0,00 INR

No products in the cart.

பெரியாழ்வார்!

 பகுதி – 10
-ரேவதி பாலு, சென்னை

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர் குல தம்பதி முகுந்தாசார்யாருக்கும் பதுமையாருக்கும் பிறந்தார்.  இவர்   திருமாலின் வாகனமாகிய கருடனின் அம்சமாக பிறந்தவர்.  ஸ்ரீ வில்லிபுத்தூரில் வடபத்ரசாயி என்று அழைக்கப்படும் பெருமாளுக்கு      மிகச் சிறந்த முறையில் தொண்டாற்றி வந்தார். தன் வீட்டில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் பூக்கும் மலைகளை பூமாலையாகத் தொடுத்து தன் பாமாலைகளுடன் அவற்றையும் பெருமாளுக்கு தினமும் சமர்ப்பித்து வந்தார்.

அவர் வாழ்ந்த காலத்தில் மதுரையை வல்லப தேவ பாண்டியன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்.  அவனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.  எந்த மதத்தைப் பின்பற்றினால் மறுமையில் மோட்சம் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள விரும்பினான்.  அதற்கான சரியான பதிலை சொல்பவருக்கு பொற்கிழி பரிசு என்றும் அறிவித்தான்.  ஆனால் அந்த பொற்கிழி தன் கையால் வழங்கப்படமாட்டாது என்றும் அது மந்திரத்தால் அந்தரத்தில் தொங்க விடப்பட்டிருக்கும் என்றும் யாருடைய வாதம் இறைவனுக்கே ஏற்புடையாகிறதோ, அப்போது அந்த பொற்கிழி தானாகவே கழன்று கீழிறங்கி, விளக்கம் சொன்னவர் மடியில் சென்று விழும் என்றும் அறிவித்தான்.  இதை அறிவிப்பைக் கேட்ட பல்வேறு மதங்களின் பிரதிநிதிகளும் வந்து மன்னனுக்கு தத்தம் மதத்தைப் பற்றி எடுத்துரைத்தார்கள்.

பெருமாள் விஷ்ணுசித்தரின் கனவில் தோன்றி அந்த வாதத்தில் கலந்து கொண்டு வல்லப தேவ பாண்டியனின் ஐயத்தை தீர்த்து வைக்குமாறு கூறினார்.  அரங்கனின் கட்டளையை ஏற்று விஷ்ணுசித்தர் மதுரை சென்று வைணவத்தின் பெருமைகளை எடுத்துரைத்து மோட்சத்தை அருளவல்லது வைணவமே என்று விளக்கினார்.  அதுவரை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பொற்கிழி, தானாகக் கழன்று கீழிறங்கி விஷ்ணுசித்தரின் மடி மீது விழுந்தது.

இதைக் கண்டு மகிழ்ந்த மன்னன் விஷ்ணுசித்தரைப் பாராட்டி ‘பட்டர்பிரான்’ என்ற விருதை அவருக்கு வழங்கினான்.  பின்னர் அவரை யானை மேலேற்றி ‘வேதப்பயன் கொள்ள வல்ல மெய்நாவன் வந்தான்’ என்று விருது ஊதச் செய்து தானும் தன் பரிவாரங்களும் உடன் வர நகர்வலம் வந்தான்.  மக்கள் இந்த கோலாகல ஊர்வலத்தைக் கண்டு மகிழ்ந்து உடன் சென்றார்கள்.   தன்னுடைய பக்தனுக்கு நடக்கும் இந்த கோலாகல கொண்டாட்டத்தைக் காண விரும்பி  ஸ்ரீமன் நாராயணன் கருடன் மீதேறி பிராட்டியருடன் வானில்  உலா வந்து காட்சி தந்தார். இந்தக் காட்சியை எல்லோரும் கண்டு உவகையுற்றார்கள்.

விஷ்ணுசித்தர் வானில் திருவுலா வந்த எம்பெருமானின் கண்ணுக்கினிய பேரழகைக் கண்டு மனமகிழ்ந்து போனார். ஆனாலும் இந்த கலியுகத்தில் இப்படி திருமால் எல்லோருக்கும் தன் அழகிய திருமுகத்தைக் காட்டுகிறாரே அவருக்கு கண்ணேறு பட்டுவிடுமோ என அஞ்சி, ‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்’ என வாழ்த்திப் பாடுகிறார்.

