வீட்டுலயே சூப்பர் வெகேஷன்!

வீட்டுலயே சூப்பர் வெகேஷன்!

ம்ம வீட்டுக் குட்டீஸ்களுக்கு ஸ்கூல் லீவு விட்டாச்சு! முன்னெல்லாம் சம்மர் வெகேஷன்னாலே பாட்டி வீடுகளுக்கு மாசக்கணக்கில் கேம்ப் தூக்கிடுவோம். அங்க வர்ற மற்ற கஸின்ஸ்களோட ஊரையே அதகள மாக்கிடுவோம். ஆனா, இப்ப அந்த ட்ரெண்டே மாறிப் போச்சு! குழந்தைகள், பூட்டிய வீட்டுக்குள் டீ.வி., கம்ப்யூட்டர் முன்பு தவம் கிடப்பதைத் தவிர எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் துடிப்பான இந்தக் காலக் குழந்தைகளுக்கு சம்மர் வெகேஷன் என்றாலே எரிச்சல் தரும் போர்’விஷயம்! அவர்களைச் சமாளிப்பது என்பதோ பெற்றோர்களுக்கு டெரர் அனுபவமாகிவிட்டது. கோடை விடுமுறையை குட்டீஸ்களின் ரசனைக்குரிய ஜாலி டைமாக மாற்றுவது எப்படி?

டாக்டர். வெங்கட்ரமணி, (குழந்தைகள் ஆலோசகர்)

ள்ளிப் படிப்பு குழந்தைகளது நினைவாற்றலைத்தான் பெரும்பாலும் வளர்க்கிறதே தவிர அறிவாற்றலை வளர்ப்பதாக இருப்பதில்லை.

இயந்திரங்கள் போல் அல்லவா சிறு வயதிலேயே அவர்கள் இயங்குகிறார்கள்! இயந்திரங்கள் கூட பழுது பார்க்கவும், ஓய்வு கொடுக்கவும் நிறுத்தி வைக்கப்படும். ஆனால், இந்தக் காலத்துக் குழந்தைகளை, பள்ளி ஓட்டம் போதாதென்று, பாடத்தில் அதிகத் தேர்ச்சி பெற வேண்டுமென்று விடுமுறை நாட்களிலும் ஓட விடுகிறோமே. படிப்பு என்பது ஒரு சடங்கு போல் இருப்பதால், படிப்பு சம்மந்தப்பட்ட விஷயம் நம் நாட்டில் சுவாரஸ்யமாக இருப்பதில்லை. அதோடு சேர்ந்து விடுமுறை நாட்களிலும் அவர்களை மாற்றி மாற்றி ஏதாவது வகுப்புகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தால், அது மூளைக்கு அழுத்தத்தைத் தருவதோடு வெறுப்பையும் உண்டாக்குகிறது.

அவர்களுக்குப் பிடிக்காத வகுப்புகளில் சேர்ப்பதையும் சின்ன வயதில் நீங்கள் கற்றுக் கொள்ள முடியாத, நிறைவேறாத ஆசைகளை அவர்களுக்குக் கற்றுத் தருவதன் மூலம் பூர்த்தி செய்துகொள்வதையும் தவிர்க்க வேண்டும். பெரும்பாலான கோடை கேம்புகளில் வரைவது, கத்தரிப்பது போன்ற ஒரே மாதிரியான போன்ற ஒரே மாதிரியான விஷயத்தைத்தான் கற்றுத் தருகிறார்கள். உங்களுக்கு நேரமும் பொறுமையும் இல்லாததைப் பயன்படுத்திக்கொண்டு மிளகாய் அரைக்கிறார்கள். கும்பலாக அமர்த்தி வகுப்புகள் நடத்தினால் தனிப்பட்ட அனுபவம் கிடைக்காமல் பள்ளி வகுப்புகள் போல அலுப்பூட்டி விடுமாம்.

