0,00 INR

No products in the cart.

பரிபூரண அருள் தரும் பாகம்பிரியாள்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானைக்குத் தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருவெற்றியூர் (திருவொற்றியூர் அல்ல). இங்கிருக்கும் பாகம்பிரியாள் கோயில் இப்பகுதி மக்களின் சக்தி தெய்வமாக விளங்குகின்றது. வயலில் எது விளைந்தாலும் முதல் படையல் பாகம்பிரியாள் அம்மனுக்குத்தான்!

தல வரலாறு :
புராண காலத்தில் இப்பூவுலகை மகாபலி சக்கரவர்த்தி என்ற மன்னன் அரசாட்சி செய்து வந்தான். அவனது ஆட்சியில் மாதம் மும்மாரி பொழிந்தது. மக்கள் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்தனர். மன்னனும் மக்கள் கேட்பதையெல்லாம் வாரி வாரி வழங்கினான்.

மன்னனையே தெய்வமாக வணங்கினர்!
மக்களின் கண்களுக்கு மகாராஜா மகாபலி சக்கரவர்த்தி வாழும் தெய்வமாகவே தோன்றினார். மக்கள் கடவுளையே மறந்து விடுவார்களோ என்றுகூட தோன்ற ஆரம்பித்து விட்டது. நாளுக்கு நாள் மகாபலியின் புகழ் எல்லா உலகிலும் பரவத் தொடங்கியது. இதே நிலை நீடித்தால் நம்மை மறந்து விடுவார்களே என்று தேவலோகத்திலிருப்பவர்களும் முனிவர்களும் வருந்தத் தொடங்கினர். இதையெல்லாம் கேள்விப்பட்ட நாரதர், ”இப்படியே போனால் மக்கள் எம்பெருமானையே மறந்து விடுவார்கள். பூவுலகில் தங்களுடைய பெருமை குன்றிவிடும்” என சிவபெருமானிடம் முறையிட்டார்.

மகாபலியின் முற்பிறவிக் கதை :
சிவபெருமான் நாரதருக்கு மகாபலியை பற்றி கூறினார். ”இந்த மகாபலி போன பிறவியில் எலியாகப் பிறந்தவன். எனது சன்னிதியில் இருக்கும் தூண்டாமணி விளக்கு ஒருமுறை அணைந்துவிடும் நிலை ஏற்பட்டபோது, அதன் திரியைத் தூண்டிவிட்டு அணையாமல் பார்த்துக்கொண்டான். அதனால், ஐம்பத்தாறு தேசங்களையும் கட்டி ஆளும் பாக்கியத்தை நான்தான் வழங்கினேன். அதனால், நானே அவனை அழிப்பது பாவம்” எனக் கூறிவிட்டார்.

தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். மகாவிஷ்ணு வாமன அந்தணர் வேடமேற்றுச் சென்று மகாபலியிடம், மூன்றடி மண் வேண்டுமெனக் கேட்டார். அப்படியே ஆகட்டுமென வழங்கினான் மகாபலி!
மகாவிஷ்ணு முதல் அடியை பூமியாகவும், இரண்டாவது அடியை ஆகாயமாகவும் அளந்துவிட்டு, மூன்றாவது அடியை எங்கு வைக்க வேண்டும் என வினவ, தனது சிரசையே காண்பித்தான் மகாபலி சக்கரவர்த்தி.

மகாவிஷ்ணுவின் பாதம் தலையில் பட, மண்ணுள் மறைந்தான் மகாபலி. ஆனால், மகாபலி செய்த தர்மத்தை எண்ணிய தர்மதேவதை மகாவிஷ்ணுவின் காலைப் பற்றி கண்ணீர் விட்டாள். அப்போது, அந்தக் கண்ணீரின் உஷ்ணம் தாளாமல், அவரது காலில் புற்று வைத்தது. இந்தப் புற்றை அகற்றுவதற்கு மதுரை மீனாட்சி அம்மனிடம் யோசனை கேட்டார் விஷ்ணு.