திருப்பல்லாண்டு பாடல்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்வி திருக்காப்பு!

என்று தொடங்குகிறது இந்தப் பாட்டு.  திருமாலுக்கே திருஷ்டி பட்டு விடும் என்று அஞ்சி பல்லாண்டு பல்லாண்டு என்று பாட்டுப் பாடிய இந்த விஷ்ணுசித்தருடைய மனது ரொம்ப பெரிது. ஆதலால் ஆழ்வார்களில் இவர் பெரியவர் என்னும் பொருளில் பெரியாழ்வார் என்று அழைக்கப்பட்டார்.

கடவுளுக்கே கண்ணேறு கழிக்க வந்த பெரியாழ்வாரின் பாடல் நாலாயிர திவ்யபிரபந்தத்தில் முதல் பாடலாகத் தொகுக்கப்படுகிறது.  மேலும் சாற்று மறை என்னும் வைணவ தினசரி வழிபாட்டின் தொடக்கம் மற்றும் முடிவின் போதும் இந்தப் பாடல் கட்டாயம் பாடப்படுகிறது. வைணவத் திருக்கோவில்களின் திருவிழாக்களில் சுவாமி புறப்பாடு மற்றும் புறப்பாடு முடிந்து திருக்கோவில் திரும்பும்போதும் இன்றளவும் கூட பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பாடப்பட்ட பின்னரே சுவாமியை திருக்கோவிலுக்குள் எழுந்தருள செய்கின்றனர்.  பெரியாழ்வா¬ரைப் பார்த்து மிகுந்த திருப்தியடைந்த திருமால் பூதேவியை பூலோகத்தில் அவர் மகளாகப் பிறக்க ஆணையிடுகிறார். “உனக்குத் தகுந்த தந்தை கிடைத்து விட்டார். நீ பூமியில் அவதாரம் எடுக்கலாம்!”. என்று அறிவிக்கிறார்.

ரு நாள்  பெரியாழ்வார் தன்னுடைய நந்தவனத்தில்  துளசி தளங்களைப் பறித்துக் கொண்டிருந்தபோது செடியின் அடியில் ஒரு பச்சிளங்குழந்தை  இருப்பதைப் பார்த்து திகைத்துப் போனார். இதுவும் பெருமாளின் ஒரு லீலையே என்றெண்ணி அந்தக் குழந்தையை அன்போடு தூக்கியபோது அது அவரைப் பார்த்து மலர்ந்து சிரித்தது. அன்று  ஆடி மாச பூர நட்சத்திரம்.  பூமியிலிருந்து கிடைத்த குழந்தையாதலால் அவள் பூமி பிராட்டியின் அவதாரமே என்று நினைத்து அவர் குழந்தையை உச்சி முகர்ந்து கோதை என்று பெயரிட்டு தன் மகளாகவே வளர்க்க ஆரம்பித்தார்.

சிறுவயது முதலே தம் தந்தையாரான பெரியாழ்வாரிடம் இருந்து கவிச் சிறப்பையும், பக்தி சிறப்பையும் கோதை கற்றுத் தேர்ந்தார். இதனால் கோதை இளம்வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். அழகுத் தமிழால் அரங்கப் பெருமானை ஆண்டதால் ‘ஆண்டாள்’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்றாள் கோதை.  கிருஷ்ணனின் சிறுவயது லீலைகளைப் பற்றி பெரியாழ்வார் கதைகளாகச் சொன்னது அவளுடைய உள்ளத்தில் ஆழப் பதிந்து விட்டது.  எந்நேரமும் குழந்தை கிருஷ்ணனுடன் தான் விளையாடுவது போல ஒரு பிரமையிலேயே அவள் சிறு பிராயம் கழிந்தது. பிறகு மணவயது வந்தபோது ‘மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய்…’ என்று உரைத்து தன் மணவாளன் அரங்கனே என்று தந்தைக்கு உணர்த்தினாள். அவ்வாறே ஸ்ரீரங்கம் ரங்கமன்னார் சன்னதிக்கு மணக்கோலத்தில் சென்று அவருடன் சன்னதியில் ஐக்கியமானாள்.

