ஒருவரைப்போல் இன்னொருவர் இருக்க மாட்டார். நாம் எதிர்பார்ப்பது எப்போதும் நடக்காது. இதுதான் வாழ்க்கை.
யாரோ ஒருத்தர் கஷ்டப்படுகிறார் என்று நம்மால் ஆன நிதி உதவியை ஒரு சந்தர்ப்பத்தில் செய்திருப்போம். எல்லாம் ஒரு புண்ணியத்துக்காக.
ஆனால், ஒரு வாரம் கழித்து இதே கஷ்டத்தைச் சொல்லி அவர் நமக்குத் தெரிந்த இன்னொருவரிடம் நிதி உதவி கேட்டால்... பரிதாபப்பட்டதே வீண் என்று ஆகிவிடும்.
நம்மிடம் ஒருவர் ஸ்கூல் அட்மிஷனுக்காக சிபாரிசுக்கு வந்திருப்பார். நாமளும் ‘அட... நம்ம வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிறவர் ஆச்சே’ என்று சம்பந்தப்பட்ட ஸ்கூல் தாளாளரிடம் சொல்லி வைத்திருப்போம். அந்த தாளாளரும் நம் மீது இருக்கும் நல்லெண்ணம் காரணமாக ஒரு டைம் சொல்லி, ‘அவரை ஸ்கூல்ல வந்து என்னைப் பாக்கச் சொல்லுங்க... முடிச்சிடறேன்’ என்பார். இந்த விஷயத்தை பக்கத்து வீட்டு அன்பரிடம் பெருமிதத்தோடு சொல்வோம்.
ஆனால், அதற்கு அவரோ, ‘சார்... சொல்ல மறந்துட்டேன். என்னோட ஒண்ணு விட்ட மச்சினன்கிட்ட வேற ஒரு ஸ்கூல்ல அட்மிஷனுக்கு சொல்லி வெச்சிருந்தேன். நேத்திக்கு அந்த ஸ்கூல்ல பணம் கட்டிட்டேன்’ என்று அசடு வழிவாரே, பார்க்கணும்!
இதுபோல் இந்தக் காலத்தில் எதற்கெடுத்தாலும் முரண்பாடுள்ள சம்பவங்களையே அதிகம் பார்க்கிறோம்.
முரண்பாடுள்ள மனிதர்களையே அதிகம் பார்க்கிறோம்.
அதாவது சொல் ஒன்று; செயல் ஒன்று.
இதற்கு விதிவிலக்காக ஒரு மாமனிதரை என் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன்.
அவர் அமரர் ஜஸ்டிஸ் அருணாசலம் சார்!
திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமாரின் திருவடிகளில் நிரந்தரமாக ஐக்கியமாகி விட்டார்.
என்னுடைய ஆன்மிகப் பயணத்தில் எத்தனையோ மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், ஒரு மகானை, மகாத்மாவை வெகு அருகில் நெருங்கிச் சந்தித்திருக்கிறேன் என்றால் அவர் ஜஸ்டிஸ் அருணாசலம் சார்தான்!
யோகியாரின் பரிபூரண அன்பைப் பெற்றவர். யோகியாகவே வாழ்ந்தவர்.
கிரிமினல் லாயர். பிறகு நீதிபதி. பின்னாளில், திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தின் தலைவர்.
பணத்தையும், புகழையும் ஒரு மனிதன் சம்பாதிக்கலாம். ஆனால், நேர்மையை சம்பாதிப்பது சிரமம். அந்த நேர்மையை அதிகம் சம்பாதித்து, நீதி தவறாமல் வாழ்ந்தவர் ஜஸ்டிஸ். ஒரு கட்டத்தில் மகா பெரியவாளாலும், யோகியாராலும் பரிபூரணமாக ஆக்கிரமிக்கப்பட்டவர்.
சென்னையில் அவரது நுங்கம்பாக்கம் இல்லத்திலும், திருவண்ணாமலை ஆஸ்ரமத்தில் பல தடவையும் அவரை சந்தித்திருக்கிறேன்.
2016 ஆண்டு நடந்த என் மாமனார் எஸ்.பி. கிருஷ்ண மூர்த்தியின் சதாபிஷேக வைபவத்துக்கு பல சிரமங்களுக்கு இடையிலும் ஒரு சில மணி நேரங்கள் இருந்து மாமனாரையும் மாமியாரையும் ஆசிர்வதித்து உணவு உண்டு மகிழ்ச்சியுடன் பேசிச் சென்றார்.
ஜஸ்டிஸை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எனதருமை நண்பர் பாலாஜி (ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ்). ஒரு நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஆஸ்ரமத்தில் சொற்பொழிவாற்று வதற்காக என்னை அழைத்தவர் பாலாஜி.