திருவாடானையில் இருக்கும் ஆதி ரத்தினேஸ்வரரைக் கேட்டால் இதற்கு ஒரு வழி பிறக்கும் என்றார் மீனாட்சி. அதன்படி, மகாவிஷ்ணு அங்கு சென்றார். ஆதி ரத்தினேஸ்வரர், “இங்கிருந்து தென்கிழக்கே ஜெயபுரம் எனும் ஊர் உள்ளது. அங்குள்ள ‘வாசுகி தீர்த்த’த்தில் சூரிய உதயத்துக்கு முன் நீராடி வேம்பு மர வனத்தில் இருக்கும் சிவலிங்கத்தை வழிபட்டால், காலில் உள்ள புற்று போகும் என்றார். மகாவிஷ்ணுவும் அங்குள்ள வில்வ மரத்தினடியில் சுத்த சுயம்புவாக இருக்கும் ஈசனை வழிபட்டார். ஈசன் உமையொரு பாகனாகக் காட்சி தந்தார். ஈசனுக்கு இடப்பாகத்திலிருக்கும் தேவி பாகம் பிரியாமல் காட்சி தந்ததால், ‘பாகம்பிரியாள்’ எனப் பெயர் பெற்றார். ஜெயபுரம் என்னும் இந்த ஊர்தான் திருவெற்றியூர் என காலப்போக்கில் அழைக்கப்படலாயிற்று.

சிறப்புகள் :
பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள, திருவாடானை வட்டத்தில், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில், தொண்டி கடற்கரை அருகே திருவெற்றியூர் எனும் கிராமத்தில் அமைந்த சிவத்தலமாகும். சுற்று வட்டாரப் பகுதிகளில் இக்கோயிலை பாகம்பிரியாள் கோயில் என்றே அழைக்கிறார்கள். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.
இங்குள்ள விவசாயப் பெருங்குடி மக்கள், தங்கள் வயலில் விளைந்த முதல் விளைச்சல் தானியங்கள், காய்கள், பழங்கள் மற்றும் மலர்களை இங்குள்ள அம்பாளுக்குத்தான் முதலில் படையலிட்டு வணங்குவார்கள்.

ஈசனுக்கும் அம்பாளுக்கும் ஒரே அர்ச்சனை பூஜைதான். முதலில் சிவனுக்கும் அடுத்து அம்பாளுக்கும் நடைபெறுகிறது. தனித்தனியாக அர்ச்சனை செய்யப்படுவதில்லை.
கோயில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். தென்மாவட்ட மக்களுக்கு பாகம்பிரியாள் கலங்கரை விளக்காகத் திகழ்கிறாள்.

இக்கோயிலில் வியாழக்கிழமை இரவு தங்கி, வெள்ளிக்கிழமை காலையில், கோயில் முன் உள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி, பாகம்பிரியாள் உடனுறை பழம்புற்றுநாதர் எனும் வன்மீகநாதரை வழிபடுவதால் தோல் நோய்கள், விஷக்கடிகள் நீங்கும் என்பது தொன்ம நம்பிக்கையாகும்.

திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் திருக்கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்ய உகந்தது. திருமணம், குழந்தை பாக்கியம், ஆரோக்கியத்திற்கு இத்தலக் கோயிலுக்கு வேண்டிக் கொள்கின்றனர். பக்தர்கள் வியாழனன்று மாலையில் அம்பிகையை வணங்கி, அன்றிரவு கோயிலிலேயே தங்கி, மறுநாள் வாசுகி தீர்த்தத்தில் நீராடி திரும்புகின்றனர்.

