0,00 INR

No products in the cart.

வெள்ளமும் விடியலும்! 

சிறுகதை: தனுஜா ஜெயராமன்
ஓவியம்: லலிதா

 

ருள் கவிழ தொடங்கிய மாலைநேரம். மேகம் வெடித்து பொழியும் தருணத்தில் சில்லென்ற ஊதக்காற்றை கிழித்து வெளியே ‘லொள்’ ‘லொள்’லென்ற சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தது. உள்ளே சமையலறையில் பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்த சங்கீதாவிற்கு அது வழக்கமான சத்தமாகத் தோன்றவில்லை… வானம் வேறு பலத்த இடி சத்தத்துடன் பொத்துகொண்டு ஊற்றியது… மழை என்றால் சாதாரண மழையல்ல…பேய் மழை…

“என்னம்மா ஒரே சத்தமா இருக்கே…” என்று கேட்டபடி பெட்ரூமிலிருந்து வெளியே வந்தார் சுப்ரமணியன்…

“தெரியலைங்க …வெளியே ஏதோ நாய் குரைக்குற சத்தம் கேக்குது…” என்று சொல்லியபடி வெளியே எட்டி பார்த்தாள்.

மூன்று நாட்களாக மழை விட்டபாடில்லை. வாசல் கேட்டை தாண்டி போர்டிகோ வரை தண்ணீர் நின்றிருந்தது. இன்னும் மழை தொடர்ந்தால் வராண்டாவைத் தாண்டி தண்ணீர் வீட்டுக்குள் வர வாய்ப்பிருக்கிறது என்று மனதில் நினைத்தபடி திரும்பினாள்.  மாடிபடியின் அடியில் மோட்டார் சந்திற்குள் ஒரு நாய் பதுங்கி இருந்தது. சங்கீதாவை கண்டதும் லேசாக வெளியே எட்டி பார்த்தது பரிதாபமாக. அப்போதுதான் கவனித்தாள் நிறைமாத கர்ப்பிணியாக அதன் வயிறு மேடிட்டு இருப்பதை. முகத்தை பார்த்தாலே புரிந்தது அது பட்டினியாக கிடக்கிறது என்று.

சட்டென நினைவு வந்தவளாக, உள்ளே ஓடிச் சென்று பழைய தட்டு ஒன்றில் பாலையும் மற்றொன்றில் சாதத்தையும் வைத்தாள்.

சத்தம் கேட்டு வெளியே வந்த சுப்ரமணியன், “என்னம்மா பண்றே?” என்றார்.

“பாவம்ங்க, மாசமா இருக்கு” என்றாள் கண்கள் மின்ன.
“இந்த மழையிலே எங்க சாப்பாடு கிடைத்திருக்க போகுது. அதான் கொஞ்சம் சோறு வைக்கிறேன்,” என்றாள் மலர்வாக. பசியோடு இருந்த நாய் வேகவேகமாக சாப்பிடுவதை ஆசையாக கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கீதா.

“கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து வையும்மா அதுக்கு” என்றவர்,
“ஒரே ஊத காத்தாக இருக்கிறது. சீக்கிரம் உள்ளே வந்திடுமா. ஜுரம் வந்திட போகுது,” என்றபடி உள்ளே சென்றுவிட்டார்.

டிவி சேனல்கள் வானிலை அறிக்கைகளை நிமிடத்திற்கு நிமிடம் வந்து கொண்டிருந்தன. மழை தேங்கிய ரோடுகள், முழுவதும் நிரம்பிய ஏரிகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் லைவ் டெலிகாஸ்ட் செய்து கொண்டிருந்தன.

“மழை இப்பத்திக்கு நிக்காது போல இருக்கும்மா. கரண்ட் வேற கட் ஆகலாம். நீ சீக்கிரம் டிபனை தயார் பண்ணிடு. நாம சாப்பிட்டு சீக்கிரம் படுக்கலாம்…” என்றார் சுப்ரமணியன்.

