மலினப்படுத்தி மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்!

மலினப்படுத்தி மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்!

– ஜி.எஸ்.எஸ்.

தமிழில் இயக்குனர் ஷங்கரின் 'பாய்ஸ்' திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த்.  சமீபத்தில் நகைச்சுவையான கருத்து என்ற பெயரில் மலினமான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தி பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்.

பிரதமர் மோடி அரசாங்கம் குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் நடிகர் சித்தார்த்.  அரசை விமர்சிக்கும் உரிமை எந்தக் குடிமகனுக்கும் உண்டுதான்.  ஆனால் அப்படி விமர்சிக்கும்போது அதில் கண்ணியம் தேவை. அதை மீறியதால்தான் வருத்தம் தெரிவிக்கும் நிலை சித்தார்த்துக்கு ஏற்பட்டு தலைகுனிவு அடைந்துள்ளார்.

'ரங் கே பசந்தி'யை அமீர் கானின் ​திரைப்படம் என்றே பலரும் குறிப்பிட்டாலும் அதில் அவ​ரைவிட முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்தவர் சித்தார்த்.  எனவே  இந்தி திரைப்பட ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்.  அவர் கருத்துகள் வட இந்தியாவிலும் கவனிக்கப்படுகின்றன.

மேற்குவங்க தேர்தல் பரப்பு​ரையின்போது அந்த மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று மோடி கூற, ' நீங்கள் பதவியில் இருந்து நீக்கப்படும் போது இந்த தேசம் உண்மையாகவே தடுப்பு மருந்து பெற்றதாகி விடும்' என்றார் சித்தார்த்இதைத் ''துணிவு'' என்று சிலர் பாராட்ட,  ''அராஜகம்'' என்று சிலர் கடுமையாக எதிர்த்தனர்.

திஷா ரவி என்ற இளம் பெண்  இணையத்தில் தான் பகிர்ந்துகொண்ட டூல்கிட் காரணமாக முன்பு கைது செய்யப்பட்டார்.  அந்த டூல்கிட்டில் இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பவை குறிப்பிடப்பட்டிருந்தன.  திஷா ரவி பகிர்ந்த டூல்கிட் மற்றும் குடியரசு தினத்தன்று நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் ஆகியவற்றுக்குத் தொடர்பு உண்டு என்றும் இந்த டூல்கிட் காரணமாக வன்முறையாளர்கள் உத்வேகம் பெற்று வன்முறையை நிகழ்ச்சி இருக்கக்கூடும் என்பதும் காவல்துறை வாதமாக இருந்தது.

திஷாவின் கைது தொடர்பாக காவல்துறை மற்றும் மத்திய அரசைக் கண்டித்து சித்தார்த் ட்வீட் செய்தார். அப்போது பாஜக தேசிய கொள்கை வரைவு துணைக் குழுவின் உறுப்பினரான கருணா கோபால் என்பவர் சித்தார்த்தின் புகைப்படத்தை வெளியிட்டு 'யார் இவர்? பள்ளியிலிருந்து பாதியில் வெளியேற்றப்பட்டவரா? அடிப்படை எதுவும் இல்லாமல்(வன்முறையை) தூண்டுபவராக  இவரைப் பார்க்கிறேன்' என்று என்று கூற, இரு தரப்புக்கும் இடையே வார்த்தை அம்புகள் தொடர்ந்தன.

பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கருத்துக்களுக்கு எதிராக நடிகை கங்கனா ரனாவத்  'மோடிஜிக்கு வழிநடத்த தெரியாது.  கங்கணாவுக்கு நடிக்கத் தெரியாது.  சச்சின் டெண்டுல்கருக்கு பேட் செய்ய தெரியாது.  லதா மங்கேஷ்கருக்கு பாடத் தெரியாது.  ஆனால் சில்லறைத்தனமாக ட்வீட் செய்யும் அரைகுறைகளுக்கு எல்லாமே தெரியும்' என்று விளாசியபோது, சித்தார்த்துக்கும் சேர்த்துதான் அந்த வசைபாடல் என்று கருதியவர்கள் உண்டு.

சரி.. சித்தார்த் குறித்த இப்போதைய விஷயம் என்ன? சமீபத்தில் செய்திகளில் பரபரப்பாக இடம் பெற்ற பின்னணி இதுதான். 

பஞ்சாபுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி சுமார் இருபது நிமிடங்கள் சாலையில் காக்க நேரிட்டது.  இதைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக தன் பயணத்தை ரத்து செய்துவிட்டுத் திரும்பினார் அவர். 

இதுகுறித்து அதிர்ச்சிகரமான தன் கருத்தைப் பதிவு செய்திருந்தார் சித்தார்த்.  'பஞ்சாபுக்கு சென்றிருந்தது பிரதமரும் அவரது குழுவும்தான் என்பது நமக்கு எப்படித் தெரியும்? அந்தக் காரில் இருந்தது காலிஸ்தான் நபர்களாகவோ பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட நடிகர்களாகவோ இருந்திருக்கலாமே.  ஆராய வேண்டும்'.

