சகோதர தர்மம்!

சகோதர தர்மம்!

வுங்க மகரிஷியும், விகித மகரிஷியும் உடன் பிறந்தவர்கள். தர்ம சாஸ்திரத்தைத் தொகுத்து வழங்கிய இவர்கள், துளியும் தர்மம் பிசகாமல் தனித்தனியே குடில் அமைத்து வாழ்ந்தனர். ஒருமுறை தமையனைப் பார்க்க அவர் இருப்பிடம் சென்றார் விகிதர். அவர் வெளியே சென்றிருந்தார். வெகுநேரம் காத்திருந்த தம்பிக்கு, பசி வயிற்றைச் சுருட்டியது.

பர்ணசாலையைச் சுற்றி உலாவிய அவர் கண்களில், பழுத்துத் தொங்கிய மாங்கனிகள் ‘பறி பறி’ என்றன.  கவண்கல் எறிந்தார். ஒரு பழம் விழ, சுவைத்து உண்டார். அந்நேரம் பார்த்து சங்க மகரிஷி வந்தார். வந்தவர்,  “இந்தக் கனி ஏது? தானாக விழுந்ததா?” என்று கேட்டார்.

“இல்லை. நானே பறித்தேன்” என்று பதிலுரைத் தார் இளவல். “சொந்தக்காரரின் அனுமதியின்றி பழம் கொய்வது தவறென்பதை நீ அறியாயா?” என்றவர், 

“விகிதா!  அரசனிடம் சென்று உன் தவறை எடுத்துரைத்து தண்டனை பெற்று வருவதே தர்மம். குற்றத்துக்கு உரிய தண்டனையை அனுபவித்துவிட்டால் ஒருவன் புனிதனாகிறான். நரக வாசலைக் கூட அவன் மிதிக்க வேண்டாம்” என்றார். அரசவைக்குச் சென்ற தம்பி, வேந்தரிடம் தன் செயலைக் கூறி உரிய தண்டனை வழங்குமாறு வேண்டினார். மன்னர் புன்னகையுடன், “தாங்கள் பசியில் பழம் பறித்து சாப்பிட்டது எப்படிப் பிழையாகும்? அதுவும் சகோதரர் தோட்டத்துக் கனியைத்தானே உண்டிருக்கிறீர்கள்! எனினும், தவறென்று தாங்கள் எண்ணினால் அதை நான் மன்னிக்கிறேன்” என்றார்.

“கொற்றவனே! தர்ம சாஸ்திரப்படிதான் தாங்கள் நடந்துகொள்ள வேண்டுமே தவிர, தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது. எனது தூய்மையைத் தக்க வைக்க, தண்டனை அளியுங்கள்” என கம்பீரமாக மொழிந்தார் விகிதர். வேறு வழியில்லாமல் அரசர், “பழம் பறிக்க உதவிய இரு கரங்களையும் உடலிலிருந்து நீக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.

ரத்தம் சொட்டச் சொட்ட மூளியான கைகளுடன் வந்த இளவலைக் கண்டதும் சங்க முனிவர் கண்களில் நீர் பெருகிறது. ஓடிவந்து தம்பியை ஆலிங்கனம் செய்து கொண்டவர் பிறகு மனம் தேறி, “தம்பி! மதிய நேர வழிபாட்டுக்கு நதிக்குச் செல்வோமா? நீ மந்திரங்களை மட்டும் சொல்லு. உனக்காக நான் நீர் விடுகிறேன்” என்றார்.

இருவரும் நீராடினர். மெய்மறந்து விகிதர் மந்திரத்தைச் சொல்லி மொண்ணைக் கையால் நீரை இறைக்க முற்படும்போது, கைகள் முழுமை பெற்றதை அறிந்து மெய்சிலிர்த்தார்.

“அண்ணா! எனக்காக, தங்கள் புண்ணியத்தைத் தத்தம் செய்து தரும தேவதையைப் பிரார்த்தித்தீர்களா?” என்று தம்பி உருக, “குற்றம் கண்டபோது, கண்டிக்க மட்டுமே செய்வது உடன் பிறந்தவனின் கடமையல்ல! உன் ஊனமுற்ற கைகள் முழுமையடைய நான் முயற்சியும் செய்ய வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம்” என்றார்.

“அப்படியானால், தாங்களே தண்டனை கொடுத்து நிவர்த்தியும் அளித்திருக்கலாமே” என விகிதர் வினவ, “குற்றவாளியைத் தண்டிக்கும் கொற்றவனை, பாவம் பற்றாது. சட்டத்தை நான் கையில் எடுத்துக் கொண்டால், அது உன்னைத் துன்புறுத்துவதாகும்” என விளக்கினார் சங்க மகரிஷி. அவர்கள் வாழ்ந்தது கிருதயுகம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com