உடன் இருக்கும் கடவுள்கள்

உடன் இருக்கும் கடவுள்கள்

நடுவர் பார்வையில்...

சாமானியர்களின் தியாகம் சந்தேகத்துக்கிடமாவதும், பார்வைகள் விசாலமாக வேண்டும் என்பதும் நல்ல கருத்து.

ஜெயஸ்ரீராஜ் நினைவு சிறுகதைப்போட்டி – 2022 பரிசுக்கதை – 2

சிறுகதை:  சகா

ஓவியம்: சேகர்

சகா
சகா

லுவலக நேரம் முடிந்து ஒரு பத்து நிமிடம் கடந்திருக்கும். அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத ஒரு ஃபைலைப் புரட்டிக்கொண்டிருந்தேன். பேருந்திற்கு இன்னும் நேரமிருந்தது.

சாமியப்பன் அருகில் வந்து நின்றான். அவனது வழக்கமான இழுவைக் குரலில் “மேடம்...”

“காபி வேண்டாம் சாமியப்பா. கால் மணியில கிளம்பிடுவேன்.”

“அதில்லை மேடம், வந்து... எனக்குக் கல்யாணம்..”

நான் நிமிர்ந்து அவனைப் பார்த்தேன். அவனது முகத்தில் நாணமில்லை. பெரிய மகிழ்ச்சியும் இல்லை. சாதாரணக் குரலில் அசாதாரண செய்தி சொன்னான்.

“கல்யாணமா? என்னப்பா சொல்றே? உனக்கு இன்னும் கல்யாணமாகலையா?

“இ… இல்லைங்க மேடம். இப்போதான் முதல் தடவையா...”

சிரித்துவிட்டேன். “சாமி என்னைத் தவறா நினைக்காதே. உன்னைப் பத்தின பர்சனல் விசயங்கள் எனக்குத் தெரியாது. திருமணமாகி இருக்கும்ன்னுதான் நினைச்சேன்.” அவனைப் பார்வையால் கணித்தபடி ”உனக்கு வயசு ஒரு நாற்பத்தி அஞ்சு இருக்குமா.?”

“இல்லைங்க மேடம். நாற்பத்தி நாலு முடிஞ்சு எட்டு மாசம்.”

“ஓஹோ. சரி கல்யாணம் எப்போ வெச்சிருக்கீங்க. எங்கே?”

“வர்ற நாயித்துக்கிழமைங்க மேடம்.”

“வாட்… இன்னைக்கு வியாழன். அதுவும் முடிஞ்சுது சாமியப்பன். ரெண்டு நாள் கேப்புல கல்யாணமா?” அதிர்ச்சியாக இருந்தது. ”என்ன இவ்வளவு வேகமா?”

“ஆமாங்க மேடம்.” தலையாட்டினான். ”பத்திரிக்கையெல்லாம் எதுவும் அடிக்கலை. மண்டபம் கிடையாது. வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பெருமாள் கோயில் இருக்கு. அங்கே வெச்சு சிம்பிளா… காலையில ஏழு மணி சுமாருக்கு.”

நான் அமைதியானேன். அவனும்.

இதில் வேறு ஏதோ ஒரு விசயம் இருக்கிறது. கல்யாணம் என்பதைத் தாண்டி அதைவிட இன்னும் கனமாக, தீவிரமாக, வீரியமாக.

“அவசியம் வந்துடுங்க மேடம். நான் ஆபிஸ்ல எல்லோர்கிட்டயும் இதைச் சொல்லலை. ரொம்பத் தெரிஞ்சவங்களை மட்டும் தான் கல்யாணத்துக்கு கூப்பிட்டிருக்கேன்..”

நான் வேறு மாதிரி யோசித்தேன். “உங்க வருங்கால மனைவி எந்த ஊரு?”

கொஞ்சம் திணறினவன், “அதெல்லாம் இல்லைங்க. என் பக்கத்து வீட்டுக்கு பக்கத்து வீடு.”

அவ்வளவுதான். லகானின் முனையைப் பற்றியதும் குதிரை கட்டுக்குள் வர ஆரம்பித்தது. “என்னப்பா சொல்றே?” என்கிற ஒற்றை வார்த்தையே மேற்கொண்டு எல்லாவற்றிற்கும் போதுமானதாக இருந்தது.

