தாயுமானவரின் மகள்

ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டிக்கதை - 3
தாயுமானவரின் மகள்

-ஜெயஸ்ரீ கோபாலகிருஷ்ணன்

ஓவியம்: வேதா

நடுவர் பார்வையில்…

‘Living together’ வாழ்க்கை வாழ்ந்து, பிரச்னைகளுக்குள் மாட்டிக்கொள்ளும், இன்றைய கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வு கதை.

ஜெயஸ்ரீ கோபாலகிருஷ்ணன்
ஜெயஸ்ரீ கோபாலகிருஷ்ணன்

சென்னை ஓ. எம். ஆர். சாலையில் உள்ள  அந்தப் பெரிய தகவல் தொழில் நுட்ப அலுவலகத்தில் சிரத்தையுடன் வேலை பார்த்துக்கொண்டிருந்த  ராஷ்மிதா,  இண்டர்காம் சத்தத்தில் கவனம் கலைந்து, ஃபோனை காதில் வைத்து "ஹலோ" என்றாள்.

"ராஷ்மிதா, எக்ஸலெண்ட் ஒர்க். ஒரு மாதத்தில் முடிக்கச் சொன்ன ப்ராஜெக்ட்டை, இருபதே நாட்களில் முடிச்சுட்ட. நிச்சயம் உனக்கு ரிவார்டு இருக்கு. கன்கிராட்ஸ்" டீம் லீடர் பரிதி பாராட்ட, " தாங்க்யூ பரிதி" என்றபடி ஃபோனை வைத்தாள் ராஷ்மிதா

விஷ்ணுவின் மலர்ந்த முகம் நினைவில் நிழலாடியது. விஷ்ணுதான் இந்த அத்தனை புகழுக்கும், பாராட்டுக்கும் காரணம்.

வேலையில் சேர்ந்த புதிதில் இதே பரிதி எப்படி திட்டினான்? பள்ளி பருவத்திலும், காலேஜிலும் எப்போதும் முதல் மதிப்பெண்ணே பெற்ற ராஷ்மிதா அலுவலகத்தில் சேர்ந்த புதிதில் மிகுந்தச் சிரமப்பட்டாள். சிற்றூரிலிருந்து வந்திருந்த ராஷ்மிதாவிற்கு சென்னை மருட்சியைக் கிளப்பியது. இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்து, எங்கேயும் தனியாகத் தங்கியிராதவளுக்கு எல்லாமே புதிதாக, கடினமாக இருந்தது. கல்வியைச் சுலபமாக கற்றவளுக்கு, அலுவலகத்தில் யாரும் ஒன்றுமே உதவி புரியாதது அச்சத்தை மூட்டியது. அப்போதுதான்,  கூட வேலை பார்க்கும் விஷ்ணு, ஒவ்வொன்றையும் மிக நட்புடன் சொல்லிக் கொடுக்க, 15 நாட்களுக்குள் அவளுக்கு வேலை புரிபடத் தொடங்கி, ஒரு மாதத்திற்குள் அவள் வேலைகளில் தேர்ந்து, தனியாகச் செய்து முடிக்க ஆரம்பித்தாள்.

     ராஷ்மிதாவிற்க்கு வயது 23. பால் வெண்மை நிறம். அழகான மெல்லிய உடல்.  நீண்டு அடர்ந்த கூந்தல். கயல் விழிகள். சொந்த ஊர் திருக்காட்டுப்பள்ளி. தனியார் கல்லூரியில் பி.டெக். ஐ.டி. படித்துவிட்டு கேம்பஸ் இண்டர்வியூவில் சென்னையில் வேலை கிடைத்து இங்கு சேர்ந்திருக்கிறாள்.

அவளுடன் அவள் ஊரைச் சேர்ந்த மூன்று தோழிகளும் உடன் வந்திருந்தனர். நான்கு பேரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். அவர்களே சமைத்து சாப்பிட்டனர்.

  ராஷ்மிதாவின் செல்ஃபோன் சிணுங்கியது. எடுத்து பார்த்தால், 'அப்பா' என்று டிஸ்ப்ளேயில் ஒளிர்ந்தது. அதற்குள் மணி ஒன்று ஆகிவிட்டதா? அப்பா வழக்கமாக ஒரு மணிக்கு ஃபோன் செய்து சாப்பிட்டாயா? என்று கேட்பார். அப்பாவை நினைத்தவுடன் மனதில் மகிழ்ச்சி பரவியது.

