0,00 INR

No products in the cart.

சங்கடம் தரும் சந்திப்புகள்; சமாளிக்க சில யோசனைகள்! -1, புதிய தொடர்

– ஜி.எஸ்.எஸ்.
ஓவியம்: சுதர்ஸன்

மனிதர்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம். இது நமக்குத் தெரிந்ததுதான். சில மனிதர்களுடன் விரும்பியோ, விரும்பாமலோ நாம் தொடர்ந்து பழக வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் விரும்பத்தகாத குணம் கொண்டவர்களாக இருந்தால் நமக்குச் சங்கடம் ஏற்படும். சில சமயம் தாங்கமுடியாத கோபமும் சொல்லில் அடங்காத வருத்தமோகூட ஏற்படலாம். இப்படிப்பட்ட வேண்டாத குணம் எதனால் இவர்களுக்கு வருகிறது? அதைவிட முக்கியமாக இதுபோன்ற மனிதர்களைச் சமாளிப்பது எப்படி? இந்தக் கேள்விகளுக்கு பதில் கூறி உதவும் வகையில்தான் இந்தத் தொடர் அமைகிறது.
முதற்கண் நாம் சந்திக்கப்போவது…

தற்பெருமை தர்மலிங்கம்
தர்மலிங்கம் எப்போதும் தற்பெருமை அடித்துக்கொள்வார். அதில் பொய்களும் ஏராளமாகக் கலந்திருக்கும். முதல்முறை அவரைச் சந்திக்கும் அப்பாவிகள் வாயைப் பிளந்துகொண்டு நிற்பார்கள். இந்தத் துறையில்தான் என்றில்லை, எல்லாத் துறை வி.ஐ.பி.க்களுடனும் தனக்குத் தொடர்பு உண்டு என்பார் அவர்.

‘‘மணிரத்னம் ரொம்ப கம்மியா பேசுவார்னு நீங்க நினைச்சுக்கிட்டிருக்கீங்க. என்கிட்டே அவர் பேசினா சுலபத்திலே நிறுத்தமாட்டார்’’ எனும்போது, அது நிச்சயம் இயக்குனர் மணிரத்னமாக இருக்காது என்றுதான் நீங்கள் நினைப்பீர்கள்.

ஆனால், தர்மலிங்கம் அசராமல் தொடருவார். ‘‘ரோஜா படத்தின் வெற்றியிலிருந்து கடல் படத்தின் தோல்வி வரை நான் அவரிடம் அக்குவேறு ஆணிவேராகப் பிச்சுப் பிச்சு மேய்ஞ்சுடுவேன். ‘நீங்க சொல்றது சரிதான் சார்’னு ஒத்துப்பார். ‘இருவர்’ படத்துக்கு அவரை ஐஸ்வர்யா ராயைப் போடச் சொன்னதே நான்தான்” என்பார்.

பல வி.ஐ.பி.க்கள் தன்னைச் சந்திக்க தன் வீட்டுக்கே வருவதுண்டு என்பார். அவ்வளவு ஏன், முன்னாள் தமிழக முதல்வருக்கு அப்போலோவில் சிகிச்சை நடந்தபோது அவரைப் பார்க்க வந்த அத்தனை அரசியல் வி.ஐ.பி.க்களும் தன்னையும் சந்தித்தார்கள் என்பார். ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்ட பிறகுதான் கொஞ்சம் அமைதியடைந்தார்.

தமிழில் நம்ம தர்மலிங்கத்துக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை ‘நிஜமாகவா?’ என்பதுதான். அவர் பேச்சைக் கேட்கும் யாராவது ‘நிஜமாகவா?’ என்று கேட்டுவிட்டால் பெரும் சீற்றம் கொள்வார்.