கண்ணனைப் பிள்ளையாக பாவித்து பெரியாழ்வார் பாடிய பாடல்கள் பிற்காலத்தில் பிள்ளைத் தமிழ் என்னும் சிற்றிலக்கியம் தோன்ற முன்னோடியாக அமைந்துள்ளன. கண்ணனை மானசீகமாக தொட்டிலில் இட்டு ஒரு தாயார் போல அவர் பாடிய பாடல்,

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கடி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்
பேணி உனக்கு பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே! தாலேலோ!
வையம் அளந்தானே! தாலேலோ!

இன்றும் வைணவ பெருமக்கள் இரவு உறங்கப் போவதற்கு முன் பெரியாழ்வார் அருளிச் செய்த பிரசித்தி பெற்றப் பாடலான

எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு
ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே!

என்னும் பாடலைப் பாடி ‘என் கடைசிக் காலத்தில் முதுமையால் நான் நலிவுற்று இருக்கும்போது உன்னை நினைக்க முடியுமா என்று தெரியாது.  ஆகையால் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமானே! அந்த காலத்திற்காக இன்றே, இப்போதே உன்னை நினைத்து பிரார்த்திக்கிறேன் பெருமாளே!’  என்று மனமுருக பிரார்த்தித்து விட்டு உறங்கச் செல்வார்கள்.

வர் 473 பாசுரங்கள் இயற்றியிருக்கிறார்.  இவர் பாடிய ‘பெரியாழ்வார் திருவாய்மொழி’ பாடல்கள் பிரசித்தி பெற்றவை.  பெரியாழ்வார் தனியாக 2 கோவில்களையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 17 கோவில்களையும் மங்களாசாஸனம் செய்துள்ளார்.   தன் பிரிய மகள் கோதை அரங்க னையடைந்ததும் அவள் பிரிவால் மிகவும் வாடினார் பெரியாழ்வார்.    தன் கடைசி நாள் வரை  பூக்களைத் தொடுத்து வடபத்ரசாயி கோவிலுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து வந்த பெரியாழ்வார் கடைசியில் அந்த ஊரிலேயே சித்தியடைந்து அரங்கனின் திருவடிகளையடைந்தார்.

ரேவதி பாலு
ரேவதி பாலு, பி.எஸ். என். எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முப்பத்தைந்து வருடங்களாக எழுதி வருகிறார். தமிழில் வெளியாகும் வார, மாதப் பத்திரிகைகளில் இவருடைய படைப்புகள் வெளியாகி வருகின்றன. சிறுகதை, குறுநாவல், நாடகம் என்று பத்திரிகைகள் நடத்தும் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றவர். இலக்கிய சிந்தனை அமைப்பு நடத்தும் மாதாந்திர சிறந்த சிறுகதைக்கான பரிசு இருமுறை கிடைத்திருக்கிறது. சென்னை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இவருடைய நாடகங்கள் ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன;. இதுவரை ஏழு சிறுகதை தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிக கட்டுரை தொகுப்பு நூல்கள் மற்றும் ஒரு சமூக கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகி இருக்கிறது.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

போற்றி செல்வனும் போளியும்!

2
-ஆர். மீனலதா, மும்பை ஓவியம்: பிரபுராம் ஆவணி அவிட்டம் 11.08.22 “பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?” லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து, “என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!” “நோ குழைசல்!...

ஊறுகாய் ரெசிபிஸ்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி முள்ளங்கி ஊறுகாய் தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...

ஜெயித்திடடா!

0
கவிதை! - ஜி. பாபு, திருச்சி வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது வழங்கும் பாடங்கள் அதிகமடா! வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது வளமாவது உன் கையில் இருக்குதடா! சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா! எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும் இன்பத்தை...

நன்மைகள் அறிவோம்!

0
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும். நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான்...

கோயில் யானை வருகுது…

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம் - ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி   காந்திமதியின் காலுக்குச் செருப்பு! திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர்...