அதே மகிழ்ச்சியுடன் ஃபோனை எடுத்து, "அப்பா, எப்படியிருக்கப்பா? சாப்பிட்டாயா? தம்பி எப்படி இருக்கான்?" என்று கேட்டாள்.

"இரு ராஷ்மி. ஒவ்வொன்றுக்கா பதில் சொல்றேன். நாங்க நல்லா இருக்கோம். நான் சாப்பிடப் போறேன். நீ போய் முதல்ல சாப்பிட்டு வேலயைப் பாரு."

அப்பாவிடம் 'கட கட' வெனதான் பரிதியிடம் இன்று பெற்ற பாராட்டைக்   கூறி, மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு, ஃபோனை வைத்தாள்.

  ற்ற மூன்று தோழிகளுக்கும் இன்று வேறு ஷிஃப்ட். விஷ்ணு வந்தால் சாப்பிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அங்கு வந்தான் விஷ்ணு. "மற்றவர்களுக்கெல்லாம் இன்னிக்கு வேற ஷிஃப்ட்டா? அதுவும் நல்லதுக்குத்தான். உன்கிட்ட நான் முக்கியமா ஒரு விஷயம் பேசணும் ராஷ்மிதா."

“சாப்பிட்டுக்கொண்டே பேசலாம் விஷ்ணு. இந்தா, உனக்காக நான் கொண்டுவந்த உனக்குப் பிடித்த, அரைச்சு விட்ட வெங்காய சாம்பார் சாதம், உருளைக்கிழங்கு வறுவல்."

"ராஷ்மிதா, நீ உன் தோழிகளோட ஆறு மாசமா தங்கியிருக்க. இப்ப நீ அவங்கள விட்டு வேறு இடத்துக்குப் போனாலும் அவங்களுக்கு அதனால பாதிப்பில்ல. ஆனா, நான் தனியா ரொம்ப கஷ்டப்படறேன். நீ என் கூட லிவிங் டு கெதர் வாழ்க்கைக்கு -  அதாவது, நாம ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து வாழற வாழ்க்கைக்கு ஒத்துக்கோ. நாம சந்தோஷமா வாழலாம்."

"என்ன சொல்றே விஷ்ணு?" ராஷ்மிதா அதிர்ச்சியடைய, "இதில் அதிர்ச்சியடைய ஒண்ணும் இல்லை. வாழ்க்கை வாழ்வதற்கே. நாம் ஜாலியாக வாழ்க்கையை, இனிமையா அனுபவிப்போம். நான்கு சுவர்களுக்குள், நாம் கணவன் - மனைவியா வாழ்வோம். வேலைகளைப் பகிர்ந்துப்போம். விருப்பப்பட்ட இடங்களுக்கு போய் குதூகலிப்போம். ஆனா, ஒருவர் மற்றவருடைய சுதந்திரத்தில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.  என்னுடைய குறிக்கோளே வெளிநாட்டில் வேலை தேடிக்கிட்டு, அங்கே செட்டில் ஆறதுதான். அதுக்கு இன்னும் ரெண்டு வருஷம் ஆகும்.   அதுவரை நாம் ஒண்ணா இருக்கலாம். வெளி நாடு போவதற்கு முன் நாம் கல்யாணம் பண்ணிக்கலாம். அந்தச் சமயத்தில், நம்ம ரெண்டு பேரில்  யாராவது ஒருத்தருக்குக் கல்யாணம் செய்ய விருப்பம் இல்லைனா, நாம், நம்ம விருப்பப்படி யாரை விரும்பறோமோ அவர்களைக் கல்யாணம் செய்துக்கொண்டு நண்பர்களாப் பிரிஞ்சுடுவோம்".

ராஷ்மிதா ஏதோ பேச வாயெடுக்க, " நீ இப்பவே எதுவும் சொல்லத் தேவையில்லை. இன்னிக்கு முழுசா யோசிச்சு,  நாளைக்குச் சொல்லு. ஆனா, நல்ல முடிவா இருக்கட்டும்.”

ரு நிமிடம் கூட தாமதிக்கவில்லை ராஷ்மிதா.