அதன் பின் திருவண்ணாமலை ஆஸ்ரமத்தில் தேவகிம்மா, விஜயலட்சுமிம்மா, சுவாமிநாதன், குமரன் - இப்படி இன்னும் பலரும் ஜஸ்டிஸைப் போலவே என் மீது அன்பைப் பொழிந்தனர். எந்த ஜன்மத்தில் புண்ணியம் செய்தேனோ!
ஒரு முறை திருவண்ணாமலை ஆஸ்ரமத்தில் அடியேனது சொற்பொழிவு.
அன்று என் தந்தையின் சிராத்தம். பகலில் இல்லத்தில் சிராத்தம் முடித்து விட்டு, திருவண்ணாமலைக்குப் பயணமானேன்.
மாலை சொற்பொழிவை முடித்துவிட்டு, அன்று ஆஸ்ரமத்திலேயே தங்கும்படியான ஏற்பாடு.
சிராத்தம் செய்தமையால், இரவு உணவு கிடையாது. ‘சரி... சொற்பொழிவு முடித்த கையோடு எங்கேனும் வெளியே போய் பழமும், பசும்பாலும் கிடைத்தால் சாப்பிடலாம்’ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், தாமதமாகி விட்டது. இனியும் எங்கே கடை திறந்திருக்கப் போகிறது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
சொற்பொழிவு முடிந்தவுடன் ஜஸ்டிஸ் என்னை அழைப்பதாகச் சொன்னார்கள். ‘அவ்வளவுதான்... அவருடன் பேச ஆரம்பித்தால் நேரமாகி விடுமே... இன்றைக்கு இரவு பட்டினிதான்...’ என்று தீர்மானித்துக் கொண்டே ஆஸ்ரமத்தில் அவரது அறைக்குப் போனேன்.
திரளான பக்தர்கள் பலர் அவருக்காக வெளியே காத்திருந்தனர். என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். அன்றைய சொற்பொழிவை ரத்தினச் சுருக்கமாகப் பாராட்டிப் பேசிய ஜஸ்டிஸ், ‘இன்னிக்கு உன்னோட அப்பாவுக்கு சிராத்தம்னு சொன்னே... வேற எதுவும் நீ சாப்பிட மாட்டே. அதனால, இந்தப் பசும்பாலையும் பழங்களையும் சாப்பிட்டு ஓய்வு எடுத்துக்கோ’ என்றாரே, பார்க்கணும்.
என் கண்கள் கலங்கிவிட்டன.
ஒரு சொம்பு நிறைய கொதிக்கக் கொதிக்கப் பசும்பால். ஒரு மூங்கில் தட்டில் வாழைப்பழம்... மேலும் சில கனி வர்க்கங்கள்.
தனது தனிப்பட்ட வாழ்க்கையில் வக்கீலாக இருந்தபோதும், நீதிபதியாக இருந்தபோதும் நடந்த ஒரு சில அனுபவங்களை என்னிடம் பர்சனலாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அந்த அனுபவங்களைக் கேட்கும்போதெல்லாம் நான் வியந்த ஒரே விஷயம் நேர்மை.
எந்த ஒரு காலத்திலும், எதற்காகவும் தர்மத்தின் பாதையை விட்டு அவர் விலகியதில்லை. அவர் மீது ஒரு பக்தியை நான் கொண்டிருப்பதற்குக் காரணமே அந்த நேர்மைதான்! எதற்காகவும் வளைந்து கொடுக்காதவர். எவருக்காகவும் அசைந்து கொடுக்காதவர்.
இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து வருபவருக்கு முரண்பாடு என்றுமே தலை காட்டாது.
ஜஸ்டிஸ் அருணாசலம் சார் விஷயத்தில் ஒரே ஒரு ஆசை மட்டும் நிறைவேறவில்லை என்பதில், எனக்கு வருத்தம்.
‘‘ஸ்வாமிநாதா... உன்கிட்ட நிறைய அனுபவங்களை நான் பகிர்ந்துக்கணும்... பர்ஸனல், ஆன்மிகம் எல்லாமே... மெட்ராஸ்ல ஃப்ரீயா பேச முடியாது. நீ கொஞ்சம் நேரத்தை ஏற்படுத்திண்டு திருவண்ணாமலை ஆஸ்ரமத்துக்கு வா... ஒரு வாரம் தங்கலாம். டெய்லி பேசுவோம்’’ என்றார் ஜஸ்டிஸ் ஒரு முறை.
ஜஸ்டிஸின் உடல்நிலை காரணமாக கடைசி காலத்தில் அவரால் திருவண்ணாமலைக்கு அதிகம் செல்ல முடியவில்லை. அதனால், அவரை சந்தித்துப் பேசுகிற சந்தர்ப்பம் மட்டும் ஏனோ நழுவிவிட்டது.
