

செல்வத்தை அள்ளித் தருபவர் குபேரன். குபேரன் தரிசித்த கோவில்களுக்கு நாம் சென்று வழிபட நமக்குச் செல்வம் குவியும். அவன் தன் செல்வத்தை இழந்து தவித்த போது, பூஜித்த தலங்களை நாம் தரிசித்தால் நல்ல செழிப்புடன் இருக்கலாம். அப்படிப்பட குபேர தலங்கள் சிலவற்றை இப்பதிவில் காண்போம்.
1. செல்லூர்:
மதுரையில் உள்ள இது திருவாப்புடையார் கோவில். சம்பந்தரின் பாடல்பெற்ற தலம். மீனாட்சி அம்மனின் உபகோவிலாகவும் திகழ்கிறது. புண்ணிய சேனன் என்பவன் சகல செல்வத்திற்கும் அதிபதியாக விரும்பினான். இத்தல ஈசனை அகத்தியர் வழிபடச் சொன்னார். தவம் பலித்தது. ஆனால், அவன் அகங்காரத்தால் பல தவறுகள் செய்ய, ஈசன் அவன் ஒரு கண்ணைப் பறித்தார். வருந்தி மீண்டும் தவம் செய்தபோது ஈசன் அவனை மன்னித்து, "இனி உன் பெயர் குபேரன்" என அருளினார். அத்தகைய குபேரன் தோன்றிய தலத்திற்குச் சென்றால் நாம் செல்வ வளம் பெறுவோம்.
2. திருக்கோளூர் வைத்த மாநதி பெருமாள்:
குபேரன் செல்வச் செருக்கோடு இருந்தான். ஒருசமயம் சிவனும் அம்மையும் சேர்ந்து இருக்கும்போது உமையின் அழகை ரசித்தான். உமை அவன் மனதறிந்தாள். சினம் கொண்டு அவனை விகார ரூபம் அடைந்து நிதிகளை இழக்க சபித்தாள். நவநிதிகளும் விலகின. மாநதி பெருமாளை வேண்டி நவநிதிகளை மீண்டும் பெற்றான். இங்கு தீர்த்தமே குபேர தீர்த்தம் தான். இப்பெருமாளை வணங்கியவர்கள் சகலசம்பத்தும் பெறுவார்கள்.
3. திருவண்ணாமலை குபேர லிங்கம்:
இது ஏழாவது லிங்கமாக கருதப்படுகிறது. குபேரனால் வழிபட்ட இந்த லிங்கத்தை தரிசிக்க செல்வம் பெருகும்.
4. திருவானைக்காவல்:
ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில் கிழக்கு கோபுர வாயிலில் நுழைந்ததும் குபேர லிங்கத்தைக் காணலாம். இந்த லிங்கத்தை குபேரன் தவமிருந்து மகாலக்ஷ்மியிடமிருந்து பெற்றான். அவள் திருக்கரத்தால் பெற்று இந்த சுயம்பு லிங்கத்தை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்தான். இந்த லிங்கத்தை சுக்கிர ஓரையில் அர்சித்து வெண் பட்டாடை சமர்ப்பித்து வழிபட, வறுமை நீங்கி செல்வ வளம் பெருகும்.
5. தஞ்சபுரீஸ்வரர்:
குபேரன் இலங்கையை ஆட்சி செய்தபோது இராவணனால் நாடு, நகரம், புஷ்பக விமானம் இழந்து வடதிசையில் வன்னிக்காட்டுப் பகுதிக்கு வந்தான். சுயம்புவாக தோன்றிய அமலேஸ்வரர் என்ற தஞ்சபுரீஸ்வரரை வணங்கி தொண்டுசெய்து வந்தான். ஈசன் மகிழ்ந்து பார்வதிதேவியுடன் காட்சி தந்தார். நவநிதிகள், சித்திகள் தந்து அருள் புரிந்தார். நிதியுடன் சித்தியும் தரும் தலம் இது.