“அவ… அவங்க பேர் தமிழ்ச்செல்வி மேடம். ஏற்கனவே கல்யாணமாகி, நாலு வயசுல சினேகான்னு ஒரு பெண் குழந்தை இருக்கு. அவங்க புருசன் போன மாசம் தொற்றுநோய் பாதிப்புல இறந்துட்டாரு. இப்போ தனியாத்தான் இருக்காங்க. அவங்களைத்தான் நான்...”

நிஜமாகவே வியந்தேன். “வாழ்விழந்த ஒரு பெண்ணுக்கு மறுவாழ்வு தரப் போறீங்களா க்ரேட்! அதையேன் இவ்வளவு தயக்கத்தோட, குற்றம் பண்ணுகிறவர் குரல்ல சொல்றீங்க.”

“அதுவந்து...” தயங்கி நிறுத்தினான். “என்கூடப் பிறந்தவங்க ரெண்டு அக்கா, ஒரு தங்கச்சிங்க. அவங்க எல்லோருக்கும் கல்யாணம் முடிச்சி, கடமைகள் செய்து நிமிர்ந்து பார்த்தா எனக்கு முப்பத்தியெட்டு ஆயிடுச்சு. அந்த வயசிலே போய் புதுசா பொண்ணு பார்த்து, சீர் பேசி, ரெண்டு குடும்பமும் புதுஉறவு கொண்டாடறது லேசு காரியமா. அதான் அப்படியே விட்டுட்டேன் மேடம். எனக்கு அம்மா மட்டும்தான். அவங்களும் புலம்பி புலம்பியே அலுத்துப் போய் விட்டுட்டாங்க.”

“சரி தமிழ்ச்செல்வி குடும்பம்? முன்னாள் கணவர்?”

“அவரு லோடுமேனுங்க. பெரிசா வருமானம்ன்னு எதுவும் இல்லாத குடும்பம்.

இருந்த கொஞ்சத்தையும் அவரோட கடைசி கால வைத்தியத்துக்கு தமிழ்ச்செல்வி செலவு பண்ணி அழிச்சுடுச்சு. இப்போ பெண் குழந்தையோட, அனாதையா துணை ஒண்ணுமில்லாம நிக்கிறாங்க.”

“ஏன் அவங்க அம்மா, அப்பால்லாம்?”

“அவரு செத்துப் போனதுக்கே பயந்துக்கிட்டு யாரும் வரலைங்க. அக்கம்பக்கம் ரெண்டு, மூணு பேர்தான் மயானத்துல உதவி பண்ணினோம். நான்தான் கொள்ளி வெச்சேன்! அந்தக் குழந்தைக்கு நான்னா பிரியம். எங்க அம்மாவையே பாட்டி பாட்டின்னு எந்நேரமும் சுத்தி சுத்தி வரும். தமிழ்ச்செல்வியோட நிலைமையைப் பார்த்து சங்கடப்பட்ட அம்மாதான் இப்படியொரு திட்டம் சொல்லுச்சு.


தமிழ்ச் செல்வி ஆரம்பத்துல இதுக்கு ஒத்துக்கலை. நாலஞ்சு பேர் மாத்திமாத்திப் பேசி சம்மதிக்க வெச்சோம். என்னமோ இருக்கிறவரை ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவு. அவ்வளவுதானுங்க மேடம்.”

நிறையப் பேசி விட்டதாக நினைத்து நிறுத்தினார்.

“சரி உங்க அக்கா, தங்கச்சிகள்ளாம்.?”

“அவங்க யாருக்கும் இதுல சந்தோசம் இல்லைங்க மேடம். கல்யாணத்துக்கு ஒத்துழைப்பு கிடையாது. இவ்வளவு வருசம் காத்திருந்துட்டு கடைசியில புருசன் இல்லாத ஒருத்தியைப் போய் கல்யாணம் பண்ணிக்கறியான்னு கோபமாக் கேட்கறாங்க. கல்யாணத்துக்குக் கூட வர மாட்டாங்களாம்.”

“அடடா...”

“வருசம் தவறாம தீபாவளி, பொங்கல் சீர் செஞ்சு, நல்லது, கெட்டது எல்லாம் பண்ணி, யார் மனசும் நோகக் கூடாதுன்னு பார்த்து பார்த்து கடமைகளைச் செய்தும் கூட கடைசியில சங்கடப்படுத்திட்டாங்க மேடம். யார் வீட்டுக்கும் இனி நாங்க வரக் கூடாதாம். அப்போதான் அம்மா தெளிவுபடுத்துச்சு. ’உனக்குன்னு ஒரு குடும்பம் வந்துட்டா இனி உன்கிட்டேயிருந்து எதையும் பிடுங்க முடியாதுல்ல. அந்தக் கோபம்தான்! அவளுகளை விட்டுத் தள்ளு..’ன்னாங்க.”