ஓவியம்: சுதர்ஸன்

‘‘அப்ப நான் பொய் சொல்றேன்றியா?’’ என்பார். உன்னிடம் பொய் சொன்னா, நீ எனக்கு பங்களா கட்டித் தரப்போறியா? அல்லது உன்கிட்டே பொய் சொன்னா எனக்கு லாட்டரியிலே ஒரு கோடி விழப்போகுதா?’’

இப்படிப்பட்ட கேள்விகளால் எதிராளி துவண்டு விடுவார். ஆனால், தர்மலிங்கத்துக்கு தன் பேச்சிலிருந்தே வேறொரு கோணம் பிடிபட்டுவிடும்.

‘‘எனக்கு ஒரு கோடி ரூபாய் கிடைச்சது தெரியுமா?’’ என்பார்.

‘எப்படி? லாட்டரியிலா?’ என்பார் எதிராளி. ‘நிஜமாவா’ என்று கேட்டு தர்மலிங்கத்தை புண்படுத்திவிட்ட கொடும் செயலை எப்படியாவது சரி செய்து விட வேண்டும் என்ற ஆதங்கம் அவர் மனதில் அழுத்தமாகத் தோன்றியதன் வெளிப்பாடு இது.

தர்மலிங்கம் முகம் சுளிப்பார். ‘‘சிக்கிம் லாட்டரியோ, சுரண்டல் லாட்டரியோ இல்லை. ஆன்லைனிலே ரம்மி விளையாடினேன். ஒரு கோடி கிடைச்சது. அதுவும் முதல் ஆட்டத்திலேயே. அதையெல்லாம் அப்படியே சிவானந்த குருகுலத்துக்கும், செஞ்சிலுவைச் சங்கத்துக்கும், அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கும் சமமா பிரிச்சுக் கொடுத்திட்டேன்’’ என்பார்.

‘‘அதுக்கப்புறமும் ஆன்லைன் ரம்மி விளையாடினீங்களா?’’ என்று எதிராளி கேட்க, தர்மலிங்கத்தின் முகத்தில் ஒரு புன்னகை பரவும்.

‘‘இல்லை. ஒருமுறைன்னா ஒருமுறைதான். அதுதான் தர்மலிங்கம்… அது இருக்கட்டும், ஒரு கோடியை மூணு பேருக்கு சமமா எப்படிக் கொடுக்க முடியும்னு நீ கேட்க வேணாமா? ஒரு வேளை நீ கணக்கிலே வீக்கோ?’’ இந்த இடத்தில் ஒரு சிறு இடைவெளி கொடுத்து எதிராளியின் சங்கடத்தை ரசித்தபடி, ‘‘மூணா பிரித்த பிறகு, பாக்கி ஒரு ரூபாய் இருந்தது. அந்த ஒரு ரூபாயை கோயில் உண்டியலில் போட்டுட்டேன்’’ என்றார். அதாவது, அந்த ஒரு ரூபாயைக்கூட தனக்கென வைத்துக்கொள்ளாத தர்மதுரையாம் அவர்!

அவரிடம் யார் எந்தப் பேச்சை எடுத்தாலும், அதில் தன்னைப் பற்றித்தான் பெருமை அடித்துக் கொள்வார்.

‘‘ஓட்டப் பந்தயத்திலே உசேன் போல்ட்டை அடிச்சுக்க ஆளில்லை’’ என்று யாராவது கூறினால், ‘‘சின்ன வயசிலே நான் அவனை விட வேகமாக ஓடுவேன். சின்னதா காலிலே ஒரு சுளுக்கு ஏற்பட்டது. அதனாலே நான் ஓடுவதை நிறுத்திட்டேன். அப்படி நான் மட்டும் நிறுத்தலேன்னா…?’’ இந்த இடத்தில் தன் கண்களை மூடிக்கொள்வார். தன் கழுத்தில் ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்வார் போல.

இப்படியாக, தற்பெருமை தர்மலிங்கத்தின் அலப்பரிகள் எத்தனை எத்தனையோ!

