
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமணர். ‘தென் திருப்பதி’ என அழைக்கப்படும் இம்மலை, ‘ஸ்வயம் வியக்த வேங்கடகிரி’ என்று- அதாவது, தானே தோன்றிய மலை என்றும் போற்றப்படுகின்றது.
ஒருசமயம் திருப்பாற்கடலில் திருமாலும் திருமகளும் ஏகாந்தமாக இருக்க, ஆதிசேஷன் வாயிற் காவலில் இருந்தார். வாயு பகவான் இறைவனை
தரிசிக்க உள்ளே நுழைய முயல, இருவருக்கும் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. வெளியே வந்த திருமால், “வேங்கட மலையை ஆதிசேஷன் பிடித்துக் கொள்ள, வாயு பகவான் அதனைப் பெயர்த்து எடுக்க வேண் டும்” என போட்டி வைத்தார். ஆதிசேஷன் தன் முழு பலத்துடன் மலையைப் பிடித்துக் கொள்ள, புயலாக வீசிய வாயு பகவான் மலையைப் பெயர்த்தெடுக்க முயன்று தோற்றார். எனினும், மலையின் பாகங்கள் சிதறுண்டு நாலா புறமும் விழுந்தன. அவற்றில் ஒன்று, இந்தத் தான்தோன்றி மலை.
சுசர்மா என்பவர் தனது மனைவியுடன், புத்ர பாக்யம் வேண்டி, திருப்பதி யாத்திரை மேற்கொண்டார். வழியில் காவிரிக் கரையில் தங்கி யிருந்தபோது, நாரதர் கனவில் தோன்றி “திருமக்கூடலூர் என்ற கூடுதுறைக்குச் செல்லுங்கள். அங்கு உங்களை சிலர் வரவேற்பர்” என்று சொன்னார். சுசர்மா அங்கு செல்ல, அவ்விடத்தில் கல் தச்சர்கள் இருந்தனர். அவர்கள் சுசர்மாவை வரவேற்று கல் வேலை நடக்கும் அம்மலைக்கு அழைத்துச் சென்றபோது, மலையில் பிரகாசமான ஒளி ஒன்று கிளம்பியது. இதனையடுத்து பாறை ஒன்று பிளவுண்டு பெருமாள் காட்சி தந்து சுசர்மா வேண்டிய வரத்தை அளித்ததோடு, தாம் இத்தலத்தில் நித்யவாசம் புரிவதாகவும் திருவாய் மலர்ந்தருளினார் என்பது தல வரலாறு.
இது ஒரு குடைவரைக் @கொயில். சுமார் இருபது படிகள் ஏறிச் சென்று ஆலயத்தை அடையலாம். கருவறையில், இரண்டு பெரிய தூண்களுடன் கூடிய பெரிய மேடை. இதனருகே, திருக்கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி, தன் திருமார்பில் திருமகளைத் தாங்கி மேற்கு நோக்கிக் காட்சி தருகின்றார். ஒரு சிறுவனின் பக்திக்குக் கட்டுப்பட்டு, நிலைமாலையைத் தன் கழுத்தில் அவன் போடும் வண்ணம் சற்று தலையைக் குனிந்து மாலையை ஏற்றுக் கொண்ட இவர், பக்தர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுகிறார்.
திருமலை திருவேங்கடமுடையானே, இங்கே நித்யவாசம் புரிகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பலரின் குல தெய்வமாகவும் இவர் வணங்கப்படுகின்றார். திருப்பதி பிரார்த்தனையை இங்கேயே செலுத்தலாம் என்றும் சொல்கிறார்கள்.
கருவறை வாயிலின் மேற்புறம் பூதகணங்கள் இசைக்கருவிகள் மீட்டிக் கொண்டிருக்கும் சிற்பங்கள் உயிரோட்டமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. மகாமண்டபம், அர்த்தமண்டபம் ஆகியவை பிற்காலத்தில் கட்டப்பட்டுள்ளன. வாயிலில் முன் மண்டபத்தின் நடுவே கம்பத்தடி ஆஞ்சனேயர். இவர் மிகவும் வரப்ரசாதி என்கின்றனர்.
செருப்பு தைக்கும் இனத்தவர்கள் பெருமாளுக்கு செருப்பு தைத்துக் கொண்டு, இக்கோயிலுக்கு வந்து படைக்கின்றனர். இது கோயிலில் விசேஷமான ஒன்று. இதற்கு ‘செம்மாலி சமர்ப்பணம்’ என்று பெயர்.
தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது. புரட்டாசி மாதத்தில் 18 நாட்கள் திருவிழா. புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. பக்தர்களின் பக்தியை ஏற்று, வேண்டும் வரங்களை வாரி வழங்குகிறார் கல்யாண வெங்கட்ரமணர்.