“யார் இந்த வகுப்புக்கெல்லாம் கொண்டுவிட்டுக் கூட்டிக்கொண்டு வரது, காசு வேற எக்கச்சக்கமா வாங்கறாங்க” என்று நினைப்பவர்கள் உயிரில்லாத ஜடப்பொருள்கான தொலைக்காட்சி, கணினி ஆட்டம் என்று விட்டு விடுகிறார்கள். பெரியவர்களுக்குப் பொறுமை தட்டுப்பாடு, வேலை பார்க்கும் பெற்றோருக்கு நேரத் தட்டுப்பாடு, தாத்தா, பாட்டி, ஒன்றுவிட்ட சகோதரர்கள் போன்ற உறவுகளுக்கும் தட்டுப்பாடாகிவிட்டது. அதனால் விடுமுறை நாட்களைச் சுமையாக நினைக்காமல், அவர்களுக்குச் சுமையாக ஆக்காமல், மகிழ்ச்சியான நேரமாக மாற்றுவது அவர்களுக்கு நல்லதொரு மாணவப் பருவத்தை அமைத்துக் கொடுக்கும். குழந்தைகள் ஆசைப்படுவதை செய்ய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மனிதர்களோடும், சக வயதினரோடும் பழகுவதில்தான் விட்டுக் கொடுத்தல், அன்பு, தோல்வியை எதிர்கொள்ளுதல் போன்ற வாழ்க்கையின் இன்றியமையாத விஷயங்களை உணர்கிறார்கள்.

உங்கள் கோணத்திலிருந்து விடுமுறையில் நெறியாள்வதைப் பார்க்காமல், குழந்தைகளின் கோணத்திலிருந்து யோசியுங்கள். குழந்தைகளாக நீங்கள் விளையாடியதையும், குறும்பு செய்ததையும் நினைவு கூர்ந்து அவற்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்கள் பேசுவது உப்புச் சப்புப் பெறாத விஷயம் என்று ஒதுக்காமல், அதைக் கேட்பதற்காகவென்று நேரத்தை ஒதுக்குங்கள். அவர்களுடைய கேள்விகள் அனாவசியம் என்று நினைத்தோ பதில் தெரியவில்லை என்பதாலோ மழுப்பி விடாதீர்கள். உங்கள் கட்டளைகளுக்கு அணிபடியும் அடிமைபோல் நடத்துவதும் தவறு; செல்லம் என்ற பெயரில் அவர்கள் கேட்கும் எல்லாவற்றும் அடிபணிவதும் தவறு. “இல்லை” என்பதை ஏற்றுக்கொள்ளப் பழகுவது மிக அவசியம். “டி.வி. பாக்கக்கூடாது” என்றால் இல்லைதான். முதலில் இல்லை என்று சொல்லி, திட்டி, கடைசியில் சரி என்பது அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும். உங்களுக்குத் திடமான சிந்தனை இல்லையென்றாகிவிடும். வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு முகமூடிகளை நீங்கள் அணிந்து கொள்ளத்தான் வேண்டும்; அவர்களுக்குப் புரிய வைக்க மாறுபட்ட யுக்திகளைக் கையாள வேண்டும்.

அவர்களுக்கு இளம் வயதில் நிறைய எனர்ஜி இருக்கிறது. அதைச் சரியான முறையில் பயன்படுத்த உதவுங்கள். நன்றாகத் தூங்கட்டும். அது அவர்களது வளர்ச்சிக்கு உதவும். “தூங்கினா உருப்பட மாட்டே” என்று சபிக்காதீர்கள். தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பதைவிட தூங்குவது தவறான விஷயமில்லை. அவர்கள் பாடுவதும், ஆடுவதும், நடிப்பதும் மிக நல்லது; ஆனால், திரையில் இவற்றை மற்றவர்கள் செய்வதைப் பார்த்து மனதை வீணாக்குவதுதான் தவறு.

விஷயம் இதுதான். குழந்தைகளுக்கு விடுமுறை என்பது பள்ளி நாட்களிலிருந்து மாறுபட்டதாய், மகிழ்ச்சி யானதாய், ஆக்கப்பூர்வமாய் இருக்க வேண்டும். அதற்கு பெற்றோர் நேரத்தை ஒதுக்குவதோடு, ஆர்வம், புதுமை போன்றவற்றைக் காட்டி, குழந்தை வளர்ப்பை முக்கியமான, அதே நேரத்தில் மகிழ்ச்சிகரமான அனுபவமாக ஆக்குவது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com