6. அழகாபுரி:
இது குபேரன் உருவாக்கிய இடம். இங்கு குபேர மகாலக்ஷ்மி தனிச் சன்னதியில் அருள் புரிகிறார். தீபாவளியன்று நடைபெறும் குபேர ஹோமம் மிகவும் பிரசித்தி பெற்றது. தஞ்சையிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
7. செட்டிகுளம்:
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடம்ப மரங்கள் நிறைந்த இடமாக இருந்தது. சோழனும் பாண்டியனும் சேர்ந்து கட்டிய கோவிலாகும். இறைவன் ஏகாம்பரேஸ்வரர், இறைவி காமாட்சி அம்மை. பொதுவாக, ஆலயங்களில் குபேரனின் உருவம் சிற்பமாகவோ, சுதை வடிவிலோ, கல் திருமேனியாகவோ காணப்படும். ஆனால், இங்கு கல் தூண்கள், தேவகோட்டம், கோபுர முகம் என்று 12 இடங்களில் குபேரன் சிற்ப வடிவில் காட்சி தருகிறார். அதாவது, 12 ராசிகளுக்கும் இந்த குபேரர்கள் அருள் வழங்குகிறார்கள். இதைத்தவிர மஹா குபேரனின் சிற்பம் ஆலய கோபுரத்தின் வடக்குத் திசையில் உள்ளது. திருச்சி துறையூரிலிருந்து 22 கி.மீ தொலைவில் இது உள்ளது.
8. கீழவேளூர்:
சந்திரகுப்தன் என்ற வைசியன் தன் செல்வங்களை எல்லாம் இழந்து கேடிலியப்பர் எனும் திருப்பெயரோடு அருளும் கீழவேளூர் தலத்தை அடைந்தான். திருக்கோவிலின் நந்தியெம்பெருமான் காலில் விழுந்தான். கோவிலை மும்முறை வலம் வந்தான். ஈசன் கருணைக் கண்களால் அவனைக் கண்டார். இத்தலத்தில் நித்தியவாசம் புரியும் குபேரனுக்கு வைசியனை அடையாளம் காட்டினான். அவன் இழந்த செல்வத்தைச் பெற்றான். இது நாகையில் உள்ளது.
9. கல்லிடைக் குறிச்சி:
இக்கோவில் கருவறையில் வராஹர் பூமாதேவியுடன் அமர்ந்திருக்கும் கோலம் பேரழகாகும். இங்கு குபேரன் தொழுதார். விஷ்ணு தர்மன் என்ற அரசனிடம் குபேரன் இந்த வராஹருக்குக் கோவில் கட்டச் சொன்னான். மேலும், இப் பெருமானை தரிசிப்பவருக்கு செல்வம் பெருகுமாறு பக்தர்களுக்காக குபேரன் கேட்க, அவரும் உறுதி அளித்தார். அரசனும் கோவில் அமைத்தான். இத்தலத்தை வழிபடுபவர்களுக்கு செல்வம் குவியும்.
10. திருத்தேவூர்:
இராவணன் குபேரனிடம் போரிட்டு சகங்க நிதி, பது நிதியை எடுத்துக் கொண்டான். குபேரன் இத்தலத்தில் தேவபுரீஸ்வரரை செந்தாமரை புஷ்பங்களால் அர்ச்சித்து வழிபட்டான். ஈசன் அருளால் குபேரன் நிதிகளை திரும்பப் பெற்றான். திருவாரூர் சாலையில் இது உள்ளது.
11. சிவபுரம்:
இத்தலத்தில் சிவபெருமான் பூமிக்கடியில் இருப்பதாக ஐதீகம். இத்தல ஈசன் 'தளபதி' என்ற பெயர் உடையவனுக்கு குபேர ஸ்தானம் அளித்தார். கும்பகோணம் சாக்கோட்டையில் இது உள்ளது.
12. விருத்தாசலம்:
பெரியநாயகி விருத்தகிரீஸ்வரர் உறையும் இங்கு குபேர தீர்த்தம் உள்ளது. விருத்தகிரீஸ்வரரை வணங்கி குபேரன் பெரும்பேறு பெற்றான்.
13. வாலாஜா பேட்டை:
இங்கு தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் இலட்சுமி, குபேரனுக்கு ஆலயம் உள்ளது. இங்கு வழிபட செல்வச் செழிப்பு வந்து சேரும்.