0,00 INR

No products in the cart.

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா!

-ஜெயகாந்தி மகாதேவன்
சென்னை

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, “ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ் ரிசார்ட்டில் மெம்பெர் நான். வருடத்தில் சில நாட்கள் அவங்க ரிசார்ட்டில் இலவசமா தங்கி வரலாம். இந்த ஆண்டு நான் இரண்டு தோழிகளுடன்  மூணாறு போகலாமென்றிருக்கேன். நீங்களும் வாரீங்களா” என்றார். கரும்பு தின்ன கூலியா? ஊர் சுற்றுவதில் அதீத ஆர்வம் கொண்ட எனக்கு ஒரே குஷி. உடனே ‘நான் ரெடி’ என்றேன். அதுவரை குடும்பத்தாரோ, கணவரோ இன்றி எந்த டூரும் சென்றதில்லை. இருந்தாலும் சியாமளா என்பதால் சரி என்றேன். அவங்க தைரியம் மிக்கவர். ஐந்து நாள் பயணமாக ஒரு ஞாயிற்றுக்கிழமை நால்வரும் சென்னையிலிருந்து பஸ்ஸில் கிளம்பினோம்.

மறுநாள் காலை தேனி சென்றடைந்தோம். அங்கிருந்து வாடகை காரில் மூணாறு நோக்கி பயணித்தோம். ஆரம்பமே ஜில்லென்று களை கட்டியது. முன்னாரில் ரிசார்ட்டை அடைந்ததும்  ரிசப்சனில் சம்பிரதாய சடங்குகளை முடித்துக்கொண்டு எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிளாக்கிற்கு வந்தோம். நாங்கள் தங்க அறை மட்டுமின்றி ஹால் மற்றும் கிச்சனும் இருந்தது.

சென்னையிலிருந்தே மளிகை சாமானும் வழியிலிருந்து காய்கறிகளும் வாங்கிக்கொண்டு வந்தோம். குளித்து முடித்தோம். நால்வரில் ‘சமையல் ராணி’ யாகிய சியாமளா சமைக்க, ஒருவர் அவருக்கு உதவி செய்ய, பாத்திரம் துலக்க ஒருவர், வீடு சுத்தம் செய்ய ஒருவரென வேலைகளை பிரித்துக்கொண்டு செயல்பட தொடங்கினோம். நன்கு சாப்பிட்டுவிட்டு காரில் கிளம்பினோம்.

முதலில் சென்றது ஸ்பைசி கார்டன். அங்கு காபி, மிளகு, ஏலக்காய் போன்ற எல்லா செடிகளையும் பார்த்தோம். முதல் முறை அவற்றையெல்லாம் பார்ப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியாயிருந்தது. அந்த இடத்தை சுற்றிக் காட்ட அங்கு ஒரு பெண் இருந்தாள். அவளின் துணையுடன் அந்த இடத்தில் ஓடை போல் ஓடிய சிறிய தெளிவான நீரோட்டத்தில் காலை நனைத்து விளையாடியது மறக்க முடியாதது. பசுமையை பக்காவா ரசித்துவிட்டு இருப்பிடம் சேர்ந்தோம். ரெஸ்டாரென்டில் இரவு உணவு. பின் ரிசார்ட்டின் உள்ளே இன்டோர் கேம்ஸ், கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்  தூங்க சென்றோம்.

மறுநாள் காலை. சிற்றுண்டி தயாரித்து சீக்கிரமே  சாப்பிட்டு, காரில் புறப்பட்டோம். அன்று முழுக்க டீ கார்டன், ஃபிளவர் கார்டன், டீ மியூசியம், மாட்டுப்பட்டி அணைக்கட்டு, எக்கோ பாயிண்ட் என பல இடங்களில் சுற்றித் திரிந்தோம். மாட்டுப்பட்டியில் போட்டிங் சென்றது சிறப்பான அனுபவம். ஃபிளவர் கார்டனில் வண்ண வண்ண மலர்கள் வரிசை கட்டி நின்றது வாய் பிளக்க வைத்தது. எக்கோ பாயிண்ட் செல்லும் வழியில் ஓரிடத்தில் இரண்டு யானைகளை வைத்து சுற்றுலா பயணிகளை சவாரி அழைத்துச் சென்று கொண்டிருந்தனர் சிலர். சியாமளாவுக்கு யானை சவாரி என்றால் அலாதி பிரியம். உடனே காரை நிறுத்தி இறங்கி விட்டார். எனக்கோ நேர் தலைகீழ். அந்த சமயம் பார்த்து இள வயதில் ஒருமுறை அவங்க கூட சென்னை கிண்டி குழந்தைகள் பூங்காவிற்கு சென்று, அவங்க கொடுத்த தைரியத்தில், யானை சவாரி செய்தது ஞாபகம் வந்தது. அப்போது யானை யதார்த்தமா அதன் காலருகில் இருந்த சிறு குழியினுள் காலை வைத்தது. அது லேசா சரிந்ததில் நாங்கள் குலுங்கியது மரண பயம் தந்தது. அன்று முதல் யானையை கண்டால் பத்து மீட்டர் தூரம் தள்ளியே நிற்பேன். அன்றும் அப்படியே நிற்க, சியாமளா மட்டும் சவாரி முடித்து திரும்பினார். சென்ற இடமெல்லாம் டீ எஸ்டேட், காடுகள், மலைகள் என ஒரே பசுமை மயம். இயற்கை அன்னை தன் கொடையை தாராளமா வாரி வழங்கியிருந்தாள். அவற்றை எல்லாம் கண் குளிர கண்டு ரசித்ததோடல்லாமல் கேமராக்குள்ளும் அள்ளி அடைத்துக்கொண்டோம். அதற்குள் இருட்டிவிட  அவசர அவசரமா அறைக்கு வந்தோம்.

