

25 ஆண்டுகளுக்கு முன்னர், ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் 75-வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், கல்கி வார இதழ் சிறப்பு மலரை (26.11.2000) வெளியிட்டது. அந்த மலரில், சத்ய சாயிபாபாவின் சிறப்புகள் குறித்துத் தொகுக்கப்பட்ட பல கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.
இப்போது, ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் நூற்றாண்டு (2025) விழாவையொட்டி, அந்த இதழிலிருந்து ஒரு சிறப்புக் கட்டுரை இப்போது உங்கள் பார்வைக்கு....
26.11.2000 அன்று வெளியிட்ட பாபாவின் சிறப்பு மலரை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
பெங்களூரிலிருந்து, புட்டபர்த்திக்கு நாங்கள் சென்ற பஸ், இடையில் நின்றது. கிராமத்து மக்கள் சாலையை ஒட்டி திரண்டிருந்ததுதான் காரணம். ஒரு லாரி, அதில் நிறைய வெள்ளைச் சீருடை அணிந்த மாணவர்கள். குழந்தைகள் முதல் முதியோர் வரை கூடியிருந்த மக்களுக்கு, உணவுப் பொட்டலமும், 'லட்டு'ம் வழங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குக் கொடுத்தபின்பு, மாணவர்கள் பஸ்சுக்குள் ஏறிவந்து, அமர்ந்திருந்த அத்தனை பயணிகளுக்கும் கொடுத்தனர்.
எதற்காக இந்த திடீர் விநியோகம்? ஒரு மாணவரைக் கேட்டபோது, "பகவான் பாபாவின் எழுபத்தி ஐந்தாவது ஜெயந்தி வரும் நவம்பர் இருபத்து மூன்றாம் தேதி. அதனைத் கொண்டாடும் விதமாய்த்தான் இந்த ஏற்பாடு. தினமும் காலை ஆறுமணிக்குப் புட்டபர்த்தி கல்லூரி மாணவர்களான நாங்கள் எல்லோரும் லாரிகளில் மொத்தம் ஐம்பதாயிதம் உணவுப் பொட்டலங்களும், லட்டும் எடுத்துக்கொண்டு போய் வினியோகிக்கிறோம். உணவுப் பொட்டலத்துடன் இனிப்பான லட்டு வழங்கப்பட வேண்டும் என்பது பகவானின் உத்தரவு. நவம்பர் முதல் தேதி தொடங்கி இது நடக்கிறது. இந்த மாத இறுதிவரை தொடரும்" என்றார் அந்த மாணவர்.
"மனிதனுக்கு முதலில் உணவைக் கொடு. அடுத்தது உடை, மூன்றாவது இருப்பிடம் என்று சொல்லுவார் பாபா. அதன்படி இப்போது உணவு வழங்கப்படுகிறது. கூடவே உடைகளும் வழங்கப்படுகின்றன. ஏழை மக்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டம் ஒன்றும் விரைவில் செயல்படுத்தப்படவிருக்கிறது" என்று சந்தோஷமாய்ச் சொல்கிறார் பஸ்ஸில் உடன் வரும் ஒரு பாபா பக்தர்.
புட்டபர்த்திக்குள் நுழைகிறபோதே, நகரம் களைகட்டி விட்டது என்பது தெரிகிறது. வழி நெடுக அலங்கார வளைவுகள். அதில் பாபாவின் உபதேசமும், ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம். தங்கள் வீட்டுக் குழந்தையின் முதல் பிறந்த நாள் போன்ற உற்சாகத்துடன் அனைவரும் காணப்படுகிறார்கள்.
பாபா பிறந்த நாள் நெருங்க, நெருங்க பக்தர் கூட்டம் அலை மோதும். அதனைச் சமாளிக்க ஜரூராகத் தயாராகிக்கொண்டிருக்கிறது பிரசாந்தி நிலையம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுமார் அறுபதாயிரம் சாயி சமிதிகளைச் சேர்ந்த சேவா தளத் தொண்டர்கள் புட்டபர்த்தி வந்துவிட்டார்கள். பிரசாந்தி நிலையத்தின் தரையைப் பெருக்கி, சுத்தம் செய்வதில் தொடங்கி, உணவு சமைத்துப் பறிமாறுவதுவரை தாங்கள் செய்யும் ஒவ்வொரு பணியையும் வாழ்க்கையில் கிடைத்த பெரும்பேறாக எண்ணி அவர்கள் சேவை புரிகிறாார்கள்.
தூரத்தில் மண்வெட்டி பிடித்து, தரையில் புற்களைச் செதுக்கிப் போட்டுக்கொண்டிருந்த வெள்ளை உடை சேவா தளத் தொண்டரைக் காட்டி, "அவர் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியொன்றின் ஜெனரல் மேனேஜர்" என்று பொறுப்பாளர் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. ஏ.சி. அறையில் உத்தியோகம் பார்த்துப் பழகிய அவரிடம், மண்வெட்டி பிடிப்பது பற்றிக் கேட்டால், "இதில் கிடைக்கிற சந்தோஷத்துக்கு ஈடு இணை இல்லை... சாய் ராம்!" என்கிறார் புளகாங்கிதமடைந்து.
நாற்பத்து இரண்டு வயது ராகேஷ் குமார் ரொம்ப இனிப்பான மனிதர். ஆம்! அவர்தான் பிரசாந்தி நிலையத்தில் இப்போது லட்டு மாஸ்டர். பதினைந்து லாரி சர்க்கரை, பத்துலாரி கடலை மாவு, மூவாயிரம் டின் எண்ணெய் வந்து இறங்கி இருக்கிறது. தினமும் காலை எட்டு மணிக்கு ஆரம்பித்தால் இரவு எட்டு மணி வரை,சேவா தளத்தைச் சேர்ந்த பெண்மணிகள் லட்டு பிடிக்கிறார்கள். "கை வலிக்கவில்லையா?" என்றால், "பகவான் நாமத்தை உதடுகள் சொல்ல, கைக்கு எப்படி வலி தெரியும்?" என்று கேட்கிறார் ஒரு பெண்மணி.
