பதுகம்மா யார்? மலர்க்குவியல் எதற்காக?
பதுகம்மா, தெலுங்கானாவின் கலாச்சார உணர்வினை வெளிப்படுத்தி நவராத்திரி சமயம் கொண்டாடப்படும் ஒரு மலர் பண்டிகை எனலாம்.
பதுக்கமாவிற்கு, தெலுங்கில், ‘தாய் தெய்வம் உயிருடன் வா’ என்று பொருள். மேலும், பதுகம்மா என்பது, பல்வேறு தனித்துவமான பருவகால மலர்களால் அலங்கரிக்கப்படும் அழகான மலர்க்குவியலுமாகும்.
பெரும்பாலான மருத்துவ மதிப்புகளைக் கொண்ட மலர்கள், ஏழு செறிவான அடுக்குகளில் கோயில் கோபுரத்தின் வடிவத்தில் அமைக்கப்படும். சகோதரர்கள், மற்றும் வீட்டிலுள்ள ஆண்கள், தங்கள் தாய், தாரம், சகோதரிகளுக்கு, பதுக்கம்மாவை அலங்கரிக்க பூக்களைக் கொண்டு வருகின்றனர்.
பதுகம்மா என்பது "வாழ்க்கையின் திருவிழா" என்கிற பொருளையும் கொண்டது. இது டெக்கான் பிராந்தியத்தில் பெண்மையைக் கொண்டாடுவதையும் குறிக்கிறது. பதுகம்மாவின் போது, தெலுங்கானா பெண்கள் பாரம்பரிய புடவைகளை, நகைகள் மற்றும் பிற ஆபரணங்களுடன் அணிகின்றனர். டீனேஜ் பெண்களோ, உடையின் பாரம்பரிய நேர்த்தியை வெளிக்கொணர நகைகளுடன் லங்கா-ஓனி/அரை-சேலை/லெஹங்கா சோளி அணிகின்றனர்.
பதுக்கம்மாவின் ஒன்பது நாள் கொண்டாட்ட பெயர்கள்
நாள் 1: எங்கிலி பூலா பதுகம்மா
நாள் 2: அதுகுல பதுகம்மா
நாள் 3: முட்டபாப்பு பதுகம்மா
நாள் 4: நானாபியம் பதுகம்மா
நாள் 5: அட்லா பதுகம்மா
நாள் 6: அலிகினா பதுகம்மா
அல்லது (அலக பதுகம்மா)
நாள் 7: வேப்பகயால பதுகம்மா
நாள் 8: வெண்ணெல முத்தலா பதுகம்மா
நாள் 9: சாத்துல பதுகம்மா
பதுகம்மா குறித்த புராணக் கதைகள்
புராணக்கதை 1
கௌரி தேவி, பூக்களை விரும்புபவர். அதன் காரணம் ஒரு சதுர மரப் பலகை மீது குறுகலாக மேலே ஒரு சிகரம் உருவாக்கப்படுகையில் அது கோவில் கோபுரத்தின் வடிவை ஒத்திருக்கும். பூக்களால் ஆகிய மாலை அதன் மீது அணிவிக்கப்படும். மஞ்சளால் செய்யப்பட்ட கௌரியின் குறியீட்டு சிலை (கௌரியம்மா), பூ மாலையின் நடுவே வைக்கப்படும். இதுவே, பதுகம்மா தேவியாக வணங்கப்பட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
புராணக்கதை 2
மகிஷாசுரன் என்கிற அரக்கனை, அநேக நாட்கள் நீடித்த கடுமையான சண்டைக்குப் பிறகு துர்கா தேவி கொன்றாள். இந்தச் செயலுக்குப் பிறகு, சோர்வு காரணமாக 'அஷ்வயுஜ பத்யமி' நாளில், துர்கா தேவி உறங்கச் சென்றாள். பக்தர்கள் அவளை எழுந்திருக்க பிரார்த்தனை செய்ய, தேவி பத்தாவது நாளில் எழுந்தாள். அதுவே இப்போது விஜய தசமி அல்லது தசரா என்று கொண்டாடப்படுகிறது
புராணக்கதை 3
சோழ மன்னர் தர்மாங்கதன் மற்றும் சத்யவதியின் மகள் பதுகம்மா. ராஜாவும், ராணியும் போர்க்களத்தில் தங்கள் 100 மகன்களை இழந்தனர்.
தங்களுடைய குழந்தையாகப் பிறக்க லட்சுமி தேவியிடம் பிரார்த்தனை செய்தனர். லட்சுமி தேவி அவர்களின் உண்மையான பிரார்த்தனைகளைக் கேட்டு அவர்களுக்கு உதவ எண்ணினார். பாம்புகளால் சூழப்பட்ட ஒரு மரத்திலிருந்து பழங்களைப் பறிக்க சத்தியவதியிடம் கேட்டாள். சத்யவதி பல பழங்களைப் பறித்தாள். ஆனால், கீழே இறங்கும்போது அவை அனைத்தும் விழுந்தன, ஒன்றைத் தவிர.
