

சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோயில், சுமார் 3000 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான, நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயிலாகும். கேரள மாநில பத்தினம்திட்டா மாவட்ட எல்லையில் உள்ள நீரேற்றுபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது இக்கோயில். பம்பை ஆறும் மணிமலை ஆறும் மாலை போல் சூழ்ந்து ஓட, நடுவில் இக்கோயில் அமைந்துள்ளது. ‘பெண்களின் சபரிமலை’ என்று போற்றப்படும் இது, சபரிமலையில் எப்படி 10 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறதோ, அது போலவே, இந்தக் கோயிலிலும் ஆண்கள் நுழைய அனுமதி கிடையாது. இது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாகும்.
இத்தகைய சிறப்பு மிக்க இந்த பகவதி அம்மன் கோயில் திருவல்லா ரயில் நிலையத்தில் இருந்து தகழி செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கோட்டயம், சங்கனாச்சேரி, ஆலப்புழை, செங்கன்னூர் ஆகிய இடங்களில் இருந்து செல்ல பஸ் வசதி உண்டு.
திருக்கார்த்திகை அன்று இங்கு நடைபெறும் பொங்கல் வழிபாடு மிகவும் பிரபலமானது. சக்குளத்து அம்மனை தரிசனம் செய்து பிரச்னைகள் தீர்ந்தவர்களும், நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், திருக்கார்த்திகை தினத்தில் பொங்கல் வைத்து தேவியின் அருளைப் பெறுகிறார்கள். இந்த நாளில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக லட்சக்கணக்கான பெண்கள் மைதானங்களிலும், சாலையின் இரு புறங்களிலும் நின்றபடி, புதிய மண் பானைகளில் ஒரே நேரத்தில் பொங்கலிடுவார்கள்.
கோயில் முன்புறம் வைக்கப்பட்டுள்ள அடுப்பில் முக்கிய கோயில் பூசாரி, சுப முகூர்த்த வேளையில் பொங்கல் வைப்பதற்கான அடுப்பில் தீயை பற்ற வைத்து தொடங்கி வைப்பார். அப்போது பருந்து ஒன்று இக்கோயிலை வட்டமடித்து செல்வது முக்கிய அம்சமாகும்.
அதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பெண்கள் தாங்கள் அமைத்துள்ள அடுப்பில் தீயை மூட்டி பொங்கலிடுவார்கள். பின்னர் பூசாரிகள் 10 தட்டுகளை எடுத்துச்சென்று நைவேத்திய தீர்த்தம் தெளிப்பார்கள். தேவியின் அனுகிரகத்தால் நல்ல நிலையில் இருப்பவர்களும், வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருப்பவர்களும் பொங்கல் விழா நடைபெறும் நாளில் குடும்ப சகிதமாக இங்கு வந்து பொங்கல் வைத்து தேவியின் அருளைப் பெற்றுச் செல்கிறார்கள்.
கார்த்திகை மாத திருக்கார்த்திகையன்று இரவு இங்கு சொக்கப்பனை ஏற்றப்படுகிறது. கேரளாவில் இந்த நிகழ்வு நடக்கும் ஒரே அம்மன் கோயில் இதுவாகும். மார்கழி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில், பெண்களை சக்தி வடிவமாகப் பாவித்து, அவர்களின் பாதங்களைக் கழுவும் ‘நாரி பூஜை’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இத்தலத்து மண்ணுக்கு மகத்துவம் அதிகம். ஒவ்வொரு துகளையும் மாணிக்கம் போல் கருதுகின்றனர். கோயில்கள் கட்டுவதற்கும், வீடு, கட்டடம் கட்டுவதற்கும் இங்கிருந்து ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிக் கொண்டு போகிறார்கள். இதனால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
இங்கு ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் வெள்ளிக்கிழமை பல்வேறு மூலிகைகளைக் கொண்டு தீர்த்தம் தயாரித்து, தேவிக்கு அபிஷேகம் செய்கிறார்கள். பின்னர், அந்தத் தீர்த்தத்தை பிரசாதமாக பக்தர்களுக்குத் தருகிறார்கள். அதை குடித்தால் தீராத நோய்கள் தீர்ந்து விடும் என்பது ஐதீகம்.
போதைக்கு அடிமையானவர்களுக்கு இங்கு விசேஷ பிரார்த்தனை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமையன்று அவர்களை அழைத்து வர வேண்டும். கோயில் தலைமை பூசாரி சில மந்திரங்களைக் கூறி, அவற்றை உச்சரிக்குமாறு போதைக்கு அடிமையானவர்களிடம் கூறுகிறார். தொடர்ந்து அவர்களை வெற்றிலை, மிளகு பிரசாதத்தை சாப்பிட வைத்து, தேவியின் வாளைத் தொட்டு சத்தியமும் வாங்கிக் கொள்வார். அதன் பிறகு மெகா குடிகாரர்கள் கூட குடியை விட்டு விடுவார்கள் என்கிறார்கள்.
இங்கு வெற்றிலை ஜோதிடம் மிகவும் பிரபலமான ஒன்று. ஏழு வெற்றிலையும், ஒரு பாக்கையும் கொண்டு சொல்லப்படும் ஜோதிடம் பிரசித்தி பெற்றது. இந்த ஜோதிடம் பார்க்க கேரள மக்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் வருகிறார்கள்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தீராத வியாதியை உடையவர்கள், மனநிலை சரியில்லாதவர்கள், தாங்க முடியாத துக்கத்தில் இருப்பவர்கள், வியாபாரத்தில் நஷ்டமடைந்தவர்கள், எப்போதும் பயந்து கொண்டே இருப்பவர்கள் இங்கு வந்து வணங்குகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி, குங்கும அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.