

இருமுடி கட்டும் சடங்கில் பல சம்பிரதாயங்கள் உண்டு. நெய் தேங்காயும், அரிசி, காணிக்கையோடு இரு சிறிய பைகள் தனித்தனியே கட்டப்பட்டு (அதனால் தான் பெயர் 'இரு'முடி!), பெரிய பையில் ஒன்றாக்கப்பட்டு, ஒவ்வொரு சுவாமியின் சிரம் ஏறி சபரியில் ஐயனுக்கு சமர்ப்பிக்கப்படும்.
இருநூறு இருமுடிகளும் சிரம் ஏறும் வரை, தீபாராதனைத் தட்டில் சூடம் எரிந்த வண்ணம் இருக்க வேண்டும். அந்த ஆகச்சிறந்த, கடின, கவனம் சிறிதும் பிசகக் கூடாத பெருங்காரியத்தை, சிறார் சாமிகள் குழுவிடம் ஒப்படைத்து விடுவார் பெரிய குருசாமி!
அந்த அரந்த வாள் குழு முழு சிரத்தையோடு களமிறங்கும். முதலில் யார் சூடத்தை போட வேண்டும், அடுத்த பொறுப்பு (முன்பு வைத்தது தீரும் தருணம் பார்த்து அடுத்த சூடம் வைப்பது) யாருடையது, இடையே வேடிக்கை பார்த்துக்கொண்டே வைக்க மறப்பின் என்ன தண்டனை, அடிக்கடி சில்லரை வேலைகளுக்காக எவரேனும் அழைத்தால், யார் போக வேண்டும், இப்படி பல பெரிய தீர்மானங்களை குழுவின் மூத்த தலைவர் ஆறாம் க்ளாஸ் வெங்காயம் (இயற்பெயர் சபேஷ்), இலக்கியாவின் அத்தை மகன் முடிவெடுப்பார்!!