ஊரைச் சொல்வதோ, பேரைச் சொல்வதோ நாகரிகமில்லை; கட்டுரைக்காக அவர் பேரு பூபதி! ஓ.கே?
பலரும் மூன்று இலக்க சம்பளத்தை வாங்கிக் கொண்டிருந்த காலத்திலேயே பூபதி பெரிய கோடீஸ்வரர். தங்கம், இரும்பு, நூற்பாலை, சர்க்கரை என ஏகப்பட்ட பிஸினெஸ்! நெடுஞ்சாலையின் இருபுறமும் நிலபுலன் வளைத்துப் போட்டிருந்தார். அவருக்கும் ஒருநாள் மரணம் வந்தது.
அவரது குடும்பத்தினர் வெகு தடபுடலாக சாவு எடுத்ததோடு, கோயில் போல சிறு அமைப்பை எழுப்பி, சொந்தத் தோட்டத்தின் முகப்பிலேயே புதைத்தனர். அவரது மனைவி இருந்த வரை, வாரிசுகளும் உறவுகளும் கூடி அவரது நினைவு நாளை ஆடம்பரமாகக் கொண்டாடினர்.
அப்புறம் பாகப்பிரிவினை, மனஸ்தாபம், சொத்துத் தகராறு எல்லாமே கிரமப்படி நடந்தேறியது. மூலைக்கு ஒன்றாக முகம் முறித்துக் கொண்டனர்.
பூபதியின் சமாதி? நந்தவனம் போல இருந்த அந்த இடம், மெள்ள களை இழந்து, முட்புதர்கள் மண்டி பாழடைந்து கிடக்கிறது. அந்த இடத்தைக் கடக்கும்போதேல்லாம்,‘ஆல் தோட்ட பூபதி நானடா!’ என்ற பாட்டுதான் சம்பந்தா சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வரும்! அவ்வளவுதான் மனித வாழ்க்கை!
சமீப காலமாக சில, ‘விபரீத பாச’ வீடியோக்களைக் காண நேர்கிறது கண்மணீஸ்! அதை உங்களுடன் பகிர்வதில் என்னவோ ஒரு திருப்தி!
பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெரிய தனவந்தர் தமது புது வீட்டுக்கு புதுமனைப் புகுவிழா நடத்தினார். அண்மையில் விபத்தில் இறந்துபோன தமது மனைவியைப் போன்றே ஃபைபர் உருவத்தைச் செய்வித்து, மிக விலையுயர்ந்த பட்டுப்புடைவை, அசல் நகைகள் அணிவித்து சோஃபாவில் அமர்த்தியிருந்தார்.
கிருகப்பிரவேசத்துக்கு வந்தவர்களுக்கு இது, ‘ஷாக்’ ஆக இருந்திருக்குமோ, ‘புதுமை’யாக இருந்திருக்குமோ யான் அறியேன் பராபரமே! ஆனால், அதற்குப் பிறகு அந்த உருவம் உள்ள அறையைத் தற்செயலாகக் கடப்பவர் யாருக்குமே அது ஒருவித, ‘திக்’ உணர்ச்சியைத் தரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
அதேபோல இன்னொரு இளைஞர், தனது விதவைத் தாயின் கண்களைக் கட்டி அழைத்து வருகிறார். கட்டை நீக்கினால், எதிரே அவரது கணவர் போலவே தத்ரூபமாக வார்க்கப்பட்ட ஆள் உயரச் சிலை அமர்ந்துள்ளது. கணவனை இழந்த அந்தப் பெண்மணியோ, கலவை உணர்ச்சிகளால் பீடிக்கப்பட்டு திகைத்து நிற்கிறார். “அம்மா, உனக்கு பர்த் டே கிஃப்ட் இது!” என்கிறார் பாசக்காரப் பிள்ளை.
இதெல்லாம் ஒருவித அதீத அன்பின் வெளிப்பாடுதான். ஆனால், சற்று கேலிக் கூத்தாகவும் ஆகிவிடக் கூடுமில்லையா? சென்டிமென்ட் தேவைதான். ஆனால், அது சென்ஸிபிளாகவும் இருக்கணும். சம்பந்தப்பட்ட நபர் இருக்கும் வரை, இந்த பொம்மைகளைப் பாதுகாப்பார்கள். அப்புறம், ‘ஹௌ டு டிஸ்போஸ்?’ என்று யோசிப்பார்கள். எனவே, உங்கள் பெற்றோரை, வாழ்க்கைத் துணையை உருவச் சிலைகளாகச் செய்து பணத்தை விரயம் செய்யாமல், அவர் பெயரில் சிறிய அளவில் அறக்கட்டளை ஆரம்பித்து, நல்ல காரியங்கள் செய்யலாம். அது அவரது பெயரைக் காலத்துக்கும் நினைவில் வைக்க உதவும்.
உருவச் சிலைக்குள்ளும், ஆடம்பர சமாதிக்குள்ளும் நீங்கள் இருப்பதாக நம்பும் நபரும் அதைத்தான் விரும்புவார்… ஆமாம்தானே?!
நம் கு டும்பத்தில் உள்ளவர் இப்புவியை விட்டு இறந
பாசத்துடன் என்றும் நீடித்து நிலையாக மனதில் கட்டுண்டு இருக்க அனு ஷா
மேடத்தின் ஆ லாே சனை எற்றுக் காெ ள்ளலாம்.
து.சேரன் ;
ஆலங்குளம் .
நம் கு டும்பத்தில் உள்ளவர் இப்புவியை விட்டு மறைந்து விட்டால் அவரின் மீது ள்ள பாசம் தாெ டர்ந்து
நீடித்து நிலையாக தற் பாே தும் மனதில் கட்டுண்டு இருக்க அனு ஷா
மேடத்தின் ஆ லாே சனை எற்றுக் காெ ள்ளலாம்.
து.சேரன் ;
ஆலங்குளம் .
மிக அருமையான வார்த்தைகள் மேடம் ..மறைந்தவர்களிடம் உள்ள அன்பை, வெளிப்படுத்த எத்தனையோ நல்ல காரியங்கள் அவர்கள் பெயரில் செய்யலாம். அதைவிடுத்து இது போன்ற விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டியவையே.
தி.வள்ளி
மனதில் அவர்களை தெய்வமாக வைத்து பூஜித்தாலே போதுமே