ஜடாநாதர்!

ஜடாநாதர்!
Published on

மானக்கஞ்சாற நாயனாரின் பக்தித் திறத்தை உலகுக்கு எடுத்துக்காட்ட விரும்பிய ஈசன் ஜடாநாதராக எழுந்தருளிய தலம், ஆனந்த தாண்டவபுரம்.

மானக்கஞ்சாறரும் அவர் துணைவியாரும் அன்பே சிவம் என்று தம்மை நாடிவரும் சிவன் அடிய வர்களுக்கு சிவத்தொண்டு புரிந்து வந்தார்கள். வசதி வாய்ப்பு அனைத்தும் இருந்தும் அதில் பங்கெடுக்க ஒரு வாரிசு இல்லையே என்ற மனக்கவலை மட்டும் அவர்களுக்கு இருந்தது. அதையும் ஈசனின் திருவடி  களிலேயே அர்ப்பணித்தனர். அவர்களின் மனக் கவலையைக் களைந்தார் ஈசன்.

கஞ்சாறரின் மனைவி, ஓர் அழகிய பெண் குழந்தைக்குத் தாயாகும் பேறு பெற்றாள். ஈசனின் கருணையில் திளைத்த அந்தத் தம்பதியர், புண்ணிய வர்த்தினி என்ற பெயரைச் சூட்டி அக்குழந்தையைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தனர். ‘கருகரு’வென

நீண்ட கூந்தலுடன் அழகு சுந்தரியாக வளர்ந்தாள் புண்ணியவர்த்தினி. திருமணப் பருவம் எய்திய நிலையில், கலிக்காமன் என்ற சிவபக்தரை தம் மகளுக்கு மணாளனாக்க ஏற்பாடு செய்தார் கஞ்சாறர்.

அடியவர் மேல் ஆராக் காதல்கொண்ட ஆண்டவன் வராமல் திருமணமா? சிவனார் மாவிரதியராக (வடக்கில் உள்ள சிவனடியார்களே மாவிரதியர் எனப்படுவர். சிரசின் முடியை ஐந்து பிரிவுகளாக்கி பூணூலாக அணிந்துகொள்ளும் மரபினர்.) திருமணத்துக்கு முன்தினம் கஞ்சாறர் முன் சென்றார்.  இவரை வரவேற்ற கஞ்சாறர், மனைவி மகளுடன் சேர்ந்து விழுந்து வணங்கினார். புண்ணியவர்த்தினியின் நெடுங்கூந்தலைக் கண்ட ஈசன், ‘உம் மகளின் முடி எமக்குப் பஞ்சவடிக்கு (பூணூல்) ஆகும்’ என்றார். ‘என் பாக்கியம்’ என்று, சற்றும் யோசியாமல் அக்கணமே தன் மகளின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து அறுத்து சிவனடியாரிடம் தந்து வணங்கினார் மானக்கஞ்சாறர். திருமணக் கூட்டமோ திகைப்பில்!

கஞ்சாறரின் பக்தியில் மகிழ்ந்த மகேசன், அவர்களுக்கு அருட்காட்சி தந்தார். மணமகளின் கூந்தல் முன்பை விட இன்னும் கூடுதல் அழகுடன் மிளிர்ந்தது. ஈசனின் அருள்வெள்ளத்தில் நீந்தித் திளைத்த கஞ்சாறர், அன்று முதல் மானக்கஞ்சாற நாயனாராக உலகத்தாரால் போற்றப்பட்டார். விவரம் அறிந்து ஓடிவந்த கலிக்காமன், ‘சிவதரிசனம் எனக்குக் கிடைக்கவில்லையே!’ என வருந்தினார்.

அடியாராக வந்து சிவனார் நீராடிய திருக்குளம் இத்தலத்தில் உள்ளது. இதில் நீராடி பிரஹன்நாயகி, கல்யாணசுந்தரி சமேத பஞ்ச வடீஸ்வரரையும் மானக் கஞ்சாற நாயனாரையும் வணங்கி வழிபட்டால், பிறவிப் பிணிகள் நீங்கி மனத்தில் நிம்மதி நிலைக்கும்! சப்தகன்னியரில் கௌமாரி வழிபட்ட திருத்தலம்.     

மிகவும் பழைமை வாய்ந்த இத்தலத்தில் பிரஹன்நாயகி, கல்யாணசுந்தரி என இரண்டு அம்பிகையர் அருள்புரிகிறார்கள்! பரத்வாஜ முனிவருக்கு அம்பிகை மணக்கோலத்தில் காட்சி தந்த தலம்.

நடராஜப்பெருமான், ஆனந்தத் தாண்டவம் ஆடிய திருத்தலமாதலால், ஆனந்த தாண்டவபுரம். திருமணத்தடை, இல்லறப் பிரச்னைகள் நீங்க ஈசனையும் அம்பிகையையும் வழிபட்டால் போதும்.

இத்தலத்தில், ஜடாநாதர் எனும் திருநாமத்துடன் புண்ணியவர்த்தினியின் அரிந்தெடுத்த கூந்தலை தம் இடக்கையில் பிடித்தபடி காட்சி தரும் ஈசனைக் காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com