“சரிங்க.. நைட் டிபனுக்கு அடை அவியல் பண்ணிறவா? மத்தியானம் மீந்த கைப்பிடி சாதத்தை பால் கலந்து நாய்க்கு வைச்சிடலாம். பாவம்ங்க கர்ப்பமா இருக்கு,” என்றாள்.

சுப்ரமணி சங்கீதாவை அழுத்தமாக பார்த்தார். முகத்தில் சந்தோஷக்களை. திருமணம் ஆகி இருபது ஆண்டாகியும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. ஏறாத கோயிலில்லை, வேண்டாத தெய்வமில்லை. ஒருவாறு மனதை சமாதானப்படுத்திக் கொண்டு எனக்கு நீ உனக்கு நானென வாழ பழகியாயிற்று. எனினும் சங்கீதாவின் மனதில் அந்த ஏக்கம் இல்லாமல் இல்லை. தற்போதைய சந்தோஷத்திற்கு காரணம் அந்த கர்ப்பிணி
நாய்தான் என்பது புரிந்தது. இதை யோசித்தபடியே டிவியில் ஆழ்ந்து போனார் சுப்ரமணியன்

எல்லா வேலைகளையும் முடித்த சங்கீதா “சாப்பிடலாம் வாங்க,” என கணவனை அழைத்தாள். இரவு உணவிற்கு பிறகு கதவை மூட வெளியே வந்த சங்கீதா குளிர் உடலை துளைப்பதை உணர்ந்தாள்… விறுவிறுவென்று ஓடிப்போய் துணி வைக்கும் ஷெல்பை கலைத்து தேடினாள்

“ஏம்மா! இந்த நேரத்தில் என்ன தேடிகிட்டிருக்க?”

“இல்லீங்க, வெளியே ரொம்பவும் குளிர் பின்னி எடுக்குது. பாவம்ங்க அந்த நாய். அதான் பழைய கிழிந்த பெட்ஷிட் ஒண்ணு இருக்கு அதை தேடுறேன்,” என்றாள். சற்று நேரத்தில் “இந்த சாக்கையும், போர்வையும் அதுக்கு போட்டுட்டு வரேன்,” என்று ஓடினாள்..

சாக்கு கோணியை மாடிபடி அடியில் விரித்து வைத்ததும் அது வாலாட்டி தன் நன்றியைத் தெரிவித்தபடி அதில் அமர்ந்தது கொண்டது. அருகில் இருந்த கிழிந்த பெட்ஷிட்டை வாயால் கவ்வி கொண்டது. மழை சற்றுமே ஓய்ந்த பாடில்லை. தண்ணீர் மட்டம் வேறு மேலேயேறி வந்து கொண்டிருந்தது.

கவலையுடன் கதவைச் சாத்தி உள்ளே வந்த சங்கீதா கட்டிலில் அமர்ந்தாள். “ஏங்க! இந்த நாய்க்கு பிரசவ வலியெடுத்தா என்னங்க பண்ணும்? யாரை துணைக்கு அழைக்கும்?” என்று குழந்தைதனமாக கேட்டாள்.

“மனுஷங்களுக்குதான்மா ஆயிரத்தெட்டு ஆஸ்பத்திரி, நோய்ன்னு பயம். விலங்குகள் தன்னைத்தானே காத்துக்  கொள்ளும் ஆற்றலும், வல்லமையும் பெற்றது. நீ கவலைப்படாமல் தூங்கு. கண்டதையும் யோசிக்காதே” என்று அதட்டினார். சங்கீதாவை அதட்டினாலுமே அவருக்கும் உள்ளுக்குள் பாவமாக இருந்தது.

அரசு வேலையில் இருந்த சுப்ரமணியன் புறநகரில் மலிவு விலையில் இந்த இடத்தை வாங்கினார். வீட்டை கட்டி பத்து வருடமாக இங்கே குடியிருக்கிறார். சாதாரணமாகவே தாழ்வான பகுதியாக இருப்பதால் சிறிது மழைக்கே குளம் போல நீர் தேங்கும். தற்போது பெய்யும் பேய் மழைக்கு என்னாகுமோ என கவலைப்பட்டார் சுப்ரமணியன்.