“ஆமாம். அதுவும் சரிதான்.” யோசித்தவள் ”முன்பணம் ஏதாவது தேவையா சாமியப்பன்?”

“வேண்டாம்ங்க மேடம். சிக்கனமாத்தான் கல்யாணம் பண்றோம். ஒரு பத்தாயிரத்துக்குள்ள கல்யாணமே முடிஞ்சுடும்.”

நான்கு வருடத்திற்கு முன்பு நடந்த என் மகளின் திருமணத்துக்கு முகூர்த்த ப்ளவுஸ் தைக்கவே அதற்கும் அதிக செலவானது நினைவுக்கு வந்தது.

“என் பக்கம் ஒரு ஏழெட்டுப் பேர். தமிழ்ச்செல்வி பக்கம் அவங்க அப்பா மட்டும் வர்றாரு. வீதிக்காரங்க நாலஞ்சு பேர். அவ்வளவுதாங்க கூட்டம். தாலிகட்டு முடிச்சுட்டு பக்கத்துலேயே ஒரு மெஸ்சுல டிபன் சொல்லியிருக்கோம். விருந்து முடிச்சுட்டு வீட்டுக்குக் கிளம்பிடுவோம். மத்தியானமே வழக்கம்போல நான் ஆபிஸ் வந்துடுவேன் மேடம்.”

நான் சிரித்தேன்.

“கண்டிப்பா வந்துடுங்க மேடம். நீங்க வந்தா கொஞ்சம் தெளிவா இருக்கும்..”

சாமியப்பன் நகர்ந்தார். அவர் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ரவு எட்டு மணி இருக்கலாம்...

புனிதவதி போன் செய்தாள். “மேடம் அந்த சாமியப்பன், கல்யாணத்துக்கு உங்களைக் கூப்பிட்டிருக்கானா?”

“ஆமாம். உனக்கும் அழைப்பு உண்டா? யாரைக் கூப்பிட்டிருக்காருன்னு தெரியாததால யாரோடயும் பேச முடியலை. தர்மசங்கடம் ஆயிட்டா தப்பில்லே?”

“நீங்க, நான், சீனிவாசன் சார் மூணு பேரை மட்டும்தான் கூப்பிட்டிருக்கார் மேடம்...”

தனது செயலால் மரியாதைக்குரிய இடத்தில் சாமியப்பன் இருந்தார்! எனவே நானே மரியாதை கொடுத்துப் பேச ஆரம்பித்ததும் ஆரம்பத்தில் ன் என்றவள் ர் க்கு மாறிப் போனாள் புனிதவதி.

“அந்தப் பொண்ணைப் பத்தி ஏதும் சொன்னாரா மேடம். இவரு பெரிய தியாகின்னு அவசரப்பட்டு நினைச்சுடாதீங்க மேடம். இதுல நடந்த நிறைய விசயம் உங்களுக்குத் தெரியாது.”

“புரியலை நீ பேசறது…”

என் அப்பாவித்தனமோ.. எனக்குத் தெரியாத ஒன்றை பகிர்ந்து கொள்ளும் ஆர்வக் கோளாறோ வேகம்வேகமாக ஆரம்பித்தாள் புனிதவதி.

“மேடம் அந்தம்மாவோட புருசன் செத்துப் போனானே.. அதுக்கப்புறம் நடந்ததெல்லாம் நம்மகிட்டே சொல்லாம அவர் மறைச்சுட்டாரு மேடம்.

அரசாங்கத்துல இருந்து லட்சம் ரூபா நிவாரணம் கொடுத்திருக்காங்க. அப்புறம் நலவாரியத்திலிருந்து பண உதவி. பிரபல நடிகர் ஒருத்தர் வெளியே தெரியாம இவங்க வங்கிக் கணக்குல பணம் போட்டிருக்காரு, அந்த குட்டிப் பொண்ணோட எதிர்காலத்துக்கு.”

“நல்ல விசயம்தானே புனிதவதி இதெல்லாம்! பாவம், இல்லாதவங்க அனுபவிக்கட்டுமே.!”

