0,00 INR

No products in the cart.

குரு அருள் திரு அருள்!

-நளினி சம்பத்குமார்
ஓவியம்: வேதா

 

பகுதி-8

குருவின் வாக்கே வாழ்க்கையாய்

ஸரீரம் ஸூரூபம் ததா வா கலத்ரம்

யஸஸ்சாரு சித்ரம் தநம் மேருதுல்யம்

மநஸ்சேந லக்நம் குரோரங்க் ரிபத்மே

தத கிம் தத கிம் தத கிம் தத கிம்

ஆதி சங்கர பகவத் பாதாள் அருளிய ‘குரு அஷ்டகத்தில்’ வரும்

ஸ்லோகம் இது. அழகான சரீரம், அதி அற்புதமான அழகான மனைவி, எட்டு திக்கிலும் பரவிய  புகழ், மேரு மலை போல குவிந்துகிடக்கும் செல்வம் எல்லாம் இருந்தும் குருவின் திருவடி தாமரையை மனம்  நினைக்காவிட்டால், இதனால் என்ன பயன்? இதனால் என்ன பயன்? என நான்கு முறை திரும்ப திரும்ப கேட்டு இதனாலெல்லாம் ஒரு பயனும் இல்லை என்று அருள்கிறார் ஆதி சங்கரர். உண்மைதானே. உலகில் அனைத்து பொருட்களுமே ஒருவரிடம் பொதிந்து கிடந்தாலும் குருவின் திருவருள் என்ற ஒன்று இல்லை என்றால், அந்தப் பொருட்களால் ஒரு பயனும் கிடைக்காது. உலகியல் பொருட்கள் ஒன்றுமே ஒருவனிடம் இல்லை என்றாலும் குருவின் திருவருள் என்பது பரிபூரணமாக ஒருவனிடம் நிறைந்திருக்கும்போது அங்கே அத்தனை பொருட்களும் இருந்தாலும் கிடைக்காத நிம்மதியும் சந்தோஷமும் தானாகவே கிடைத்துவிடும்தானே.

குரு பக்தி மற்றும் குரு அருளின் சிறப்பை பற்றி கூறும் மகாபாரத கதை ஒன்று உண்டு.  உபமன்யு என்ற ஒரு அபார குரு பக்தி நிரம்பிய சீடன் அயோதெளமியர் என்ற குருவிடம் குருகுல வாசம் செய்துவந்தான்.  குரு என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செய்வது என்பதில் மிக தீர்மானமாக இருந்து.

ன் வாழ்க்கையை நடத்திவந்தான் உபமன்யு. குருவின் குடிலில் இருந்த மாடுகளை மேய்க்க அழைத்து செல்வது என்பதுதான் அவனுக்கு படிப்பறிவோடு கொடுக்கப்பட்ட பணி. அந்த பணியைச் சிறப்பாக செய்துவந்தான் உபமன்யு. அக்கால வழக்கப்படி, தாம் செல்லும் இடங்களில் தமக்கு கிடைக்கும் உணவைத்தான் சீடர்கள் உண்பார்கள். அப்படியேதான் உபமன்யுவும் சாப்பிட்டுவந்தான். மற்ற சீடர்களிடம் இல்லாத ஒரு தனி தேஜஸ், உபமன்யுவின் முகத்தில் இருப்பதைக் கண்ட அவனது குரு, உபமன்யுவை அழைத்து அவனது முகத்துக்கான அந்த தேஜஸின் ரகசியத்தையும், எப்பொழுதும் எப்படி அவன் மட்டும் சோர்வேதும் இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்கிறான் என்றும் கேட்டார். அதற்கு உபமன்யு, “குருவே நான் வழியில் போகும் இடங்களிலெல்லாம் அவரவர் விரும்பி கொடுக்கும் உணவை சாப்பிட்டு விடுவேன். அதனால் என் முகமும் மனமும் உடலும் சோர்வே அடையாமல் இருக்கிறது” என்றான். அவனை சோதிக்க நினைத்த குரு, “ சரி இது வரை நடந்தது போகட்டும். இனி என்னிடம் கேட்காமல் நீ உணவை உண்ணக் கூடாது. அதை போலவே உனக்குக் கிடைக்கும் முதல் உணவை எனக்குத் தந்து விட வேண்டும்” என்று கூறினார். அதன்படியே உபமன்யுவும் தனக்குத் தினம் கிடைக்கும் முதல் உணவை தன் குருவுக்கு கொடுத்துவிட்டு, அவர் மிச்சம் தந்தால் சாப்பிடலாம் என காத்திருப்பான். குருவோ அவன் கொண்டு வந்த உணவை உண்டு விட்டு, அவனுக்கு எதுவும் தராமல் இருந்து வந்தார்.