* * *
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 2012ல் நடைபெற்ற ஆராய்ச்சியில் தன்னைப் பற்றிய விவரங்களைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வதற்கான அழுத்தம் மனித மூளைக்கு அதிகமாகவே இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவு சாப்பிடுவது, உடலுறவு கொள்வது போன்றவற்றில் கிடைக்கும் திருப்தி, தனக்கு நேர்ந்த பாசிடிவ் விஷயங்களைப் பிறரிடம் கர்வத்துடன் பகிர்ந்து கொள்வதிலும் உண்டாகிறதாம்.

‘‘எனக்குத் தற்பெருமை கிடையாது’ என்று கூறுபவர்கள்கூட, தங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமை அடித்துக் கொள்வார்கள். முக்கியமாக பேரன், பேத்திகளைப் பற்றி பெருமை அடித்துக் கொள்ளாத தாத்தா, பாட்டிகள் மிகக் குறைவு. தங்கள் குழந்தைகள் பற்றியும், பேரக் குழந்தைகள் பற்றியும் பேசுவதுகூட ஒருவிதத்தில் தற்பெருமைதான் என்கிறார்கள் மனவியல் நிபுணர்கள். காரணம், அவர்களை நமது நீட்சியாகவே கருதுகிறோம்.

அதுசரி… தற்பெருமை தர்மலிங்கம் போன்றவர்கள் இல்லாத விஷயங்களை எல்லாம் இருப்பதாகக் கூறி பெருமை கொள்வதேன்?

கிரேக்க இதிகாசத்தில் நாஸி என்ற ஒருவன் நீரில் தன் முகத்தைப் பார்த்துவிட்டு, ‘ஆஹா நாம் எவ்வளவு அழகாக இருக்கிறோம்’ என்று எண்ணி கர்வம் கொண்டானாம். ‘தன் அழகுக்கு ஏற்ற மாதிரி ஒரு துணை வேண்டும்’ என்று உலகம் முழுதும் தேடி, அப்படிக் கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டானாம்.
தர்மலிங்கம் போன்றவர்கள் கிட்டத்தட்ட அப்படித்தான்.

தன்னைத்தானே மதிப்பது வேறு; வெறித்தனமாக விரும்புவது வேறு. தன்னைப் பற்றி மிகப்பெரிதாக நினைத்துக் கொள்வதுடன், மற்றவர்களும் தன்னிடம் அதே அளவு கவனமும், மரியாதையும் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இப்படிப்பட்டவர்களால் மற்றவர்களை நேசிக்க முடியாது. இதன் காரணமாக இவர்களுக்கு நல்ல உறவுகளே நீடிக்காது. ஏனென்றால், நம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதும், மற்றவர்கள் உணர்வைப் புரிந்து கொள்வதும் மட்டுமே உறவுகளை வளர்க்கும்.

சரி, இதுபோன்றவர்களை நாம் எப்படிச் சமாளிப்பது? எப்படி எதிர்கொள்வது?

‘நீ ரொம்பவும் தற்பெருமை அடித்துக்கொள்கிறாய்’ என்றோ, ‘வாயைத் திறந்தால் ஒரு உண்மைகூட உங்களுக்கு வராதா?’ என்றோ கூறி விடலாம். ஆனால், இதன் மூலம் அவருக்கும், உங்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பே அறுந்துவிடலாம். காரணம், இது மிகவும் நுட்பமான விஷயம்.

அதற்காக அவர் கூறும் எல்லாவற்றையும் நீங்கள் நம்புவது போலவும் இருக்கக் கூடாது. ‘இவர் நம்புகிறாரா இல்லையா?’ என்கிற சந்தேகத்தை அவருக்குள் விதைத்துவிட்டால் போதும். தானாக அவரது தற்பெருமையின் அளவு கணிசமாகச் குறைந்துவிடும்.