திருமண தோஷம் உள்ளவர்கள் வில்வ மரத்தடியில் உள்ள புற்றடி விநாயகரை பாலபிஷேகம் செய்தும், அருகிலுள்ள நாகருக்கு மாங்கல்யம் அணிவித்தும் வணங்குகின்றனர். தீராத நோய்களையும் தீர்ப்பவளாக அம்பாள் பாகம்பிரியாள் விளங்குவதால் இறைவிக்கு மருத்துவச்சி அம்மன் என்ற பெயரும் உண்டு. புற்றுநோய் தீர அம்பிகையை வணங்கி நம்பிக்கையுடன் தீர்த்தம் வாங்கி குடித்துச் செல்லலாம். அம்பிகையின் விபூதியையும் வேப்பிலையையும் விஷம் தீண்டப்பட்டவர் பெற்று உண்டால் குணமாகித் திரும்புவார் என்பது நம்பிக்கை.

சிவபெருமானின் கழுத்தை அலங்கரிக்கும் வாசுகியின் வழி வந்த நாகங்கள் இப்பகுதியில் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே, கோயிலுக்குள் இருக்கும் புற்றுக்குக் கோழி முட்டையைக் காணிக்கையாகக் கொடுக்கும் வழக்கம் தொடர்கிறது. இது விஷம் முறிக்கும் திருத்தலமாகக் கருத்தப்படுவதால் விஷக்கடிகள், தீராத நோய்களுக்கு வாரக் கணக்கில் இங்கே தங்கி இருந்து வழிபாடு நடத்துகிறார்கள்.


கோயில் அமைப்பு :
கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயத்திற்கு ராஜகோபுரமில்லை. கோயிலின் முன்புறம் வாசுகி தீர்த்தம் உள்ளது. கோயில் மண்டபத்தில் உள்ள பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தியைக் கடந்து சென்றால் அர்த்த மண்டபம் உள்ளது. மண்டபத்துடன் கூடிய கருவறையில் மூலவர் பழம்புற்றுநாதர் என்ற வன்மீகநாதர் சுயம்பு லிங்கமாகக் காட்சியளிக்கிறார். இறைவன் சன்னிதிக்கு முன்னால் வலதுபுறம் தெற்கு நோக்கி அம்பாள் பாகம்பிரியாள் சன்னிதி அமைந்துள்ளது.

சுற்றுப் பிராகாரத்தில் தல விருட்சம் வில்வ மரமும், மரத்தடியில் விநாயகர், நாகர், கன்னி மூலையில் விநாயகர், அதையடுத்து வள்ளி தெய்வானையுடன் முருகர், சண்டேஸ்வரர், பைரவர், நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. இத்தல விநாயகர் நினைத்ததை முடிக்கும் விநாயகர் என்ற பெயருடன் விளங்குகிறார்.

இத்தலத்திலுள்ள கோஷ்ட தட்சிணாமூர்த்தி வித்தியாசமானவர். கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்வதைப் போன்று அமையாமல், தானே தவ நிலையில் உபதேசம் செய்வது போன்று தட்சிணாமூர்த்தி திருவுருவின் கீழ் பிரகதீஸ்வரர் என்ற சிவபெருமானே உபதேசம் கேட்பதாக அமைந்துள்ளது ஓர் அரிய காட்சியாகும்.

சிறப்பு நாட்கள் :
வியாழன் மாலை முதல் வெள்ளி மாலை வரை.

திருவிழா :
ஆடி மாதத்தில் பாகம்பிரியாள் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறுகிறது.

அமைவிடம் :
திருவாடானை – தொண்டி நெடுஞ்சாலையில் ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள, காடாகுடி விலக்கிலிருந்து வலப்புறம் செல்லும் சாலையில், ஆறு கி.மீ. தொலைவில் திருவெற்றியூர் அமைந்துள்ளது.
– எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

1 COMMENT

  1. பாகம்பிரியாள் கோவில் பற்றி படித்ததும் அங்கு சென்று தரிசிக்க ஆவல்கொண்டேன். கோவில் பற்றிய செய்திகள் பயனுள்ளதாக இருந்தது.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...