"சீ...சீ... என்னைப் பற்றி என்ன நினைச்சு நீ இப்படி பேசின? ஒரு நண்பனா, நீ எனக்கு வேலைகளைக் கத்துக்குடுத்த. அதேபோல், உனக்குக் கேன்டீன் உணவு பிடிக்கலைனு என்னால் முடிஞ்ச உதவியா நான் மதியச் சாப்பாட்டைக் கொண்டு வந்துத் தரேன். அவ்வளவுதான். அதுக்காக, கண்டபடி வாழற மாதிரி எங்க அப்பா என்னை வளர்க்கலை. சின்ன வயதிலேயே, அம்மாவை இழந்த என்னையும், என் தம்பியையும், உறவினர்களின் கடும் வற்புறுத்தலுக்கிடையிலும், மறு கல்யாணம் கூட செய்துக்கொள்ளாமல், தாயாகவும், தந்தையாகவும் அற்புதமாக வளர்த்த தாயுமானவர் என் அப்பா. நாங்க நல்ல உணவு சாப்பிட, அவர் தண்ணி சோறு சாப்பிட்டு வாழ்ந்தார்.

“+2 முடிக்கும்போது, பள்ளி ஃபேர்வெல் பார்ட்டிக்கு, எல்லோரும் புது உடை போடறாங்கனு எனக்கு புது உடை வாங்கி குடுத்து, அந்த பணத்தை ஈடு செய்ய, ஒரு மாதம் ஓவர் டைம் பார்த்து தன்னை உருக்கிக்கிட்டவர் எங்க அப்பா. கல்வி சுற்றுலா போறது அறிவை வளர்க்கும் என்று அதுக்கு போக, தன் ஒரே உடைமையான ஒற்றை மோதிரத்தை விற்று, என்னை அனுப்பியவர் எங்க அப்பா.

“தினமும் காலேஜூக்கு நான் பஸ்ல போகணும்னு காலையிலும், மாலையிலும் அலுவலகத்துக்கு நடந்து போய் வருவாரு. அப்படி நடந்து, நடந்து அவர்  செருப்பின் குதிகால் பகுதி தேய்ஞ்சு குழி விழுந்திருக்கும். வேறு புது செருப்பு வாங்கி கூட போட மாட்டார். அப்படி எங்களுக்காக தன்னை வருத்திக்கொண்டு தியாகம் செய்தவர் எங்க அப்பா."

"என்ன ராஷ்மிதா, பழைய பஞ்சாங்கம் மாதிரி பேசற? பாரதி சொன்ன ‘புதுமைப் பெண்’ மாதிரி நடந்துக்க வேண்டாமா நீ?"

“பாரதியின் ‘புதுமைப் பெண்’ என்ற வார்த்தைக்குத் தவறான அர்த்தத்தைப் புரிஞ்சுண்ட  உன்னை மாதிரி ஆட்களை மதிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. நீ நினைக்கிற மாதிரி சுயநலமா, தான்தோன்றித்தனமா, ஒழுங்கீனமா நடக்கறதுதான் உன் அகராதியில் ‘புதுமைப் பெண்’ என்றால், அந்தப் பட்டத்தை நான் புறந்தள்ளுகிறேன்.  எங்களுக்கு வேண்டிய அளவு சுதந்திரமும் கொடுத்து,  நம்ம பண்பாடு மற்றும் கலாசார வரம்புகளை மீறிடாத வித்தையையும் கற்றுக் கொடுத்தவர் என் அப்பா. இங்கே என்னைக் கொண்டுவந்து விட்டுபோகும்போது கூட எங்க அப்பா சொன்னார். 'உனக்கு என்ன பிரச்னை என்றாலும் அதைத் தீர்க்க இந்த அப்பா இருப்பேன்.  நீ என்னிக்கும் கவலைப்படாம, மகிழ்ச்சியா இருக்கணும்' என்றார். எவ்வளவு அன்பும், நம்பிக்கையும் இருந்தா, இந்த வார்த்தைகளை சொல்லி இருப்பார்!? அந்த நம்பிக்கையை நான் என்னிக்கும் குலைக்க மாட்டேன். எனக்கு உன் 'புதுமைப் பெண்' பட்டம் எல்லாம் வேண்டாம். அந்தத் 'தாயுமானவரின் மகள்' என்ற பேரே போதும்" ஆக்ரோஷமாகக் கூறிவிட்டு, சுயம் பிரகாசமாய் அந்த இடத்தை விட்டு அகன்ற ராஷ்மிதாவை பார்த்தவாறே விக்கித்து நின்றான் விஷ்ணு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com