

காலம்... 30 கொ.மு. (கொரோனாவிற்கு முன்!)
இலக்கியாவிற்கு வயது 7.
அவள் அப்பா கார்த்திகை மாதம் மாலையணிந்து, நேர்த்தியாகவே விரதமிருந்து, பார்த்தசாரதியின் மைந்தனை கடந்த ஒரு தசாப்தமாய் தரிசித்து வருபவர்!
அண்ணன் பரதன் அப்பாவுடன் சபரிமலைக்கு மூன்று வருடங்கள் சென்றிருந்த நிலையில், இவ்வருட யாத்திரையில் அடம் பிடித்து, இடம் பிடித்தாள் இலக்கியா. அம்மாவும், "இப்ப வந்தாதானுங்க...பெரிய பிள்ளை ஆயிட்டா, வர முடியாதே!" என்று சிறப்பாக சிபாரிசு செய்திருந்தாள்.
அம்மா பூஜை சாமான்களை எடுத்து சுத்தப்படுத்தும்போது, "ஐஐ...இந்த ஐயப்ப டாலர் மாலய இப்ப்பவே போட்டுக்றேம்மா" என்று கழுத்துவரை எடுத்துச் சென்றவளை..."நோ!", என நிறுத்தினாள் அம்மா.
"ம்ஹூம், முறப்படி... நாளைக்கு அப்பா போட்டு விடுவாங்க... ஐயப்ப சாமி, உன் குண்டூஸ் (இலக்கியாவின் தெய்வீக ஆசைநாயகன் விநாயகர்!) மாதிரி இல்ல... ரொம்ப ஸ்டிரிக்ட்!... சிரத்தையோட ரூல்ஸ்ஸ ஒழுங்கா ஃபாலோ பண்ணாதான் சிரமமில்லாம மலையேற முடியும்" என்றாள்.