

'நாரதர் கலகம் நன்மையில்' தான் முடியும் என்பதை நாம் எல்லோருமே அறிவோம். ஏனெனில் கலகம் மூட்டுவதில் கைதேர்ந்தவர் நாரதர். நாம் சில சமயங்களில் நம் நண்பர்களை கூட நாரதர் வேலை ஏன் செய்கிறாய்? என்று கிண்டலடிப்பதுண்டு. அந்த அளவிற்கு நம் அன்றாட வாழ்வில் கலந்திருக்கும் ஒரு கதாபத்திரம் தான் இந்த நாரதர். இவரின் பேச்சுதிறமைக்கு மயங்காதவர் யாருமே கிடையாது.
இதிகாசங்களிலும் சரி, புராணங்களிலும் சரி இவர் இல்லாத கதைகளே இருக்க வாய்ப்பில்லை. கையில் ஒரு வீணையுடன் எப்பொழுதும் "நாராயண, நாராயண" என்று கூறிக்கொண்டே இவர் மூட்டும் கலகங்கள் ஆரம்பத்தில் பிரச்சினைகளை எழுப்பினாலும் இறுதியில் அனைவருக்கும் நன்மையை மட்டுமே ஏற்படுத்தும்.
பிரம்மதேவரின் மகனான நாரதர் திருமாலின் பரம பக்தர் ஆவார். அவருடைய பிறப்பின் நோக்கமே திருமாலை வழிபடுவதுதான். திருமாலின் ஒவ்வொரு அவதாரத்தின் நோக்கத்திற்கான வெற்றியை பெற ஏதேனும் ஒரு வகையில் நாரதர் காரணமாய் இருந்திருப்பார்.