

சோபாவில் அமர்ந்து அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் கதையை மும்முரமாக படித்துக்கொண்டிருக்கையில், டீப்பாய் மேலிருந்து சிநேகிதியே!என்ற பாடலை கைபேசி பாட, ராதா எடுத்தாள். ஸ்கீரினில் சிநேகிதி ரமா என மின்ன,
"ஹை ரமா ! எப்படி இருக்க? பொண்ணு ஸ்வாதி கல்யாணம் நல்லா நடந்ததா”..?
"சூப்பரா நடந்தது. என் அருமைத்தோழி நீதான் மலேசியாவுல இருக்கற பையன் வீட்டுக்கு போயிட்டியே!. இந்தியா வந்தாச்சா?"
"ம்...ரெண்டு நாள் ஆச்சு”.!
"அப்ப சரி! வர்ற சண்டே ஸ்வாதியோட தாலி பிரிச்சு கட்டற ஃபங்ஷன் வெச்சிருக்கேன். லிமிட்டட் ஆட்களைத்தான் கூப்பிட்டிருக்கேன். கண்டிப்பா நீ வரணும்!"
"மாப்பிள்ளை சுரேஷ் வந்தாச்சா?"
"டூர் போயிருக்கார். சண்டே காலைல வருவார். நீ வா. நேர்ல அரட்டை அடிக்கலாம். நோ சாக்கு போக்கு "
ராதா பதில் சொல்வதற்குள், ரமாவின் கைபேசி அமைதியாகிவிட்டது.
ராதா சர்ப்ரைஸாக, ரமா வீட்டிற்கு ஒருநாள் முன்பாகவே சென்றாள். வீட்டு வாசலில் நின்றிருந்த ரமாவின் மகன் கிஷோர், ராதாவை வரவேற்று உள்ளே அமர வைத்து, அம்மா ரமா கோவிலுக்குப் போயிருப்பதாகவும், சிறிது நேரத்தில் வந்து விடுவாரெனவும் கூறினான். டிவியை ஆன் செய்தவன், தனக்கு வெளியில் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லி சென்று விட்டான்.
ராதா டிவியில் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருக்கையில், கிச்சனுக்குள்ளிருந்து லேசாக சிரிப்பு சத்தம் வர திடுக்கிட்டாள். மெதுவாக சென்று கிச்சனுக்கு வெளியில் நின்று நோட்டமிடுகையில், தலையில் பஃபூன் தொப்பி வைத்த ஒருவன் நின்றிருக்க, அருகே ஸ்வாதி சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். பஃபூன் தொப்பி வைத்தவனின் பின்புறம்தான் தெரிந்தது.
மாப்பிள்ளை சுரேஷ், சண்டே காலைல வரதாத்தானே ரமா சொன்னா. இன்னிக்கு சனிக்கிழமை. கிச்சனுக்குள்ள இவன் யாரு.? சொந்தக்காரப் பையனா இருக்குமோ..? யார் வேண்டுமானாலும் இருக்கட்டும். கிச்சனுக்குள்ள என்ன கிசு-கிசு..? உள்ளே நுழையலாமா ? என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு மறுபடியும் ஹால் சோபாவைத் தஞ்சமடைந்தாள் ராதா.
ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்த ஸ்வாதி, ஜோவியல் டைப்பென்றாலும், இப்படியா கிச்சனுக்குள்ளே!. காலம் கெட்டுப் போச்சு.
கைப்பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்துவிட்டு, கண்களை மூடிக்கொண்டாள் தொடர்ந்து பேச்சும், சிரிப்பு சத்தமும் கிசு-கிசுவெனக் காதில் கேட்டது.
வா!வா! ராதா!ரமாவின் குரல் கேட்டு கண்களைத் திறந்தாள்.
"கோவில்ல கூட்டம். கிஷோர் ஃபோன் பண்ணி சொன்னான். நேரமாகிவிட்டது. ஸாரி!" என்றாள்.
"அதனாலென்ன பரவாயில்லை ரமா!" என்றவள், தான் கொண்டு வந்திருந்த ஸ்வீட் மற்றும் கிஃப்ட்டை கொடுத்தாள்.
பத்து நிமிடங்கள் கதை பேசியபிறகு, "ராதா! என்ன சாப்பிடற?" கேட்ட ரமாவிடம், கிச்சனுக்குள் பார்த்த மேட்டரை ராதா கூறினாள்.
சற்றே திகைப்படைந்த ரமா வேகமாக கிச்சனுக்குள் சென்றாள். அடுத்த நொடியில் வெளியே வந்து சிரித்தாள்.
"எதுக்கு சிரிக்கறே ரமா? உங்களுக்குத் தெரிஞ்சவனா ?"
"வெயிட் ராதா! அது "வன்" இல்லை. "வள்". என் தங்கை பெண் திவ்யா. உனக்குத் தெரியுமே. கேட்டரிங் காலேஜ்ல படிக்கறா. இண்டர் காலேஜ் குக்கிங் காம்பெடிஷன்ல கலந்துக்கப் போறாளாம். அதான் செஃப் கெட் அப்ல வந்து, ஸ்வாதியிடம் வந்து ஐடியா கேக்கறா. பயமுறுத்திட்டியே!" என்ற ரமா,
"ஸ்வாதி, திவ்யா! வெளில வாங்க. யார் வந்திருக்காங்க பாருங்க! " கூப்பிட்டாள்.
சிரித்தவாறே கிச்சனுக்குள்ளிருந்து வெளியே வந்த இருவரும், "ஹை ஆண்டி! எப்படி இருக்கீங்க? "கோரஸாக கேட்கையில், முகத்தில் டன் கணக்கில் அசடு வழிய, அசட்டு சிரிப்பு சிரித்தாள் ராதா.