சில நாட்கள் கழித்து உபமன்யுவின் உடல் பலமோ மன பலமோ சற்றும் குறையாமல் இருப்பதைக் கண்ணுற்ற குரு, இவனுக்கு நாம் சாப்பிட ஏதுமே தராமல் இருக்கும்போதும் இவன் எப்படி பலவீனம் அடையாமல் பலம் பொருந்தியவனாகவே இருக்கிறான் என்று எண்ணி, அவனை அழைத்து அவனது உடல் பலத்திற்கான காரணத்தை கேட்டார். “குருவே நீங்கள் சொன்னது போலவே நான் ஒவ்வொரு முறையும் முதலில் கிடைக்கும் உணவை உங்களுக்குக் கொடுத்துவிடுவேன். பிறகு நான் மீண்டும்  மற்றவர்களது இல்லங்களுக்கு சென்று அங்கே அவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிடுவேன்” என்று சொன்னான். “ஓ உபமன்யு, நீ செய்வது தவறு. ஆச்ரமத்திலிருந்து நீ இரண்டு முறை சென்று உணவை மற்றவர்களிடமிருந்து கேட்டு பெறுவதால், மற்றவர்களுக்கு கிடைக்கும் உணவு என்பது கிடைக்காமலேயே போய்விடும் அல்லவா? ஆச்ரம தர்மத்திற்கு விரோதமான செயலை அல்லவா  நீ செய்துவருகிறாய்? இனி அப்படி செய்ய கூடாது” என்று உத்தரவிட்டார். உபமன்யுவும் குருவின் வாக்குபடியே நடந்து வந்தான். உபமன்யு எப்பவும்போல உற்சாகத்துடன் இருப்பதை பார்த்து குரு, அவனுக்கு நானும் உணவிடுவதில்லை. யாரிடமும் உணவை கேட்கவும்கூடாது என்றும் சொல்லிவிட்டேன். பின் எப்படி அவன் உற்சாகமாக இருக்கிறான் என்று அறிய அவனிடமே அதைப்பற்றி கேட்டு விட்டார். அதற்கு உபமன்யு, “குருவே நீங்கள் சொன்னபடிதான் நான் செய்கிறேன். பசு மாடுகளை மேய்க்க அழைத்து செல்லும்போது அதனிடமிருந்து பாலை மட்டும்தான் பருகுகிறேன்” என்றான். அதற்கு குருவோ, “உபமன்யு, அந்த பசுக்கள் எல்லாம் எனக்கு சொந்தமானவை. என்னிடம் கேட்காமல் நீ அதை பருகக் கூடாது” என்றார். சரி “குருவே இனி அந்த பசு மாடுகள் தரும் பாலை நான் இனி பருக மாட்டேன்” என்றான் உபமன்யு.

யாரும் உபமன்யுவுக்கு உணவு கொடுப்பதில்லை. பசு மாட்டிலிருந்து வரும் பாலை கூட அவன் குடிப்பதில்லை. இப்போது அவன் மிகவும் பலவீனம் அடைந்திருப்பான் என்று நினைத்திருந்த குருவுக்கு உபமன்யுவின் திடகாத்திர தேகம் திகைப்பை தந்தது. எப்படி இது சாத்தியமானது என குரு கேட்க அதற்கு உபமன்யுவோ, “பசு மாட்டிலிருந்து பாலைத்தான் பருகக் கூடாது என்று சொன்னீர்கள் அல்லவா குருவே, நான் கன்று குட்டிகள் தன் தாயிடம் பாலை குடித்துவிட்டு சிந்தும் நுரையைத்தான் குடித்து உயிர் வாழ்கிறேன்” என்றான்.  “மகா பாப செயலைச் செய்துகொண்டிருக்கிறாய் உபமன்யு. இனி அப்படி கன்று குட்டி சிந்தும் நுரையைச் சாப்பிடாதே” என குரு கூற அப்படியே அதை பின்பற்றினான் உபமன்யு.