காலையில் எழுந்ததும் பாலை அடுப்பில் வைக்கும் போது தான் நாயின் நினைவே வந்தது சங்கீதாவிற்கு. விடுவிடுவென கதவை திறந்து மாடிபடி அடியில் குனிந்து பார்த்தாள் சட்டென்று பரவசமடைந்தாள்.

சோர்ந்து போய் படுத்திருந்தது அந்த நாய் அதனருகில் நாக்கால் நக்கியபடி வெள்ளையும் கறுப்புமாக புள்ளியுடன் நான்கு நாய்குட்டிகள். பார்த்ததுமே மகிழ்ச்சியில் நெஞ்சை அடைத்தது சங்கீதாவிற்கு.

அருகில் சென்று பார்த்தாள். சாக்கு குதறி போட்டது போல் இருந்தது. வலியில் கடித்திருக்கலாம் என்று நினைத்தாள். போர்வை முழுவதும் இரத்தத்தால் நனைந்திருந்தது. சங்கீதாவை சோர்வாக பரிதாபமாக நோக்கியது அந்த நாய்.

உள்ளே ஓடிசென்று காய்ச்சிய பாலை ஆறவைத்து தட்டில் ஊற்றி குடிக்க செய்தாள். அது நன்றியுடன் பார்த்தது. கிழிந்த சாக்கையும், நனைந்த போர்வையையும் தூக்கி தூர எறிந்துவிட்டு புதியதை எடுத்து வந்து போட்டாள்.

அதன் மேல் நாய் குட்டியை தூக்கி வைக்கும்போது, பஞ்சு போன்ற அதன் ஸ்பரிசத்தை  தொட்டதும், அப்படியே மெய் சிலிர்த்துப் போனது அவளுக்கு. இதுவரை வாழ்நாளில் அவள் அனுபவிக்காத பரவசம் அது. ஆசையாக அதன் உடலை வருடிக் கொடுத்தாள். கடவுள் தனக்களிக்காத பாக்கியம் என ஏக்க பெருமூச்செறிந்தாள். உடனே சட்டென சுதாரித்து நிமிர்ந்தாள்.

சந்தோஷமாக வீட்டில் நுழைந்து காலை உணவை தயாரிக்க ஆரம்பித்தாள். எப்போதும் இல்லாத மகிழ்வும், மனநிறைவும் மனதை ஆக்ரமித்தது. உற்சாகமாக வேலையைத் தொடர்ந்தாள்.

“என்னம்மா காலையிலேயே ஒரே சந்தோஷமா இருக்கே,” என நியூஸ் பேப்பரை கையிலெடுத்தபடி கேட்டார் சுப்பிரமணியன்.

“ஏங்க! அந்த நாய் நாலு குட்டி போட்டிருக்குங்க. கறுப்பும் வெள்ளையுமா பார்க்கவே அழகா இருக்குங்க,” என்றாள் குதூகலத்துடன். பல நாட்களுக்கு பிறகு மகிழ்வுடன் இருக்கும் மனைவியை அன்புடன் பார்த்தார்  சுப்பிரமணி, சங்கீதாவின் முகத்தில் தாய்மை உணர்வு மிளிர்ந்தது

“ஏங்க ! அந்த குட்டிகளை நாமளே வளர்க்கலாமா?” என்றாள் ஆர்வமுடன்
கல்யாணம் ஆனதிலிருந்து விரும்பி எதையுமே கேட்டதில்லை. முதல் முறையாக கேட்கிறாள். மறுப்பு ஏதும் சொல்லாமல் “தாராளமா உனக்கு பிடிச்சா நீயே வைச்சுக்கம்மா,” என்றார் மகிழ்வுடன்

பல வருடங்களாக வெறுமை நிரம்பிய இந்த இல்லம் அந்த குட்டிகளின் வரவால் முழுமை பெற்றதாக உணர்ந்தாள் சங்கீதா. பிரசவித்த தாய்க்கு பால் வைப்பதும், உணவு வைப்பதும், குட்டிகளை கொஞ்சுவதும் என மகிழ்வுடன் அன்றைய பொழுது ஓடியது. ஒரே நாளில் குட்டிகளுக்கும் சங்கீதாவிற்குமிடையே ஒரு ஆயுள் பந்தம் ஏற்பட்டுவிட்டது. வெளியே எட்டி  பார்த்தாள் மழை ஒய்ந்தபாடில்லை போர்டிகோவை தாண்டி நீர் வர தொடங்கி இருந்தது.