மறுநாள் கொழுக்குமலை செல்ல திட்டமிட்டு, வழக்கம்போல சிற்றுண்டி முடித்து கிளம்பினோம். கொழுக்குமலை சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், மிக  உயரத்தில் அமைந்த  டீ எஸ்டேட்களை கொண்ட செங்குத்தான சிகரம். அங்கு செல்ல அரசு அனுமதியுடன்  அவர்கள் நடத்தும் வாடகை  ஜீப் சர்வீஸ்ல தான் செல்லணும். நாங்களும் ஒரு ஜீப்பில் பயணிக்கலானோம். செங்குத்தான மலை மீது பத்து கிலோ மீட்டர் தூரம் முறையான ரோடு இல்லாத பெரிய பெரிய கற்கள் நிறைந்த குறுகிய சாலை. ஜீப் ஜல்லடை போல் சலித்தெடுத்தது. எதையும் பொருட்படுத்தாமல் அங்கங்கே ஜீப்பை நிறுத்தி போட்டோ எடுப்பது, டீ இலை சேகரிக்கும் பெண்களிடம் பேச்சு கொடுத்து அவர்கள் தலையில் அணியும் முக்காடு போன்ற துணியை வாங்கி போட்டுக்கொண்டு டீ இலை கட் பண்ணுவது என ஜாலியா ஒரு மணி நேரம் பயணித்து இலக்கை அடைந்தோம். மலையின் உச்சியில் ஒரு டீ பேக்டரி இருந்தது. அங்கு பச்சை டீ இலை, சுவையான டீ தூளா மாறுவது வரையுள்ள பல நிலைகளையும் எங்களுக்கு விளக்கினர். அங்கு தயாராகும் டீ தூள் கார்டன் ஃபிரஷ், வாசனை மிக்கது, ஆர்கானிக், தனித்துவமானது. உலக பிரசித்தி பெற்றது என கேட்டபோது சிலிர்த்தது. அப்படிப்பட்ட டீ தூளில் டீ போட்டு எங்கள் அனைவருக்கும் சுடச் சுட பரிமாறினர். குடித்துவிட்டு சுவையில் மெய் மறந்தோம். இரண்டு மணி நேரம் அங்கு தங்கி மூச்சு முட்டும் சிகரத்தில் நின்றப்படி  பள்ளத்தாக்கின் அழகை ரசித்தோம். பின் தேவையான அளவு டீ பாக்கெட்களை அங்குள்ள கடைகளில் வாங்கிக் கொண்டு  அங்கிருந்து திரும்ப மனமின்றி கீழிறங்கி வந்தோம்.

மறுநாள் காலை செக் அவுட் பண்ணிட்டு தேக்கடி சென்றோம். அங்கு ஹைலைட்டாகிய  உலக பிரசித்தமான  ஏரியில் படகு சவாரி போனோம். பின் அங்கிருந்து மதுரை சென்றோம். மீனாட்சி அம்மன் தரிசனம், ஜிகர்தண்டா, மல்லி என அனுபவித்துவிட்டு ரயிலில் சென்னை திரும்பினோம்.

பின் வந்த சந்தர்ப்பங்களில் பல நாடுகளை சுற்றி வந்தாலும், தோழிகளுடன் சென்று வந்த இந்த மூணாறு டூர் என்றும் பசுமையாக இதயத்தில் நிலைத்து நிற்கிறது.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்! தேவையான பொருட்கள்: மோர்-1கப், இஞ்சிச் சாறு  - 2 டீஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் - 3, நாட்டுச் சர்க்கரை-1டேபிள் ஸ்பூன், புதினா - 1 பிடி, உப்பு -...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர் “கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது என் பெயரை அழைத்த கேப்டன் அருண், என்னை கேப்டன் ஹரிதா என்று அழைத்து புல்லரிக்க  வைத்தார்.’ என்கிறார்...

ஒரு நாள் முழுவதும் ப்ளாஸ்டிக்கை தவிர்க்கும் சவாலை ஏற்கிறீர்களா?

-தனுஜா ஜெயராமன் ப்ளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக வரும் மே 25 ம் தேதி ப்ளாஸ்டிக், குறிப்பாக டிஸ்போசபிள்...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கடவுளை வணங்குவதும் பழக்கமே! தினமும் காலை கடமைகளை செய்துவிட்டு குளித்து பின் கடவுளை வணங்கவும். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். சின்ன, சின்னதாக 2 வரியில் சொல்லும் ஸ்லோகங்கள் சொன்னாலும் பக்தியுடன் சொல்ல பழக்குங்கள். எனக்கு அதற்கு...

ஜோக்ஸ்!

ஓவியம்: பிரபுராம்   “உன் வீட்டுக்காரர் ஜெயிலே கதின்னு இருக்காரா? அவர் என்ன ஆயுள் கைதியா?” “இல்லை… ஜெயில் வார்டனா இருக்காரு!” -ஆர். மகாதேவன், திருநெல்வேலி =================== “வோட்டுப் போட வந்தவங்களை ஏன் திரும்பிப் போகச் சொல்றாங்க?” “ஏற்கனவே 120 சதவிகிதம் வோட்டு...