நாட்கள் மெல்ல நகர்ந்தன. பசியும் தாகமும் உபமன்யுவை வாட்டி எடுத்தது. ஆனால், குருவுக்கு கொடுத்த வாக்குறுதியை எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது என்ற மனோ வைராக்கியத்தால் எதுவுமே சாப்பிடாமல் நாட்களை கஷ்டப்பட்டு கடத்தி வந்த உபமன்யுவால் ஒரு கட்டத்திற்கு மேல் பசுக்களை சரிவர மேய்க்க முடியாமல் போனது. இந்த பசுக்களை மேய்ப்பதற்காகவாவது தான் உயிர் வாழவேண்டுமே என்ற உந்துதலில், காடுகளில் இருந்த எருக்க இலைகளைப் பறித்து சாப்பிட ஆரம்பித்தான். பார்வையை இழக்க செய்யும் எருக்க இலைகள், உபமன்யுவின் பார்வையை பறித்துக்கொண்டது. பார்வையற்ற உபமன்யு எங்கே செல்கிறோம்? எங்கே இருக்கிறோம்? என்பதைகூட அறிந்து கொள்ள முடியாத ஒரு நிலையில், பாழுங் கிணற்றில் விழுந்துவிட்டான். தினம் உபமன்யுவுடன் மாலையில் ஆஸ்ரமத்திற்கு வரும் மாடுகள், அன்று உபமன்யு இல்லாமல் ஆஸ்ரமத்திற்கு வருவதைப் பார்த்த குரு அவனைத் தேடி சென்றார். குருவும் அவரது சீடர்களும் உபமன்யுவை தேடி காட்டுக்குச் சென்றனர். எங்கே தேடியும் உபமன்யுவை காணமுடியவில்லை. நாம் அவனுக்கு உணவும் அளிக்காமல், கிடைத்த உணவையும் உண்ணக் கூடாது என அவனிடம் சொன்னதால்தான் உபமன்யு கோபித்துக்கொண்டு எங்கோ சென்றுவிட்டான் போலும் என நினைத்துகொண்டே  அந்த குரு  “உபமன்யு… உபமன்யு” என்று உரக்க குரல் கொடுக்க ஆரம்பித்தார். கிணற்றுக்குள் மயக்கத்தில் இருந்த உபமன்யு, தன் குருவின் குரலைக் கேட்டதுமே பேச கூட திராணி இல்லாமல், “குருவே நான் இங்கே இருக்கிறேன்” என்றான் மென்மையாக. அவன் குரல் வந்த திக்கில் வந்து உபமன்யுவை கண்டுகொண்ட குரு அவனை கிணற்றிலிருந்து வெளியேற்றி நடந்தவைகளை கேட்டறிந்துகொண்டார். “உபமன்யு இதோ உன் பார்வை கிடைக்க ஒரு உபாயம் சொல்கிறேன். அதை செய். தேவலோக அஸ்வினி குமாரர்களை நோக்கி பிரார்த்தனை செய். அவர்கள் உனக்கு உதவுவார்கள்” என்றார்.

குருவின் வார்த்தையின்படியே உபமன்யுவும் பிரார்த்தனை செய்ய, அவன் முன் தோன்றிய அஸ்வினி குமாரர்கள், அவன் நிலை அறிந்து உபமன்யுவிடம் இனிப்பு ஒன்றை கொடுத்தனர். “உபமன்யு, இதோ உன் பார்வையைத் திரும்ப வரவழைக்கும் இனிப்பைச் சாப்பிடு” என்றனர். அதற்கு உபமன்யுவோ, “என் குரு அனுமதிக்காமல் நான் எதையும் சாப்பிட மாட்டேன். அவருக்கு முதலில் இதைக் கொடுத்துவிட்டு, அவர் இதை நான் சாப்பிடலாம் என்று அனுமதித்தால் மட்டுமே நான் சாப்பிடுவேன்” என்றான். உபமன்யுவின் குரு பக்தியில் மகிழ்ந்துபோன அஸ்வினி குமாரர்கள், உபமன்யுவிற்கு பார்வையை பரிசாக தந்தனர். குரு அயோத்தாம்யரோ உபமன்யுவிற்கு அபார ஞாபக சக்தியையும், வேதங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் அவன் படிக்கும் முன்பே அவன் புத்தியில் வந்து அமரும்படி அருளினார்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

மூக்குத்தியின் கதை!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!  நாயக்கரின் ஆண்டாள் பக்தி மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை...

ஆதாயம் தேடும் மனிதர்கள்!

3
சிறுகதை - கே. அம்புஜவல்லி, புத்தூர் ஓவியம்: சேகர் சி. ஏ.  படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி...

மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!

0
  காந்திஜியின் தபால் தலைகள் அரிதாகப் போற்றப்படுகிறது. பத்து ரூபாய்  மதிப்பிலான தபால் தலைகள் பதினெட்டு  மட்டுமே  தற்போது  உள்ளதாக கூறப்படுகிறது. மகாத்மாவை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட  தபால் தலைகளும், 200...

அணை கட்டும் பிராணி!

இயற்கை அதிசயம் வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன் ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன்...

ஆழ்வார்கள்!

0
பகுதி -11 - ரேவதி பாலு ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான்.  ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம்...