பட்டு, வெள்ளிக் கவசத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இந்த கோவிலில் மிகவும் சிறப்பு வாய்ந்தது, கருவறைக்கு அருகில் அமைந்துள்ள தல விருட்சமான மாமரம் ஆகும். சுமார் 3,500 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இந்த ஒற்றை மாமரத்தின் பெயராலேயே (ஏகம் + ஆம்ரம் = ஏகாம்ரம்) இறைவன் ஏகாம்பரநாதர் என்று அழைக்கப்படுகிறார். இந்த மாமரம் 4 கிளைகளாக பிரிந்து காணப்படுகிறது. இந்த 4 கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வணம் என 4 வேதங்களை குறிக்கின்றன.
மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த 4 கிளைகளில் இருந்தும் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என 4 விதமான சுவைகளை கொண்ட மாம்பழங்கள் விளைகின்றன. இந்த தெய்வீக மாமரத்தின் அடியில்தான் சிவபெருமான், பார்வதிக்கு காட்சியளித்து திருமணம் செய்து கொண்ட திருமணக்கோலமும் சோமஸ்கந்த வடிவில் அமைந்துள்ளது.
நிலத்தையே லிங்கமாகக்கொண்டு, ஏலவார்குழலியின் அணைப்பில் உருகியிருக்கும் இந்த ஏகாம்பரநாதரை தரிசிப்போர், முக்தியை அடைவர் என்பது ஐதீகம்.
இந்நிலையில் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று கிட்டதட்ட 17 ஆண்டுகள் ஆனநிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, 28 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 38 திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இந்த திருப்பணிக்கு, இந்து அறநிலைத்துறை சார்பில் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள ரூ.16 கோடி நிதி உபயதாரர்கள் மூலம் வசூலிக்கப்பட்டு செய்யப்பட்டுள்ளது.
திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் வருகிற 8-ந்தேதி (திங்கள் கிழமை)இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த புதிய தங்கத்தேர் செய்யும் பணியும் நிறைவடைந்துள்ளது. 23 அடி உயரம், 15 அடி நீளம், 13 அடி அகலம் கொண்ட இந்த தங்க தேருக்காக 23 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மரத்திலான தேரில் தங்க வேலைப்பாடு செய்யும் 40 சிற்பிகள் தங்கத்தகடுகளை அழகிய கலையத்துடன் பொருத்தியிருக்கிறார்கள். தங்கத்தேரை பாதுகாப்பாக நிறுத்துவதற்காகவே 18 லட்சம் ரூபாயில் மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் உள்ள 1000 கால் மண்டபம் கடந்த 12 ஆண்டுகளாக செயல்படாமல் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மண்டபமும் தற்போது புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் அதாவது வரும் 8-ம்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 8-ந்தேதி மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, பல்வேறு கட்ட திருப்பணிகள் அதிவேகமாக நடந்து வருகின்றன. பிரம்மாண்டமான ராஜகோபுரங்களில் ஒன்றின் உச்சியில் புனித நீர் கொண்டு செல்ல இரும்புப் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
பல்வேறு நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர் நிரம்பி குடங்களுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து சிவ வாத்தியங்கள், மங்கள வாத்தியங்கள் இசைக்க, புனித நீர் குடங்கள் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள யாகசாலை மண்டபத்தில் வைக்கப்பட்டு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கோபூஜை, நவக்கிரக ஹோமம் நடைபெற்று வருகிறது.
17 ஆண்டுகளுக்குப்பின் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்கள் மிகுந்த எதிர்பார்புடன் காத்திருக்கின்றனர்.