லட்சுமி அரச அரண்மனையில் பிறந்தபோது, அனைத்து முனிவர்களும் அவளை ஆசீர்வதிக்க வந்து, "பதுகம்மா என்றென்றும் வாழ்க" என்று அவளுக்கு அழியாமையை அருளினர். அப்போதிருந்து, தெலுங்கானாவில் உள்ள இளம் பெண்கள் பதுகம்மா பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.
பதுகம்மா தயாரிப்பு விபரங்கள்
வீட்டில் உள்ள ஆண்கள் செலோசியா, சென்னா, மேரிகோல்டு, கிரிஸான்தமம், இந்திய தாமரை, குக்குர்பிட்டா இலைகள் மற்றும் பூக்கள், குக்குமிஸ் சாடிவஸ் இலைகள் மற்றும் பூக்கள், மெமிசிலான் எடுல், ட்ரைடாக்ஸ் புரோகம்பென்ஸ், டிராக்கிஸ்பெர்ம் அம்மி, கட்லா, டெக்கு பூக்கள் போன்ற காட்டு சமவெளிகளில் இருந்து பதுக்கம்மா பூக்களை சேகரிக்கின்றனர்.
இந்த பருவத்தில் இப்பகுதியின் சாகுபடி செய்யப்படாத மற்றும் தரிசு நிலங்களில் பல்வேறு துடிப்பான வண்ணங்களில் பூக்கும். பதுகம்மாவை தயாரிப்பது ஒரு நாட்டுப்புற கலை. ஆண்கள் கொண்டுவரும் பூக்களை உபயோகித்து, பெண்கள் மதியத்திலிருந்து பதுகம்மாவை தயாரிக்கத் தொடங்குவார்கள்.
சிறிய நீள அடித்தளத்தை விட்டு பூக்களை வெட்டி, குனுகு (செலோசியா) பூக்களை பல்வேறு துடிப்பான வண்ணங்களில் நனைத்து, வாசனையுடன், தாம்பலம் எனப்படும் அகலமான தட்டில் அடுக்கி வைப்பார்கள்.
பதுகம்மா கொண்டாட்டம்
பதுகம்மா கொண்டாட்டங்களின் போது, நடன நிகழ்ச்சிகள், இசை, நாடகங்கள், போட்டிகள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்குகள் உள்ளன. ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர்வாசிகளும் இந்த நிகழ்வுகளைக் காண திரண்டு வருகின்றனர்.
மேலும், பதுக்கம்மா கொண்டாட்ட சமயம் பல்வேறு தெய்வங்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக உள்ள அநேக வகையான பாடல்களைப் பாடி ஆடுவது வழக்கம். பதுகம்மா விழாவின் நோக்கம், இளம் பெண்கள் தங்கள் விருப்பப்படி கணவர்களைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்வதும், இளம் பெண்கள் தங்கள் மாமியார், கணவர்களை எவ்வாறு கவனித்துக்கொள்வது, பெரியவர்களை மதிக்கும் சிறந்த பெண்களாக, தங்களைச் சுற்றியுள்ளவர்களை நேசிக்கும், தங்கள் இளையவர்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொடுப்பதும் ஆகும்.
மேலும், திருமணமான பெண்கள் தங்கள் குடும்பங்களின் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்காக தெய்வத்திடம் பிரார்த்தனை செய்ய பதுகம்மா விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
பதுகம்மா பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் (சாலிவாகனம் நாட்காட்டியின் படி ஒன்பது நாட்கள் பத்ரபத அமாவாசை) பித்ரு பட்சம் அமாவாசை அன்று துவங்கி துர்காஷ்டமி வரை கொண்டாடப்படுகிறது. இது கிரிகேடியன் நாட்காட்டியில் செப்டம்பர்–அக்டோபர் மாதங்களில் வரும். பதுகம்மா விழா நவராத்திரி சமயத்தில், ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. மகாளயா அமாவாசையன்று ஆரம்பிக்கும் பதுகம்மா விழா. ஒன்பது நாள் கொண்டாட்டங்களுடன் "சதுலா பதுகம்மா" அல்லது "பெட்ட பதுகம்மா" விழாவுடன் தசராவுக்கு இரு நாட்களுக்கு முன்பு முடிவடையும்.
அழகான மலர்க்குவியல் வாயிலாக காட்சியளிக்கும் பதுகம்மாவை நாமும் வணங்கி வரவேற்போம்.