“என்ன மேடம் இப்படியிருக்கீங்க.! அந்தம்மாவை அவ அப்பன்காரன் வந்து ’வா..’ன்னு கூப்பிட்டிருக்கான் மேடம். இவதான் கூடப் போக மாட்டேன்னுட்டா. அண்ணன்காரன் கூப்பிட்டும் போக மறுத்திட்டா. ஏற்கனவே சாமியப்பனுக்கும் இவளுக்கும் ஒரு ‘அன்டர்ஸ்டேன்டிங்’ இருந்திருக்கும் போல. லட்சம் லட்சமா பணம் வேற கையில இருக்கு. புருசன் கொரோனா பாதிப்புல போய்ச் சேர்ந்ததும் இதுதான் நல்ல சான்ஸ்ன்னு ரெண்டு பேரும் ஜோடி சேர்ந்திட்டாங்க! புருசன்காரன் செத்து மூணு மாசத்துக்குள்ள கல்யாணமா.! மைகாட். அவ மனசென்ன கல்லா.? இதையெல்லாம் நம்பவா முடியுது?”

“எனக்கு என்ன பேசறதுன்னு தெரியலை புனிதா.. மனிதர்கள் அத்தனை மோசமானவங்களா..?”

“என் வீட்டுக்காரரோட ரிலேசன் ஒருத்தர் அவங்க தெருவிலேதான் குடியிருக்காரு. அவருதான் இதையெல்லாம் கதை கதையா வந்து சொன்னாரு மேடம்.”

 “ஓ...”

“ஆமாம் மேடம். எனக்கு மனசு ஒப்பலை மேடம். நான் அந்தக் கல்யாணத்துக்கு வரலை. அதான் உங்ககிட்டேயும் இதையெல்லாம் சொல்லிடலாம்ன்னு அவசரமா போன் செஞ்சேன்.”

“ம்...”

“நீங்களும் போகாதீங்க மேடம். தப்புக்கு நாம துணை போகக்கூடாது. இதையெல்லாம் ஒரு கல்யாணம்ன்னு ஏத்துக்கவே மனசு மறுக்குது. சரியான சுயநலம் பிடிச்ச பணப் பேய்ங்க மேடம். வாய்ப்பு கிடைச்சதும் எப்படி மாறிடுதுக பார்த்தீங்களா?”

“என்னம்மா இது, மணி பத்தரைக்கும் மேல ஆச்சு. தூங்காம ஹால்ல உலாத்திக்கிட்டு இருக்கே?” கணவர் கேட்டார்.

“கொஞ்சம் மனசு சரியில்லைங்க. அதான்…” என்றேன்.

“ஏதாவது ஆபிஸ் குழப்பமா. உதவி பண்ணனுமா...”

வழக்கமான அக்கறையுடன் விசாரித்தார்.

இவரிடம் பகிரலாமா என ஒரு நொடி யோசித்தேன். வேண்டாம். இன்னொரு நேரம் அமையட்டும் என தவற விட்டேன். இந்த சாமியப்பன் விசயத்தில் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் என் மனம் தடுமாறி ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தது.

யார் சொல்லுவது சரி. யாரை, எதை நம்ப? சாமியப்பன் செய்வது தியாகமா, துரோகமா. சரி, இதை நாம் நம்பினால் என்ன லாபம், நம்பாவிட்டால் என்ன நட்டம்? மனதில் ஒரு சுமையை ஏற்றிக்கொண்டு நான் ஏன் இத்தனை அவஸ்தைப்படுகிறேன் இறைவா.

கல்யாணத்தில் பெயர் அளவுக்கு கலந்துகொண்டு ஒரு ஐநூறு ரூபாய் மொய் வைத்துவிட்டு… சாப்பிடவெல்லாம் கூட வேண்டாம். ஏதோ அழைத்த கடமைக்கு தலைகாட்டிவிட்டு.

ஏதேதோ சிந்தனைகளுடன் போராடி… ஒருமணி நேரம் கழித்து படுக்கைக்கு திரும்பினேன்.

“என்னங்க தூங்கிட்டீங்களா?”

“ஆரம்பம். சொல்லு.”

”எங்க ஆபிஸ் ப்யூனுக்கு மேரேஜ். காலையில ஏழு மணிக்கு. வாங்க ஒரு நடை போயிட்டு வந்துடலாம்..”

“வாய்ப்பே இல்லை. காலையில ஷட்டில் மேட்ச் இருக்கு. ஒரு சின்னப் போட்டி. அவசியம் க்ரவுண்டுக்கு போகனும்.”