“ஏங்க! மழை இன்னும் விடவேயில்லை… இன்னும் கொஞ்சம் மழை வந்தா வீட்டுக்குள் கூட தண்ணீர் வந்துடும் போல இருக்கே? ”  என்று அவள் சொல்ல சிறிது நேரத்தில்  கரண்ட்டும் ‘கட்’ ஆகிவிட்டது. இருட்டில் மெழுகு வர்த்தியைத் தேடினாள். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு சாப்பாட்டு கடை முடிந்ததும் கதவை தாழிட்டு உறங்க வந்த சங்கீதாவை. “என்னம்மா என்னை கண்டுக்கவே மாட்டேங்குறே? பிஸியாயிருக்கியே நாள் பூராவுமே,” என கிண்டலடித்தார்..

“அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க. பாவம் அந்த நாயும், குட்டிகளும். அதற்கும் யாரும் ஆதரவில்லை, நமக்கும் யாருமில்லை.”  என்றாள்

“நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்மா. உன் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்” என ஆதரவுடன் மனைவியின் தலையைக் கோதினார்.

“ஏங்க! மழை விடுறா மாதிரியே தெரியலை நாளைக்கு மாடியை திறந்து வாட்டர் டேங்க் கீழே நாயையும் குட்டிகளையும் பத்திர படுத்திடலாமா? பாதுகாப்பா இருக்கும். இன்னைக்கே தண்ணி வந்திடுமோன்னு பயமா இருக்கு, ” என்றாள் கவலையுடன்.

“அதுக்கென்ன.. தாராளமா உன் இஷ்டம் போல செய்யும்மா!” பல நாட்களுக்கு பிறகு மனைவியின் முகத்தில் ஒரு நிம்மதியை மகிழ்வை கண்டபடியே உறங்கி போனார் சுப்ரமணியன்.

இது எதையுமே அறியாத இயற்கை வெளியே தன் சுயரூபத்தை காட்டிக் கொண்டிருந்தது. மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்தது.
ஏரியின் நீர் கொள்ளளவை எட்டி விட்டது. வேறுவழியேயில்லை ஷட்டர்கள் திறக்காவிட்டால் மதகுகள் உடைய வாய்ப்புள்ளது. எனவே முன்னறிவிப்பின்றி நடுஇரவில் ஷட்டர்கள் திறந்து விடப்பட்டது.

“ஓ” வென்ற இரைச்சலுடன் சுனாமியை போல மின்னல் வேகத்தில் வந்த வெள்ளம்,  சில நிமிடங்களில் வீடுகளை சூழ்ந்துக் கொண்டது.

சிறிது சிறிதாக நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வீடுகளை களேபரம் செய்ய, இது எதையுமே அறியாத சங்கீதாவும் சுப்ரமணியனும் எதிர்கால கனவுகளையும், ஆசைகளையும், நாய்க்குட்டிகளையும் மனதில் சுமந்தபடி நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தனர்.

நாளை எப்படி விடியுமோ?…

தனுஜா ஜெயராமன்
சென்னையை சேர்ந்த தனுஜா ஜெயராமன் வளரும் பெண் எழுத்தாளர். M.com படித்து அலுவலக கணக்காளராக பணிபுரியும் அவர் கதைகள் , கட்டுரைகள், ஜோக்ஸ், துணுக்குகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். பல்வேறு முன்னணிப் பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகி உள்ளன. அமேசான் கிண்டிலில் அவரது சிரிப்பு கதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...