பிரதமர் பஞ்சாபிலிருந்து பாதியில்  திரும்ப நேர்ந்தது குறித்து பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நெஹ்வால் ஒரு கருத்தை வெளியிட்டார்.  'ஒரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு சமரசத்துக்கு உட்படுத்தப்பட்டால் அந்த நாடு தன்னை பாதுகாப்பானது என்று எப்படி கூறிக்கொள்ள முடியும்?' என்று  கேட்டார்.  அராஜகவாதிகளின் கோழைத்தனமான தாக்குதல் இது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக சித்தார்த் தெரிவித்த கருத்துதான் அவரை சிக்கலில் மாட்டி விட்டது.  ஷட்டில்காக் என்ற வார்த்தையை ஸடில் (மென்மையான) காக் என்று பிரித்து எழுதி தவறான அர்த்தம் கொடுக்கும் வகையில் (காக் என்பது பொதுவாக சேவலையும் பேச்சுவழக்கில் ஆண்குறியையும் குறிக்கும் சொல்) சித்தார்த் ட்வீட் செய்ய விஷயம் பரபரப்பானது.  ('ஸடில் காக் சாம்பியன்ஸ்.  எங்களிடம் இந்தியாவின் பாதுகாவல்ர்கள் உள்ளனர். உங்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.).   மோடியின் ஆதரவாளரைக் கிண்டல் செய்ய முனைந்து தேன்கூட்டுக்குள் கையை விட்டுவிட்டார்.  பாலியல் ரீதியான சர்ச்சைக்குரிய கருத்து என்பதால் சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, நடிகை குஷ்பூ போன்ற பலரும் இதற்கு கடுமையாக கண்டனங்களை தெரிவித்தனர்.

தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.  சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக ஆபாச வார்த்தைகளைப் பதிவிட்டு இருக்கிறார் என்றும் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை என்றும் குறிப்பிட்டிருந்தது.  பெண்களைக் கொச்சைப் படுத்தியதாக இந்தியக் குற்றவியல் பிரிவின் சில சட்டங்களின் கீழ் வழக்கு தொடுக்க வேண்டும் என்றது. தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா  சித்தார்த்தின் ட்விட்டர் கணக்கை முடக்க வேண்டும் என்றும் ட்விட்டர் தலைமைக்கு எழுதினார். .

'இந்தியாவுக்கு அளப்பரிய சாதனைகளைப் புரிந்த ஒரு ஆளுமையான சாய்னா நேவால் குறித்து மிகவும் தரம் தாழ்ந்த கருத்துகளை தெரிவித்தது சித்தார்த்தின் மட்டமான மனநிலையையே காட்டுகிறது' என சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

பிறர் உணர்வு குறித்துக் கவலைப்படாத மடத்தனம் (crass) என்று சித்தார்த்தின் செயலை வர்ணித்தார் பாடகி சின்மயி.

'சாய்னாவை பயமுறுத்துவதை நிறுத்துங்கள்.  உங்கள் கருத்து ஆணாதிக்க​ வெளிப்பாடு.  சந்தேகமில்லாத வெறுப்புணர்வு' என்று கொதித்தார் பிரபல வழக்கறிஞர் ​அமிர்தா பிந்தர். 

சாய்னாவின் கணவரும் தலைசிறந்த பாட்மின்டன் வீரருமான பருப்பள்ளி காஷ்யப் 'இது எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.  உங்கள் கருத்தை வெளிப்படுத்துங்கள்.  ஆனால் வார்த்தைகள் பதமானவையாக இருக்கட்டும்' என்று கூறினார்.

எதிர்ப்புகள்வேகமடைய சித்தார்த்,  சாய்னாவிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார்.  ' சில நாட்களுக்கு முன் உங்கள் ட்வீட்டுக்கு நான் அளித்த நகைச்சுவையான கருத்துக்காக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.  உங்கள் ட்வீட்டை படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்துக்காக நான் தெரிவித்த வார்த்தைகளை நியாயப்படுத்த முடியாது.  ஒரு நகைச்சுவைக்கு  விளக்கம் தேவை என்றால் அது நல்ல நகைச்சுவை அல்ல. வராத நகைச்சுவைக்கு மன்னிக்கவும்' என்றார்.

'சித்தார்த் மன்னிப்பு கோரியது எனக்கு மகிழ்ச்சி.  இது பெண்களைப் பற்றியது.  அவர் ஒரு பெண்ணை குறிவைத்து இதுபோல பேசியிருக்கக் கூடாது.  பரவாயில்லை.  கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும்' என்று கூறியிருக்கிறார் சாய்னா.

சாய்னா குறித்து சர்ச்சைக்குரய வகையில் ட்வீட் செய்த விவகாரத்தில் சித்தார்க்கு சென்னை சைபர் கிரைம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

'யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் ..'

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com