விஜயதசமியும் சாயி நாதரும்!

விஜயதசமியும் சாயி நாதரும்!

– எஸ்.ஆர்.எஸ்.ரெங்கராஜன்

புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரியின் ஒன்பது இரவுகளில், அஞ்ஞான இருளை விலக்கும் அம்பிகையை ஞானத்தின் ஸ்வரூபமாகிய கலைமகளாக கடைசி மூன்று இரவுகளில் பூஜிக்கிறோம். அஞ்ஞானத்தின் பல வடிவங்களாகிய அரக்கர்கள் மதுகைடபர், சும்ப, நிசும்பர், ரக்தபீஜன், சண்ட, முசுண்டன், மகிஷாசுரன் போன்றவர்களை வதைக்கிறாள் அம்பிகை. மகிஷாசுர வதம் நடந்து வெற்றி பெற்ற தினமே விஜயதசமி என்று போற்றப்படுகிறது. இந்த விஜயதசமிக்கு மேலும் ஒரு முக்கியத்துவம் உண்டு. அதுதான் ஷீர்டி சாயிபாபா சமாதி அடைந்த தினம்.

பரப்ரம்மம் என்பது எளிதில் அறிய முடியாதது. உருவமற்ற, குணங்களற்ற பொருளை எப்படி உணர முடியும்? அறிய முடியும்? எனவே, கருணையால் உந்தப்பட்டு அது மனித உருவெடுத்து வருகிறது. குருவாகப் பிறப்பெடுக்கிறது. அந்த ஸத்குருவின் பாதங்களில் சரணடைந்து விட்டால் அவர் நமக்கு ப்ரம்மத்தைக் காட்டுவார். அத்தகைய குருமார்களில் ஒருவர்தான் ஷீர்டி சாயிபாபா.

சாயிநாதர் ஷீர்டி கிராமத்தில் திடீரென்று ஒரு நாள் பதினாறு வயது பாலகனாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். அறுபதாண்டு காலம் அவர் ஷீர்டியில் வாழ்ந்து அநேக அற்புதங்களையும் லீலைகளையும் நிகழ்த்தினார். ஆனாலும், மனித உருவெடுத்த யாருக்கும் ஒரு நாள் இறப்பு நிச்சயம்தானே? அது பாமரர் ஆனாலும் சரி, ஞானியர் ஆனாலும் சரி. தான் சமாதி அடைவதற்கு ஏன் விஜயதசமியைத் தேர்ந்தெடுத்தார் சாயிநாதர்?

1918ம் ஆண்டு விஜயதசமியன்று தன் தேகத்தைத் துறந்தார். அது அவர் இயற்கைப் பெருவெளியில் தம்மைக் கலக்க நினைத்த நாள். ஆனால், அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக 1916ம் ஆண்டு விஜயதசமியன்று சூசகமாக அதை உணர்த்தினார்.

1916ம் ஆண்டு விஜயதசமி நாளன்று சாயங்கால வேளையில் ஓர் அற்புதமான லீலையைச் செய்தார் பாபா. அவர் முன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த துனி எனப்படும் ஹோமத்தில் அதற்கு ஆஹுதியாகத் தான் உடுத்தியிருந்த உடைகள் அனைத்தையும் போட்டுவிட்டு நிர்வாணமாக நின்றார். கூடி இருந்தவர்கள், 'சிலங்கண் எனப்படும் நன்னாளில் ஏன் அவ்வாறு செய்தீர்கள்?' என பாபாவைக் கேட்டனர். அதற்கு அவர், 'இதுதான் என்னுடைய சிலங்கண்' எனக் கூறினார். இவ்வாறாக பிறவிக்கடலின் எல்லையைக் கடப்பதற்கு விஜயதசமியே சுபமான காலம் என்று உணர்த்தினார். இரண்டாண்டுகள் கழித்து 1918ம் ஆண்டு விஜயதசமியன்று தன் தேகம் என்னும் ஆடையை யோக அக்னிக்கு ஆஹுதியாகக் கொடுத்தார்.

பாபா விஜயதசமியைத் தேர்ந்தெடுக்க இன்னொரு காரணமும் உண்டு. புது வருடப் பிறப்பு நாள், தீபாவளிக்கு அடுத்த அமாவாசை, விஜயதசமி மற்றும் வைகாசி மாத வளர்பிறை மூன்றாம் நாளில் (திரிதியை) அரை நாள் ஆகியவற்றை மராட்டிய மக்கள் வருடத்தில் சிறந்த மூன்றரை நாட்களாகக் கருதுவர். எனவே, பாபா இவ்வுலகை விட்டுச் செல்லும் நாளாக விஜயதசமியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

1918ம் ஆண்டு விஜயதசமிக்கு சில நாட்களுக்கு முன்பாகவே பாபாவுக்கு ஜுரம் கண்டது. ஏதாவது ஒரு காரணமின்றி உயிரைப் பறிக்க மாட்டான் எமன். பாபாவுக்கு ஜுரம் ஒரு காரணம். அவ்வளவுதான். அது மதிய வேளை, பாபா தன் உடலைத் துறக்கும் நேரம் வந்தது. தன்னுடன் அமர்ந்திருந்தவர்களை உணவு உட்கொள்ளச் செல்லுமாறு கூறினார் பாபா. சுற்றி இருந்தவர்களின் முகத்தில் பிரதிபலித்த சஞ்சலமும் கவலையும் பாபாவின் மனதைத் தடுமாறச் செய்துவிட்டது. உயிர் பிரியும் நேரத்தில் உயிருக்கு உயிரான பக்தர்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாபாவின் மனதில் அன்பின் அலைகள் எழும்பிக்கொண்டே இருக்கும். அவை, அவர் ஸாயுஜ்யம் அடையத் தடையாக இருக்கும் என்பதால் சாப்பிட அனுப்பினார். சரியான நேரத்தில் அறுத்தெறியாவிட்டால் பற்றுகளில் இருந்து மனம் விடுபடாது. ஏகாந்தமான மன நிலையோடு சமாதி ஆக விரும்பினார் பாபா.

அந்திமக் காலத்தில் மனம் சாந்தமுடன் இருக்க வேண்டும். எனவேதான், இறக்கும் தருணத்தில் இறப்பவரின் அருகில் அவர் காதில் விழும்வண்ணம் ராமாயணம், பாகவதம், பகவத்கீதை ஆகியவற்றைப் படிப்பார்கள். அதேபோல், பாபாவும் தான் இறக்கும் தினத்துக்குப் பதினான்கு நாட்களுக்கு முன், 'வஜே' என்ற அடியவரைத் தன் அருகில் அமர்த்தி, இரவும் பகலும் ராம விஜயத்தைப் படிக்க வைத்தார்.

ஞானிகளுக்கு மரணம் ஏது? பாபாவே கூறியபடி சமாதியில் இன்றும் வாழ்கிறார். 'என் சமாதியில் நான் உயிர்த்துடிப்புடன் இருப்பேன். என் எலும்புகளும் பக்தர்களுடன் பேசும்' என்று கூறியவர் ஆயிற்றே. சாயிநாதர் கூறியபடி எல்லோர் இதயங்களிலும் இன்றும் வாழ்ந்து வருகிறார். பக்தர்களின் நன்மைக்காக, அவர்களின் பிறவிப் பிணியைப் போக்குவதற்காக தூய நற்குணங்களுடன் ஒரு உருவெடுத்துக்கொண்டார் சாயி பாபா. சாயி நாதரின் சமாதித் திருநாளில் அவரது நினைவைப் போற்றி அவரது அருளுக்குப் பாத்திரமாவோம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com