“எப்படியும் தோத்துட்டுத்தான் வரப் போறீங்க. அதுக்கு என்கூட வந்தா சரித்திரத்தில் பேர், புண்ணியம், சொர்க்கத்துல இடம்ல்லாம் கிடைக்கும்.”

ரியாக பனிரெண்டு நிமிடத்தில் முடிந்துவிட்டது அந்தக் கல்யாணம்.

ஒரு வினாயகர் பூஜை, ஒரு குலதெய்வ பூஜை, பத்து குச்சிகள் போட்டு ஒரு குட்டி ஹோமம், இரண்டு நிமிடப் புகை, வந்திருந்த பனிரெண்டு பேர் அட்சதை தூவ, தாலிகட்டி…

அந்தப் பெண் தமிழ்ச்செல்வி மஞ்சள் புடவையில் சாதாரண அழகில் தெரிந்தாள். சந்தோசமும் படமுடியாமல், அழவும் முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். சிருஷ்டிகா பாப்பா யார் கை நீட்டி அழைத்தாலும் போனது.

நாங்கள் தம்பதியாக கலந்துகொள்வோம் என எதிர்பார்க்காத சாமியப்பன் மகிழ்ந்தார். கல்யாணம் முடிந்ததும் எங்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டார்கள். புனிதவதியும், சீனிவாசன் சாரும் கடைசி நொடி வரை வரவில்லை. இட்லியும், பூரியும், ஊத்தப்பமும் பரிமாற... சாப்பிட்டு விட்டு மொய்யாக பத்தாயிரம் தந்துவிட்டு வாழ்த்து சொல்லி வெளியேறினோம்.

வீட்டிற்கு வந்ததுமே காத்திருந்த மாதிரி ஆரம்பித்தார் என் கணவர்.
”ஐநூறு, ஆயிரம்ன்னா சரி. பத்தாயிரம் உனக்கே ஓவராகத் தெரியலை?” குதித்தார்.

வளையலைக் கழட்டி பீரோவில் வைத்துக் கொண்டிருந்தவள் அவரிடம் திரும்பினேன். “அது மொய்ப் பணம் இல்லைங்க. எனக்கு நானே கொடுத்துக்கிட்ட தண்டனைத் தொகை...”

“என்ன உளர்றே.”

நடந்த அத்தனையையும் சொன்னேன். “சரி சரி” என்றபடியே கேட்டுக்கொண்டார். கடைசியில் எதுவும் புரியாது  “இப்போ முடிவா என்ன சொல்ல வர்றே?” என்றார் பரிதாபமாக.

“அந்த சாமியப்பன் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். புனிதவதியின் பார்வையில் அவன் தவறானவன், அவளும் தவறானவள் என்றால் அவ்வளவு தான் அந்தப் புனிதவதியின் தரம். அவளின் மனத் தரத்திற்கு அவர்களைப் பற்றி அவ்வளவுதான் அவளால் நினைக்க முடியும்! அப்படியொரு முடிவுக்கும் வரமுடியும்.! ஆனால் உயர்ந்த எண்ணத்தில், தரத்தில் இருக்கும் என் மனம் அப்படியொரு கீழ்த்தரமான, மாறுபட்ட எண்ணத்தில் சிந்திக்காது! சிந்திக்கவும் கூடாதுதானே. உயர்வான நான் உயர்வாகத்தானே ஒன்றைப் பார்க்க வேண்டும்? அதுதானே என் குணம்? நான் நல்லவன், நல்லது செய்கிறேன் என்று என்னை நானே நம்பும்போது மற்றவர்களையும் அப்படியே நம்பி ஏற்றுக் கொள்வதுதான் சரியென்று படுகிறது எனக்கு.

என்னவர் சில நொடி கழித்து புரிந்தது போலத் தலையாட்டினார்.

“புனிதவதி சாமியப்பனைப் பற்றி சொன்னதும் அவசரப்பட்டு, ஒரு நொடி நிலை தடுமாறினேனே அதற்கான தண்டனைதான் நான் கொடுத்த கூடுதல் மொய். உலகம் குறித்த, மனிதர்கள் பற்றின என் பார்வைகளை இன்னும் விசாலமாக்கிக்கொண்டே இருக்கின்றனர் சாமியப்பன்கள் போன்ற சாமானியர்கள்..”

அவருக்காக மட்டும் சொல்லவில்லை. எனக்குள்ளேயே நான் சொல்லிக்கொள்கிறேன் திரும்பத்திரும்ப.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com