சில எடுத்துக்காட்டுகள். அவர் ஏதோ ஒரு வி.ஐ.பி.யின் பெயரைக் குறிப்பிட்டு புளுகத் தொடங்கினால், ‘என்னுடைய நெருங்கிய நண்பனுக்கு அந்த வி.ஐ.பி.யை நல்லா தெரியும். உங்களுக்கும் அந்த வி.ஐ.பி.க்கும் இருக்கிற நெருக்கத்தை என் நண்பன்கிட்டே சொன்னால் சந்தோஷப்படுவான்’ என்று நீங்கள் கூறினால், அவருக்குப் பதற்றம் தோன்றிவிடும்.

அவர் அதிகமாக தற்பெருமை அடித்துக்கொள்ளும்போது, உங்கள் கைக்கடிகாரத்தை அவ்வப்போது பார்த்துக்கொள்ளுங்கள். ‘இவர் நான் சொல்வதை நம்புகிறார்தான். ஆனால், வேறு ஏதோ வேலை இருக்கிறது’ என்று எண்ணி, ‘மனநிறைவோடு’ தன் பேச்சை நிறுத்திக்கொள்வார். டக்கெனக் கிளம்பி விடுவது உங்கள் சாமர்த்தியம்.
(சந்திப்போம்…)

1 COMMENT

ஜி.எஸ்.எஸ்.
பொருளாதாரம், வங்கியியல், வணிக நிர்வாகம், பணியாளர் மேலாண்மை ஆகியவற்றில் முதுநிலைக் கல்வி பயின்றவர் ஜி.எஸ்.எஸ். என்று பரவலாக அறியப்படும் ஜி.எஸ். சுப்ரமணியன். இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளையும், அருண் சரண்யா என்ற பெயரில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியவர். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் மனநலம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் பல வினாடிவினா நிகழ்ச்சிகளையும்  வழங்கியிருக்கிறார். பல நிறுவன ஊழியர்களுக்கு மனிதவளப் பயிற்சிகளும் ஆங்கில மொழிப் பயிற்சியும் நடத்தி வருகிறார்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

பறக்கும்  பாவைகள்!

0
‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். பகுதி - 7 ரஃபேல் போர் விமானத்தினை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனம் தயாரிக்கிறது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 3,700 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செல்லக்...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி... பகுதி -10 மங்கையர் மலர் விவித பாரதியில் இன்று நாம் கேட்க விரும்பும் பாடல்... 1964 ஆம் ஆண்டு வந்த தேவர் பிலிம்ஸின் "வேட்டைக்காரன் "படத்தில் கேவி மகாதேவன் இசையில் கவியரசு...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

 பாகம் - 4   -சுசீலா மாணிக்கம்   திருக்குறளின் நான்காம் அதிகாரம் 'அறன் வலியுறுத்தல்' "அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது  பொன்றுங்கால் பொன்றாத் துணை" பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப்...

இனியில்லை கடன்!

0
சென்ற வார தொடர்ச்சி... சிறுகதை: நாமக்கல் எம்.வேலு ஓவியம்: தமிழ் அதற்கப்புறம் ராமசாமியிடம் இருந்து எந்த செய்தியும் இல்லை.  எப்போது பணம் கொடுப்பாய் என்று எப்போவும் போல சோமசுந்தரமும் போன் போட்டு கேட்கவுமில்லை.  ஆபரேசன் நல்லபடியாய் நடந்ததா,...

குரு அருள் திரு அருள்!

பகுதி -2 -நளினி சம்பத்குமார் ஓவியம்; வேதா அனைத்தையும் அருளிடும் குருவின் பார்வை சமஸ்க்ருதத்தில் சுபாஷிதம் அதாவது நல்ல அர்த்தங்கள் பொருந்திய வாக்கியம் ஒன்று உண்டு. குருவின் பார்வை என்பது 1011 பார்வைக்குக் கூட ஈடாகாது, அதற்கும்...