"பகவானின் பிரசாதம் கிடைப்பதே பாக்கியம். ஆனால், பிரசாதம் தயாரிக்கிற பாக்கியமே கிடைத்திருக்கிறது எங்களுக்கு"- பெரிய இடத்துப் பெண்மணி போன்ற தோற்றம் கொண்டவர் சொல்கிறார். அவரைப் பற்றி விசாரித்தால், "நான் ஒரு சாயி பக்தை லட்சக்கணக்கான சேவா தளத் தொண்டர்களில் ஒருத்தி இது போதுமே என்னைப் பற்றி" என்று பேச்சை சட்டென்று முடிக்கிறார்.
இத்தனை பெரும் பக்தர் கூட்டம் திரண்டால், தங்குமிடத்துக்கு என்ன செய்வது? இதோ நான் இருக்கிறேன். அந்த வேலையை என்னிடம் விடுங்கள் என்று சொல்லிவிட்டார் ஹூசைன் பாய். பெங்களூர்க்காரர். லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற பிரம்மாண்டமான பந்தல் காண்டிராக்டர். லாரிகளில் சவுக்குக் கட்டைகளையும், தகர ஷீட்களையும் கொண்டுவந்து தள்ளுகிறார். அவரது எண்பது வேலையாட்கள், இதுவரை நாலு லட்சம் சதுர அடி பரப்புக்குத் தாற்காலிக ஷெட்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இது தவிர குளியலறைகள், கழிப்பறைகள் இன்ன பிறவும் உண்டு. ஹுசைன்பாய், காலை ஆறு மணிக்கு எழுந்தால், பம்பரமாய்ச் சுழல்கிறார். பிரசாந்தி நிலைய வளாகத்துக்குள்ளேயே தனக்கென அமைத்துக்கொண்ட ஒரு டென்ட்டில் இரவு பதினோரு மணிக்குத்தான் தூங்கப் போகிறார். ஒண்ணரை மாதமாகிறது இவர் வீட்டுக்குப் போய். இவரது குடும்பத்தில் ஒரு திருமணம் நடந்தபோது, ஒரு நாள் மட்டும் போய் தலையைக் காட்டிவிட்டு வந்ததில் உறவினர்களுக்கு இவர் மேல் கொஞ்சம் வருத்தமாம்.
"இரண்டு முறை பாபாவை நான் மிக அண்மையில் தரிசித்திருக்கிறேன். இரண்டு தடவைகளுமே எவ்வளவோ பேச வேண்டும் என மனது நினைத்தாலும், ரொம்ப எமோஷனலாடு கண்கள் கலங்கினவே தவிர, வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை" என்று உணர்ச்சி பொங்கச் சொல்கிறார் ஹுசைன்பாய்.
பொதுவாகவே எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாத இந்த மனிதர், பிரசாந்தி நிலையப் பணியை ஏற்றுக் கொண்டபின், நான்-வெஜ்ஜுக்குக்கூட விடை கொடுத்து விட்டாராம்.
பாபாவின் எழுபத்து ஐந்தாவது பிறந்தநாளையொட்டி, மத்திய அரசு பாபா பக்தர்களுக்கு ஒரு பரிசளித்துள்ளது. ஆம்! புட்டபர்த்தியில் ஒரு ரயில் நிலையம் வந்துவிட்டது.
மூன்று கோடி ரூபாய் செலவில் சலவைக் கற்கள் பதித்து, ஸ்டேஷன் பெயர்: ஸ்ரீசத்ய சாயி பிரசாந்தி நிலையம். பெண்ணுகொடா என்ற ரயில் நிலையத்திலிருந்து ஒன்பது கி.மீ. இருப்புப்பாதை அமைக்கப்பட்டு, இனி நேரடியாக புட்டபர்த்திக்கே ரயிலில் போய் இறங்கலாம். சென்னையிலிருந்து புட்டபர்த்திக்கு நேரடி ரயில் விடப் போகிறார்கள்.
ஏற்கெனவே ஆன்மிகம் சம்பந்தப்பட்ட ஒரு மியூசியம், இயற்கை எழிலான குன்றின்மீது இருக்கிறது என்றாலும், 'மில்லெனியம் மியூசியம்' என்று உலகளாவிய ஆன்மிக மியூசியம் ஒன்று பிரும்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது. சீன பாணிக் கட்டடமான இதன் மேற்கூரைப் பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள சலவைக் கற்கள் சீனாவிலிருந்தே வரவழைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டின் அம்சமாக மதுரை மீனாட்சி திருமணக் கோல வண்ண ஓவியம் இடம் பெற்றிருக்கிறது.
பகவான் பாபா தனது எழுபத்து ஐந்தாவது ஜெயந்தியையொட்டி, மக்களுக்கு விடுக்கும் சிறப்புச் செய்தி என்ன? என்று சத்ய சாயி சமிதிகளின் முக்கிய பொறுப்பாளர் ஒருவரைக் கேட்டபோது, "அது பாபாவுக்கு மட்டுமே தெரியும், ஜெயந்தி அன்று அவரே அதை அருளுவார்!" என்றார்.
புட்டபர்த்தியிலிருந்து எஸ். சந்திரமெளலி ; படங்கள்: யோகா