

-பத்மா ரவிசங்கர்
துர்காவைத் தீர்த்துவிடத் துல்லியமாகத் திட்டமிட்டிருந்தான் தேவன் பொறி வைத்துக் காத்திருக்கும் வேடன் அவன். இன்றுதான் அந்த அசுப யோக அசுப தினம்.
இருவரும் கொளத்தூருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அங்கே தேவனின் மாமனார் இல்லம். எதிர்பாராத இந்தத் திடீர் விசிட்டில் துர்கா முகத்தில் மகிழ்ச்சி வழிந்தது.
''ம்... சீக்கிரம் எல்லா ஜன்னல், கதவுகளையும் சாத்து துர்கா. எப்படா வீட்டைப் பூட்டுவாங்கன்னு திருடனுங்க காத்துக்கிட்டிருக்காங்க. சின்ன சந்தர்ப்பம்கூடத் தரக்கூடாது...''
சற்று நேரத்தில் ஒரு புதிய புடைவையில் அவன் முன் வந்து நின்றாள் துர்கா. மனதுக்குள் அசூயையாக உணர்ந்தான் தேவன். ஒட்டடைக்குச்சிக்குப் புடைவை சுற்றிய மாதிரி...
"எப்படி இருக்குங்க?"
"சூப்பர்டா கண்ணு" என்றான் கவர்ச்சியாகச் சிரித்தபடி.
துர்கா தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டாள். "ஏதோ அதிசயம்! சதா சிடுசிடுன்னு இருப்பீங்க... இன்னிக்கு ஒருமுறைகூட என்னைக் கோபிக்கலையே நீங்க! இந்த மாதிரி எப்பவும் அன்பா நீங்க நடந்துக்கணும்னு எவ்வளவு நாள் ஏங்கியிருப்பேன் தெரியுமா?"