முரண்பாடுகள் உங்கள் வாழ்க்கையில் எட்டிப் பார்க்கக்கூடாதென்றால், மனம் பக்குவப்பட்டிருக்க வேண்டும்.
பக்குவ மனம் கொண்ட இன்னொருவர் என் வாழ்வில் நான் சந்தித்திராத, போனில் மட்டுமே பேசிய விஜயலட்சுமி. இப்போது இவர் இல்லை.
‘ஒருவர் புண்ணியம் தேட வேண்டுமென்றால், பசுக்களுக்கும் வேத பாடசாலைகளுக்கு உதவலாம். அநாதையான பிரேதங்களை அடக்கம் செய்யலாம்’ என்பார் நடமாடும் தெய்வமான மகா பெரியவா.
தவிர முதியோர்களுக்கு உதவுவது, கஷ்டப்படுகிற ஏழைகளுக்கு உதவுவது, பள்ளிப் படிப்பு மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு... இப்படித் தேர்வு செய்து உதவலாம்.
விஜயலட்சுமி - இவருடைய வயது அப்போது ஐம்பதுகளின் துவக்கத்தில் இருக்கலாம்.
ஐ.ஓ.பி.யில் உத்தியோகம். அதைத் தவிர பரோபகாரம் அதிகம்.
என்ன ஒரு சோகம் என்றால், ஒரு சில வருடங்களுக்கு முன் மூச்சுப் பிரச்னை காரணமாக விஜயலட்சுமி இறந்து போனார். மருத்துவமனையில் பல நாட்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டும் பலன் இல்லாமல் போய்விட்டது.
வங்கியில் பணியாற்றினாலும், நிறைய சத் காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்தவர் விஜயலட்சுமி.
உத்தியோகம் லௌகீஹத்துக்கு. பரோபகாரம் ஆன்மாவுக்கு.
இன்னொரு வகையில் சொன்னால் காசு, பணம் எல்லாம் புறத்துக்கு.
தொண்டு, சேவை இவையெல்லாம் அகத்துக்கு.
புறத்தைக் குளிர்விப்பதைவிட அகத்தைக் குளிர்விக்க வேண்டும். எது செய்தாலும் உள்ளம் குளிர வேண்டும். அதுதான் புண்ணியம் பெற்றுத் தரும்.
வேத பாடசாலைகளுக்கு மளிகைப் பொருட்கள், அரிசி, காய்கறிகள், பட்சணங்கள் போன்றவற்றைத் தான் சார்ந்த குழு மூலமாகச் சேர்ப்பார் விஜயலட்சுமி.
கங்கை கொண்ட சோழபுரத்தில் வருடா வருடம் நடக்கும் அன்னாபிஷேக கைங்கர்யத்தில் ஈடுபடுவார்.
திருமலை திருப்பதியில் வருடா வருடம் நடக்கும் பூக்கூடை வைபவத்தில் பங்கெடுத்துக் கொள்வார்.
மந்த்ராலயம் ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் வருடா வருடம் நடக்கும் மாம்பழ சேவையில் குழுவினரோடு பங்கெடுத்துக் கொள்வார்.
இதைத் தாண்டி மகா பெரியவா மற்றும் காஞ்சி காமாட்சி கைங்கர்யங்களுக்குத் தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்குவார்.
புண்ணியம் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். இதைத்தான் ‘இரை தேடுவதோடு நில்லாமல் இறையையும் தேடு’ என்பார்கள் முன்னோர்.
இத்தனை புண்ணியம் சேர்த்தும், இறைவன் அவருக்கு ஆயுளை வழங்கவில்லை.
ஆயுளுக்கும் புண்ணியத்துக்கும் தொடர்பில்லை.
ஆயுள் என்பது பூர்வ ஜன்ம கர்மா. ஒருவர் எத்தனை வருடம் வாழ்ந்து சுக துக்கங்களை அனுபவிக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறதோ, அதற்கேற்றபடிதான் எல்லாம் நடக்கும்.
என்றாலும், புண்ணியம் தேடுவதை விட்டு விடவே கூடாது. அதற்கான பலன் நம் கண்களுக்குத் தெரியாது.
சிலரது கர்ம பலனையே நல்ல விதமாக மாற்றக்கூடிய வலிமை தேடிய புண்ணியத்துக்கு உண்டு.
நீங்கள் தேடுகிற புண்ணியத்தின் பலனாக ஒருவேளை உங்களுக்கு ஆயுள் குறைவாக இருந்து, அது குருபக்தியால் நீட்டிக்கவும்படலாம்.
(தொடரும்)